அறிவியல் பூர்வமாக குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம்
ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை குறைந்தபட்ச ஊதிய சட்டப்படி குறைந்தபட்ச ஊதியமானது திருத்தம் செய்யப்பட வேண்டும். இதனால் தோட்டம், சுரங்கம், கட்டுமானம், விவசாயம், கைத்தொழில், வீட்டு வேலை போன்ற தொழில்களில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள் பலன் பெறுவார்கள். இந்த ஊதியம் குறித்து கெடுவாய்ப்பாக விவாதங்கள் நடைபெறுவதில்லை. 15-வது இந்திய தொழிலாளர் மாநாட்டு முடிவின்படி அறிவியல் பூர்வமான வகையில் குறைந்தபட்சம் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்யவேண்டும். இதனை உச்ச நீதிமன்றமும் ரெப்டகாஸ் பிரெட் வழக்கிலும் (1992) , உனிச்சோயி & மற்றவர்கள் எதிர் கேரள அரசு வழக்கிலும் ( Unichoyi & others vs The state of Kerala) (1962) உறுதிப்படுத்தியுள்ளது. குறைந்தபட்ச ஊதியம் தேவையின் அடிப்படையில் ஆனதாகும். உணவு, உடை, இருப்பிடம், போக்குவரத்து, மருத்துவம், கல்வி போன்ற செலவினங்களோடு, திருமணம், திருவிழாக்கள் உள்ளிட்ட சமூக கலாச்சார நிகழ்வுகளுக்காகும் செலவுகளையும் சேர்த்து ஊதியமானது கணக்கிடப்பட வேண்டும்.
கீழ்கண்ட காரணிகளின் அடிப்படையில் குறைந்தபட்ச ஊதியம் கணக்கிடப்பட வேண்டும் ரெப்டகாஸ் வழக்கின் அடிப்படையில் வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டுள்ளன:
- மூன்று நுகர்வோரின் செலவுகள் ஒரு சம்பளதாரருக்கு கணக்கிடப்பட வேண்டும்
- ஒரு சராசரி மனிதனுக்கு நாளொன்றுக்கு 2700 கேலரி சத்து தேவைப்படும் உணவு தேவை என டாக்டர். அக்ராய்டு பரிந்துரைத்துள்ளார்.
- ஒரு ஆண்டுக்கு 72 கஜம் துணி
- அரசாங்க தொழில் பகுதியில் உள்ள வீட்டு வசதிப்படி வாடகை
- ஒட்டுமொத்த சம்பளத்தில் 20% எரிபொருள், விளக்கு உள்ளிட்ட இதர செலவின வகைகளுக்கு
- குழந்தைகள் கல்வி, மருத்துவம், குறைந்த பட்ச பொழுபோக்கு, முதுமைக்கால பாதுகாப்பு, திருமணம் போன்றவைகள் குறைந்த பட்ச ஊதியத்தில் 25 % ஆக கணக்கிடப்படும்.
இதுதான் குறைந்த பட்ச ஊதியத்தை நிர்ணயிக்க ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையாகும். ஆனால் மத்திய, மாநில அரசாங்கங்கள் தன்னிச்சையாக ஊதியத்தை திருத்துகின்றன. மத்திய மாநில அரசுகள் அதனுடைய நான்காம் பிரிவு ஊழியர்களுக்கு ரெப்டகாஸ் வழக்கு அடிப்படையில் நியாயமாக ஊதியத்தை நிர்ணயம் செய்கின்றன. ஆனால் இத்தகைய நடைமுறையை தனியார் துறை தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் நிர்ணயிக்கும்போது கடைபிடிப்பதில்லை. இதனால் அரசாங்கம் பெருநிறுவனங்களின் நலனைப் பாதுகாக்க எடுக்கும் பாசங்குத்தனமான நடவடிக்கை அம்பலமாகிறது.
குறைந்த பட்ச ஊதியம் என்பது போராட்டங்களின்போது பேசப்படும் முழக்கம் அல்ல என்று ஏஐடியுசி கருதுகிறது. அறிவியல்பூர்வமாக குறைந்தபடச ஊதியத்தை நிர்ணயம் செய்யும் வகையில் நமது பரப்புரைகளை மேற்கொள்ள வேண்டும். ஆலோசனைக் குழுக்களில் அதற்குரிய வாதுரைகளைச் செய்ய வேண்டும். சட்டப் போராட்டங்களை நடத்த வேண்டும். கர்நாடக மாநில ஏஐடியுசி, இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டு, அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி குறைந்த பட்ச ஊதியமானது ரூ.31,556 என்ற முடிவுக்கு வந்துள்ளது. இதற்காக மாநில, மாவட்ட அளவில் போராட்டங்களை நடத்தியும். அதனைத் தொடர்ந்து சட்டப்போராட்டத்தையும் நடத்துகிறது.
மக்களுடைய வாங்கும்சக்தி தொடர்ந்து குறைந்து வருகிறது. குறைந்த பட்ச ஊதியத்தை சரியாக திருத்துவதன் மூலம் தனியார் நுகர்வு அதிகரிக்கும்; அது பொருளாதாரத்திலும் பிரதிபலிக்கும். தனியார் நுகர்வு என்பது மொத்த ஜிடிபியில் 60 % ஆகும். கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு மக்கள் செலவு செய்வது குறைந்துள்ளது. பணவீக்கம் அதிகரித்துள்ளது. அவர்களின் கடன் அதிகரித்துள்ளது.
மக்களின் வாங்கும் சக்தி குறைந்துள்ளதால் சந்தையில் பொருட்களின் தேவை குறைந்துள்ளது. இதனால் உற்பத்தி மேலும் குறைந்து, வேலைவாய்ப்பு பாதிக்கிறது. எனவே மக்களின் உண்மையான ஊதியம் பாதுகாக்கப்படுவது மட்டுமின்றி, திருத்தப்பட வேண்டும்.தற்போதைய கால மாற்றத்திற்கொப்ப இணைய வசதியும் குறைந்தபட்ச ஊதியத்தில் இடம்பெற வேண்டும். பெற்றோர்களை பாதுகாக்க வேண்டிய சட்டபூர்வ நிலையும் வந்துள்ளதால் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது. எனவே பெற்றோர்களுக்கான செலவையும் சேர்த்து, சம்பளம் வாங்கும் ஒருவருக்கு ஐந்து அலகுகள் வீதம் குறைந்த பட்ச ஊதியம் கணக்கிட வேண்டும்.
எனவே விசாகப்பட்டினத்தில் செப்டம்பர் 1முதல் 3 வரை கூடியுள்ள ஏஐடியுசி பொதுக்குழுவானது, அரசுக்கும் பெருநிறுவன நலன்களுக்கும் இடையில் உள்ள உறவுக்கு எதிராக அறிவியல்பூர்வமான வகையில் குறைந்தபட்ச ஊதியத்தை திருத்துவற்கான பரப்புரையில் தீவிரமாக ஈடுபட வேண்டுமென தீர்மானிக்கிறது.
#####