ஜனநாயகத்தில் குடிமக்கள் தங்கள் விரும்புகின்ற ஓர் அரசை தேர்ந்தெடுக்க உரிமை உள்ளது. அப்படி தேர்ந்தெடுக்கப்படும் அரசானது, அரசியலமைப்பின் அடிப்படை நெறிகளான சுதந்திரம், சகோதரத்துவம்,நீதி போன்றவைகளை உயர்த்திப்பிடிக்க வேண்டும். பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கிறது என்பதற்காக ஆளுகின்ற கட்சி, இத்தைய நெறிமுறைகளுக்கு விரோதமாக சட்டம் இயற்ற முடியாது. இதற்கு சமீபத்திய உதாரணம் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலாக்கப்படும் என்ற அறிவிப்பாகும். பாகுபாடான இந்த சட்டத்தை எதிர்த்து 2021 ஆண்டு முழுமையும், இந்தியாவெங்கும் போராட்டம் நடந்தது.
தற்போதைய பாஜக அரசானது இரண்டு முறை அதிகாரத்திற்கு தேந்தெடுக்கப்பட்டாலும், அரசியல் அமைப்பு நெறிமுறைகளை கடைபிடிப்பதில்லை. கடந்த பத்து ஆண்டுகளாக அதன் நடவடிக்கைகள் அதை தெரிவிக்கின்றன.
அவர்கள் நடவடிக்கைகள், எல்லாவிதமான மாற்றுக்குரலையும் அமைதியாக்கி விட்டன. ஊடகங்களை ஒட்டுமொத்தமாக தனக்கானதாக்கி விட்டனர். எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை வெளியேற்றுகின்றனர். அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத் துறை போன்ற அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை மிரட்டியோ, ஆசைகாட்டியோ, பெருந்தொகை கொடுத்தோ பாஜக தனது கட்சிக்கு இழுத்து, அதன் மூலமாக எதிர்கட்சிகள் ஆட்சி செய்யும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை மாற்றுகின்றனர். பாஜகவிற்கு எதிரான இத்தகைய குற்றச்சாட்டுகளை அமலாக்கத்துறையோ, மத்திய புலனாய்வுத் துறையோ விசாரிப்பதில்லை.
நீதிமன்றங்கள், தேர்தல் ஆணையம், தலைமை கணக்குத் தணிக்கையாளர் போன்ற சுயேச்சையான அரசமைப்பு நிறுவனங்கள் மீது தாக்கம் செலுத்தி, அவர்கள் செய்யும் தவறுகள் வெளியே வராமல் பார்த்துக்கொள்கிறார்கள். பாஜக அரசாங்கம் கொண்டு வந்த சட்டங்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்குகள் காலவரையறையின்றி கிடப்பில் இருக்கின்றன. தேர்தல் பத்திர வழக்கில் சமீபத்தில் உச்சநீதிமன்றம் பாஜகவிற்கு எதிராக வழங்கியுள்ள தீர்ப்பு பாராட்டப்படுகிறது. பல வழக்குகளில் இதற்கு மட்டும்தான் தீர்ப்பு வந்துள்ளது. பலவிதமான பொருளாதார நடவடிக்கைகள், கேள்வி ஏதுமின்றி மறைக்கப்படுகின்றன. ராம ஜென்ம பூமி வழக்கு, குஜராத் படுகொலை தொடர்பான வழக்குகள், அரசியல் சாசன 370 பிரிவு வழக்கு, நீதிபதி லோயா மரணம், ரபேல் விமான ஊழல் வழக்கு போன்றவைகளில் அரசாங்கத்தின் நிலைபாடுகளை உச்சநீதிமன்றம் அப்படியே ஏற்றுக்கொண்டுள்ளது.
உச்சநீதிமன்றம் கொடுத்துள்ள தீர்ப்புகளுக்கு மாறாக, அவர்களுக்கு ஏற்றபடி சட்டங்களை போட்டுவருகின்றனர். அவர்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ளாத அலுவலர்களை வெளியேற்றுகிறார்கள்; வேட்டையாடுகிறார்கள்.
அரசாங்க புள்ளிவிபரங்கள் வெளிவராதால், அவர்களின் மிகையான பரப்புரைகளை எதிர்கொள்ள முடிவதில்லை. நிதி ஆயோகின் தலைவர் எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல்இன்றியும், “இந்தியாவில் வறுமை 5 % குறைந்துள்ளது” என்கிறார். இத்தகைய காரணங்களால் பாஜகாவால் ஆளப்படும் ஒன்றிய அரசினாலும், பாஜக, ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களாலும் இந்தியாவில் ஜனநாயகம் வீழ்ச்சி அடைந்துள்ளது.
