இதுவரை 32,000 பாலஸ்தீன மக்கள் பெண்கள், குழந்தைகள் உட்பட கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் நாடானது போர்நிறுத்த முயற்சிகளை ஒப்புக்கொள்ளவில்லை. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதனால் உலக அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
உள்நாட்டிலேயே, 85% ற்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் காசா பகுதியில் இடம்பெயர்ந்து உள்ளனர். எட்டு இலட்சத்திற்கும் அதிகமானோர் வீடிழந்து தெருக்களில் உள்ளனர். வீடுகள், பள்ளிகள், மருத்துவமனைகள் தரைமட்டமாகி உள்ளன. பாலியல் அத்துமீறல்கள் நடைபெற்று வருகின்றன.
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புக் குழு, இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானத்தை, நிறைவேற்ற முடியவில்லை. ஐக்கியநாடுகள் சபை ரஷ்யாவிற்குச் செய்தது போல, இஸ்ரேலுக்கு எதிரான பொருளாதாரத் தடையை விதிக்கவில்லை. போர்க் குற்றங்களை விசாரிக்கவில்லை. அமெரிக்காவும், அதன் ஐரோப்ப கூட்டாளிகளும், இஸ்ரேல் நாட்டிற்கு ஆதரவாக ஐநாவிற்கு அழுத்தங்களைத் தருகின்றன. ஐநாவில் இருந்து வரும் உதவிகளை காசா பகுதியில் தருவதை இஸ்ரேல் தடுக்கிறது. இவை அப்பட்டமாக சர்வதேச சட்டங்களுக்கு விரோதமானதாகும்.
ரமதான் நோன்பின் முதல் நாளில் 67 இறந்த உடல்கள் வந்துள்ளன. உடனடியான போர் நிறுத்தத்திற்கு ஐநா நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏஐடியுசி கோருகிறது.
போர் நடந்து கொண்டிருக்கும் போதே, சூயஸ் கால்வாய்க்கு போட்டியாக, பென் குரியன் கால்வாய்த் திட்டத்தை (Ben Gurion Canal Project of 1960) மீண்டும் திறப்பதற்கான பேச்சுக்களைத் தொடங்கியுள்ளனர். அரபு நாடுகளுக்கு எதிரான மேலாதிக்கத்தை காட்ட விரும்பும் ஏகாதிபத்திய நாடுகளே இதற்கு காரணமாகும்.
, தென் ஆப்பிரிக்க குடியரசு, இஸ்ரேலின் இனப்படுகொலையை எதிர்த்த வழக்கில், சர்வதேச நீதிமன்றம் கொடுத்துள்ள இடைக்கால உத்தரவை ஏஐடியுசி வரவேற்கிறது. ஆனால் இந்த உத்தரவை இஸ்ரேல் அமலாக்கவில்லை. இதற்காக சரவதேச நீதிமன்றம் இஸ்ரேல் மீது நடவடிக்கை எடுக்கத் தொடங்க வேண்டும்.
இந்தியா பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இருந்துள்ளது. ஐக்கிய நாடுகள் பொதுசபையில், 1947 ல், பாலஸ்தீனத்தை பிரிப்பதை எதிர்த்து இந்தியா வாக்களித்தது. PLO, பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவான அமைப்பு என்பதை அரபுநாடுகளைத் தவிர்த்து, முதலில் அங்கீகரித்த நாடு இந்தியா. 1988 ல் பாலஸ்தீன நாட்டை அங்கீகரித்த சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. நிரந்தரத் தீர்விற்கு, இரண்டு நாடுகள் கொள்கையை ஐநா ஏற்றுக்கொள்ள இந்தியா ஆதரவு அளிக்க வேண்டும் என ஏற்கெனவே ஏஐடியுசி தீர்மானம் இயற்றி உள்ளது.
இந்திய தொழிலாளர்களை, பாலஸ்தீன தொழிலாளர்களுக்குப் பதிலாக இஸ்ரேல் நாட்டிற்கு எந்தவித மன உளைச்சலும் இல்லாமல் இந்தியா அனுப்புவதை ஏஐடியுசி கடுமையாக கண்டிக்கிறது. எந்தவிதமான பாதுகாப்பும் இல்லாமல் போர் நடக்கும் பகுதிகளுக்கு இந்திய தொழிலாளர்களை அனுப்பும் நிலை உள்ளது. வளைகுடா நாடுகளுக்கு அனுப்பப்படும் தொழிலாளர்களுக்கு கிடைக்கும் பாதுகாப்பு கூட இஸ்ரேல் நாட்டிற்கு அனுப்பப்படுவர்களுக்கு இல்லை.
பாலஸ்தீன தொழிலாளர்களுக்கும் இந்திய தொழிலாளர்களுக்கும் நிலவும் பிணைப்பை ஏஐடியுசி விதந்தோதுகிறது. ‘இரண்டு நாடுகள் தீர்வு” என்பதற்கு எங்கள் உறுதியான ஆதரவை நல்குகிறோம். 1967 க்கு முன்பு இருந்த எல்லைகளின் அடிப்படையில் கிழக்கு ஜெருசலேம் நகரைத் தலைநகரமாகக் கொண்ட சுதந்திர பாலஸ்தீன நாடு அமைக்கப்பட வேண்டும். இஸ்ரேல் நாட்டின் மீது தடைகள் விதிக்கப்பட வேண்டும், அது நடத்திய போர்க் குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும் என ஏஐடியுசி கோருகிறது. சர்வதேச தொழிலாளர் ஒற்றுமையை உருவாக்க ஏஐடியுசி உறுதி கொள்கிறது. ஐக்கிய நாடுகள் சபையானது அமைதியை மீண்டும் கொண்டுவரவும், பாலஸ்தீனத்தையும், அதன் அரசுரிமையையும் பாதுகாக்க விரைந்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் ஏஐடியுசி வேண்டுகோள் விடுக்கிறது.