புது தில்லியில், மார்ச்சு 16,17 தேதிகளில் நடைபெறும் ஏஐடியுசியின் நிர்வாகக்குழுவானது, இந்தியாவில் ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டுமானால், வரவிருக்கிற தேர்தலில் பாஜக தோற்கடிக்கப்பட வேண்டும் என்கிறது.
ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை குறைந்தபட்ச ஊதிய சட்டப்படி குறைந்தபட்ச ஊதியமானது திருத்தம் செய்யப்பட வேண்டும். இதனால் தோட்டம், சுரங்கம், கட்டுமானம், விவசாயம், கைத்தொழில், வீட்டு வேலை போன்ற தொழில்களில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள் பலன் பெறுவார்கள். இந்த ஊதியம் குறித்து கெடுவாய்ப்பாக விவாதங்கள் நடைபெறுவதில்லை. 15-வது இந்திய தொழிலாளர் மாநாட்டு முடிவின்படி அறிவியல் பூர்வமான வகையில் குறைந்தபட்சம் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்யவேண்டும். இதனை உச்ச நீதிமன்றமும் ரெப்டகாஸ் பிரெட் வழக்கிலும் (1992) , உனிச்சோயி & மற்றவர்கள் எதிர் கேரள அரசு வழக்கிலும் ( Unichoyi & others vs The state of Kerala) (1962) உறுதிப்படுத்தியுள்ளது. குறைந்தபட்ச ஊதியம் தேவையின் அடிப்படையில் ஆனதாகும். உணவு, உடை, இருப்பிடம், போக்குவரத்து, மருத்துவம், கல்வி போன்ற செலவினங்களோடு, திருமணம், திருவிழாக்கள் உள்ளிட்ட சமூக கலாச்சார நிகழ்வுகளுக்காகும் செலவுகளையும் சேர்த்து ஊதியமானது கணக்கிடப்பட வேண்டும். கீழ்கண்ட காரணிகளின் அடிப்படையில் குறைந்தபட்ச ஊதியம் கணக்கிடப்பட வேண்டும் ரெப்டகாஸ் வழக்கின் அடிப்படையில் வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டுள்ளன:
மூன்று நுகர்வோரின் செலவுகள் ஒரு சம்பளதாரருக்கு கணக்கிடப்பட வேண்டும்
ஒரு சராசரி மனிதனுக்கு நாளொன்றுக்கு 2700 கேலரி சத்து தேவைப்படும் உணவு தேவை என டாக்டர். அக்ராய்டு பரிந்துரைத்துள்ளார்.
ஒரு ஆண்டுக்கு 72 கஜம் துணி
அரசாங்க தொழில் பகுதியில் உள்ள வீட்டு வசதிப்படி வாடகை
ஒட்டுமொத்த சம்பளத்தில் 20% எரிபொருள், விளக்கு உள்ளிட்ட இதர செலவின வகைகளுக்கு
குழந்தைகள் கல்வி, மருத்துவம், குறைந்த பட்ச பொழுபோக்கு, முதுமைக்கால பாதுகாப்பு, திருமணம் போன்றவைகள் குறைந்த பட்ச ஊதியத்தில் 25 % ஆக கணக்கிடப்படும்.
இதுதான் குறைந்த பட்ச ஊதியத்தை நிர்ணயிக்க ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையாகும். ஆனால் மத்திய, மாநில அரசாங்கங்கள் தன்னிச்சையாக ஊதியத்தை திருத்துகின்றன. மத்திய மாநில அரசுகள் அதனுடைய நான்காம் பிரிவு ஊழியர்களுக்கு ரெப்டகாஸ் வழக்கு அடிப்படையில் நியாயமாக ஊதியத்தை நிர்ணயம் செய்கின்றன. ஆனால் இத்தகைய நடைமுறையை தனியார் துறை தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் நிர்ணயிக்கும்போது கடைபிடிப்பதில்லை. இதனால் அரசாங்கம் பெருநிறுவனங்களின் நலனைப் பாதுகாக்க எடுக்கும் பாசங்குத்தனமான நடவடிக்கை அம்பலமாகிறது.
குறைந்த பட்ச ஊதியம் என்பது போராட்டங்களின்போது பேசப்படும் முழக்கம் அல்ல என்று ஏஐடியுசி கருதுகிறது. அறிவியல்பூர்வமாக குறைந்தபடச ஊதியத்தை நிர்ணயம் செய்யும் வகையில் நமது பரப்புரைகளை மேற்கொள்ள வேண்டும். ஆலோசனைக் குழுக்களில் அதற்குரிய வாதுரைகளைச் செய்ய வேண்டும். சட்டப் போராட்டங்களை நடத்த வேண்டும். கர்நாடக மாநில ஏஐடியுசி, இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டு, அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி குறைந்த பட்ச ஊதியமானது ரூ.31,556 என்ற முடிவுக்கு வந்துள்ளது. இதற்காக மாநில, மாவட்ட அளவில் போராட்டங்களை நடத்தியும். அதனைத் தொடர்ந்து சட்டப்போராட்டத்தையும் நடத்துகிறது.
மக்களுடைய வாங்கும்சக்தி தொடர்ந்து குறைந்து வருகிறது. குறைந்த பட்ச ஊதியத்தை சரியாக திருத்துவதன் மூலம் தனியார் நுகர்வு அதிகரிக்கும்; அது பொருளாதாரத்திலும் பிரதிபலிக்கும். தனியார் நுகர்வு என்பது மொத்த ஜிடிபியில் 60 % ஆகும். கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு மக்கள் செலவு செய்வது குறைந்துள்ளது. பணவீக்கம் அதிகரித்துள்ளது. அவர்களின் கடன் அதிகரித்துள்ளது.
மக்களின் வாங்கும் சக்தி குறைந்துள்ளதால் சந்தையில் பொருட்களின் தேவை குறைந்துள்ளது. இதனால் உற்பத்தி மேலும் குறைந்து, வேலைவாய்ப்பு பாதிக்கிறது. எனவே மக்களின் உண்மையான ஊதியம் பாதுகாக்கப்படுவது மட்டுமின்றி, திருத்தப்பட வேண்டும்.தற்போதைய கால மாற்றத்திற்கொப்ப இணைய வசதியும் குறைந்தபட்ச ஊதியத்தில் இடம்பெற வேண்டும். பெற்றோர்களை பாதுகாக்க வேண்டிய சட்டபூர்வ நிலையும் வந்துள்ளதால் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது. எனவே பெற்றோர்களுக்கான செலவையும் சேர்த்து, சம்பளம் வாங்கும் ஒருவருக்கு ஐந்து அலகுகள் வீதம் குறைந்த பட்ச ஊதியம் கணக்கிட வேண்டும்.
எனவே விசாகப்பட்டினத்தில் செப்டம்பர் 1முதல் 3 வரை கூடியுள்ள ஏஐடியுசி பொதுக்குழுவானது, அரசுக்கும் பெருநிறுவன நலன்களுக்கும் இடையில் உள்ள உறவுக்கு எதிராக அறிவியல்பூர்வமான வகையில் குறைந்தபட்ச ஊதியத்தை திருத்துவற்கான பரப்புரையில் தீவிரமாக ஈடுபட வேண்டுமென தீர்மானிக்கிறது.
இந்தியா முழுவதும் 25 கோடி சீர்மிகு மீட்டர் (smart meter) நிறுவும் கொள்கை அமலாக்கப்பட்டு வருகிறது. இதற்கு ஒன்றிய அரசு 60 சத நிதியையும், மாநில அரசுகள் மீதித்தொகையையும், மின்சாரத்தை விநியோகிக்கும் நிறுவனங்களுக்கு (Discoms) தர வேண்டும். பெருநிறுவனங்களின் கோரிக்கைப்படி சீர்மிகு மீட்டர்கள் பொறுத்தும் திட்டம் அமலாக்கப்படுகிறது. இதனால் மின்சாரத்துறையில், இலாபம் வரும் பகுதியை தனியாருக்கு அளிக்க உள்ளனர்.
தனியார் பெருநிறுவனங்கள் மின் உற்பத்தி, பகிர்மானம், விநியோகம் என அனைத்தையும் தம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர விரும்புகின்றனர். மின்சாரத்திற்கு தரப்படும் எல்லாவித மானியத்தையும் நிறுத்த விரும்புகின்றனர். சீர்மிகு மீட்டர் அமலானால், முன்னதாகவே பணத்தை கட்டினால்தான் மின்சாரம் கடைக்கும். நுகர்வோர், அரசாங்கத்தின் பணத்தைக்கொண்டு, தங்கள் இலாபத்தை அதிகரித்துக் கொள்வதே முதலாளிகளின் நோக்கமாகும். மின் கட்டணம் வருடம்தோறும் நிர்ணயிக்கப்படும். இதனால் மின்சாரம் அடிப்படை தேவை என்ற நிலையில் இருந்து மாறி, இலாப நோக்கிலேயே செயல்படும். தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்படும். தமிழ்நாட்டில் 20,000 தொழிலாளர்களும், மகாராஷ்டிரா வில் 30,000 தொழிலாளர்களும் வேலை இழப்பர். சீர்மிகு மீட்டர் திட்டத்தை, மின்சார தொழிலாளர்கள், நுகர்வோர், பொதுமக்களோடு இணைந்து எதிர்த்து வருகிறார்கள்.
மக்கள் விரோத, மாநில அரசுகளுக்கு விரோதமான, பெரு நிறுவனங்கள் பலன் அடையும் வகையில் 2022 ல் மின் திருத்த மசோதா கொண்டு வரப்பட்டது. மின் விநியோகத்தில் பல வகைகளில் தனியாருக்கு உரிமம் வழங்குவதற்கு இது வழிவகை செய்தது. இதனால் மின்சாரம் தனியார்மயமாகும். தொழிலாளர்களின் ஒன்றுபட்ட எதிர்ப்பு காரணமாக அது சட்டமாகவில்லை. இதிலுள்ள பிரிவுகள் மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கும் வகையில் உள்ளன. மின்சாரம் விநியோகம் செய்பவர்கள் இதில் முதலீடு ஏதும் செய்யப்போவதில்லை.
நுகர்வோருக்கு விரோதமான, தேச விரோதமான, மாநில உரிமைகளைப் பறிக்கும் காட்டுமிராண்டி மின்சார திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும். தனியார்மயத்தை எதிர்த்து போராடும் 15 இலடசம் மின் தொழிலாளர்களுக்கு ஏஐடியுசி தனது ஆதரவை நல்குகிறது.
குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகைப் பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை தொடர்ந்து எதிர்க்கிறோம்
குடியுரிமை திருத்தச் சட்டம்(CAA), தேசிய மக்கள் தொகைப் பதிவேடு(NPR), தேசிய குடிமக்கள் பதிவேடு(NRC) ஆகியவற்றை அமலாக்க, பாஜக செய்யும் அனைத்து முயற்சிகளை எதிர்க்க ஏஐடியுசி உறுதி கொள்கிறது. மார்ச்சு 2024 முதல் குடியுரிமை திருத்த சட்டம் 2019 அமலுக்கு வந்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகைப் பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை இசுலாமிய சிறுபான்மையினரை மட்டும் ஒடுக்குவதற்காக கொண்டுவரப்படவில்லை. இதனால் இந்தியா முழுவதும் உள்ள இலட்சக்கணக்கான வீடற்றவர்களும் பாதிப்பு அடைவர். வீடற்ற 99 % மக்களுக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லை. இவர்கள் அமைப்புச்சாரா தொழிலாளர்கள் ஆவார்கள். வீடற்ற 30 % மக்களுக்கு எந்தவித அடையாளச் சான்றும் இல்லை என்று சொல்லப்படுகிறது. கிராமப்புற நெருக்கடியால் இடம்பெயரும் பழங்குடி, நாடோடி, புலம்பெயர்ந்த மக்களிடம் தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவைகளுக்கு தருவதற்கு தேவையான ஆவணம் ஏதும் இருப்பதில்லை.
குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு முன்னோட்டமாக செய்யப்படுவதாகும். நிரூபிக்கப்படும் வரை இந்தியாவில் வாழ்பவர்கள் அனைவரும் சட்டவிரோத குடியேறிகள் என்ற எண்ணத்தில் பாஜக இந்த நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. இது அரசியலமைப்பின் மீதும், 1955 ஆம் ஆண்டின் இந்திய குடியுரிமைச் சட்டத்தின் மீதும் தொடுக்கப்படும் தாக்குதலாகும். குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகைப் பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவைகள் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ளன; இதன் வழியாக மக்கள்தொகை விவரங்களையும், உயிரியளவியல் (Bio metric) விவரங்களையும் பாஜக சேகரித்து கண்காணிப்பிற்குள் வைத்துக்கொள்ள இருக்கிறது.
பாஜக ஆட்சியில் இருந்த போது 2003 ஆம் ஆண்டில் குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி ஒவ்வொரு குடிமகனும் தன்னை பதிவு செய்துகொள்ள வேண்டும்; தேசிய அடையாள அட்டை வழங்க வேண்டும் என்ற சட்டப்பிரிவு சேர்க்கப்பட்டது. இதனால் மக்கள் தொகை பதிவேடு உருவாக சட்டப்பூர்வமான ஏற்பாடு வந்தது; இது மக்கள் தொகை கணக்கீட்டோடும், தேசிய குடிமக்கள் பதிவேட்டோடும் இணைக்கப்பட்டது.
தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு நாடு முழுவதும் வந்த எதிர்ப்பின் காரணமாக, தேசிய மக்கள் தொகை பதிவேட்டையும், குடிமக்கள் பதிவேட்டையும் நிறுத்தி வைத்துள்ளது. குடியுரிமைத் திருத்தச் சட்டம் இசுலாமிய சிறுபான்மையினருக்கு குடியுரிமையை மறுக்கிறது; அதே சமயம் முஸ்லிம் அல்லாத சட்டவிரோத குடியேறிகளை பாதுகாக்கிறது. குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகைப் பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு காட்டுமிராண்டித்தனமானவை; அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானவையாகும்.
மதம், சாதி, இனம், வகுப்பு அடிப்படையில் மக்களை நசுக்கும் எல்லாவிதமான நடவடிக்கைகளையும் ஏஐடியுசி எதிர்க்கிறது.