Connect with us

நிகழ்ச்சிகள்

Published

on

போராடுகின்ற மருத்துவர்களுக்கு ஆதரவளிக்கிறோம்

கோல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொடூரமாக வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட, முதுகலைப் பட்டதாரி் பயிற்சி மருத்துவர் விவகாரத்தில் ஏஐடியுசி தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கிறது. இதில் கவலை கொள்ளத்தக்க அம்சம் என்னவென்றால், சம்பவம் நடந்து ஒரு வாரமாகியும், விசாரணையில் சொல்லும்படியான பெரிய முன்னேற்றம் இல்லை. நீதிக்காகவும், பெண் மருத்துவர்களின் கண்ணியம், பாதுகாப்பிற்காகவும் போராடுகிற மருத்துவர்களோடு ஏஐடியுசி இணைகிறது. குற்றத்தை விரைவில் விசாரித்து, கொடுங் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டுமென ஏஐடியுசி கோருகிறது.
ஆரம்ப கட்ட விசாரணையில், இது ஒரு கூட்டு வன்புணர்வு என்று தெரிய வருகிறது. எனவே இதில் பல குற்றவாளிகள் இருக்க வேண்டும். ஆனால் இதுவரை ஒருவர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளார்.

முதலில் இதனை தற்கொலை என்று சொன்னது, பெற்றோர்களை உடலைப்பார்க்க தாமதமாக அனுமதியளித்தது, சீக்கிரமாக எரியூட்டியது, கல்லூரியில் நடந்த தாக்குதல் போன்றவை பல கேள்விகளை எழுப்புகின்றன. பாரபட்சமின்றி இதனை மத்திய புலனாய்வு நிறுவனம் விசாரிக்க வேண்டும் என ஏஐடியுசி கோருகிறது.

இந்த கோரமான சம்பவம் பணித்தளத்தில் நடந்துள்ளது. பணித்தளம் பெண் மருத்துவருக்கு பாதுகாப்பாக இல்லை என்று தெரிகிறது. தொடர்ச்சியாக 36 மணி நேரம் அவருக்கு பணிகொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
நாகரிகம் உள்ள எந்த நாடும் மருத்துவர்களுக்கு தொடர்ச்சியாக 36 மணிநேரம் படிபுரிய அனுமதிக்காது. இந்தக் கொடூரமான சுரண்டல் மருத்துவரையும், நோயாளியையும் ஆபத்துநிலையில் வைக்கிறது. கூட்ட அறையில், மருத்துவரை ஓய்வெடுத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

அதாவது, மருத்துவர்களுக்கு, குறிப்பாக பெண் மருத்துவர்களுக்கு ஓய்வறை இல்லை.
பெண்களை பணித்தளங்களில் பாதுகாப்பின்றி வைப்பது குற்றமாகும்.
இத்தகைய கொடூரமான சட்டவிரோதங்கள், அந்த மருத்துவமனையின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டிய காரணங்களாகும். அந்த மருத்துவ மனையில் மருத்துவர்கள், செவிலியர், மற்ற ஊழியர்களின் பணி நிலைமைகளை ஆராய வேண்டுமென ஏஐடியுசி கோருகிறது.

எல்லா மருத்துவமனைகளிலும் வேலைநேரம், ஓய்வு அறை, கழிப்பிட வசதி போன்ற பாதுகாப்பான சூழலை உறுதி செய்ய சட்டம் இயற்றப்பட வேண்டும்.

மக்களின் உயிரைப் பாதுகாக்க வேண்டிய ஆயிரக்கணக்கான மருத்துவர்கள், நீதிக்காகவும், பாதுகாப்பிற்காகவும், தெருவில் போராடிக்கொண்டு இருக்கிறார்கள்.

கவலையிலும், கோபத்திலும் இயல்பான ஒவ்வொரு மனிதனும் இணைந்து கொண்டிருக்கிறான். ஆனாலும் இத்தகைய இழிவானதொரு சம்பவம் இந்தியாவை மற்றொருமுறை அவமானத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
சில ஆண்டுகளாக இந்தியா இத்தகைய பல வன்புணர்வுகளினால் அபகீர்த்தி அடைந்துள்ளது.

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்று அதிர்ச்சி தரும் பலவற்றை வெளிப்படுத்தி இருக்கிறது.

தண்டிக்கப்படும் விகிதம் குறைவாக இருப்பதானது, கடுமையான குற்றங்கள் குறித்து அக்கறை இல்லாததை காட்டுகிறது.இந்தியப் பெண்கள் விஷயத்தில் நீதித்துறை தோற்றுவிட்டது.

வன்புணர்வு என்பது, கொடுமையான, திட்டமிட்ட மனித உரிமை மீறல் என்பது மட்டுமல்ல, விலங்குகளைப் போன்ற வன்முறையானது, ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் வேதனைக்கு உள்ளாக்குவதாகும்.

இத்தகைய கொடுங்குற்றங்களைக் கண்டு இந்திய மக்கள் மன உளைச்சல் அடைகிறார்கள்
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க காரணம், இங்கு நிலவும் கருத்தியலே.

நமது சமூக அரசியல் அமைப்பில் அப்படிப்பட்ட ஆணாதிக்க ஆழமாக நிலவுகிறது. பெரும்பாலான பாலியல் குற்றங்களில் நீதி மறுக்கப்பட்டுள்ளது.
போராடி வருகிற மருத்துவர்களுக்கு ஏஐடியுசி தனது முழு ஆதரவை தருகிறது. ஏஐடியுசியின் உழைக்கும் பெண்கள் அமைப்பு எல்லா மாநிலங்களிலும் இணைந்து போராடி வரும் மருத்துவர்களோடு தனது ஆதரவைத் தரும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

நிகழ்ச்சிகள்

Published

on

வேலையின்மையால் சட்டவிரோதமாக அமெரிக்காவிற்கு குடிபுகுபவர்களில் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது – பரகால பிரபாகர்

சிந்தனையாளர் மன்றம் சமீபத்தில் நடத்திய கருத்தரங்கில், பொருளாதார நிபுணரும், ‘புதிய இந்தியா எனும் கோணல் மரம்’ (The crooked timber of new india) என்ற நூலின் ஆசிரியருமான பரகால பிரபாகர் ‘நெருக்கடிகுள்ளாகும்  மதிப்புகள்’ (values at stake) என்ற பொருளில் பேசினார். உலகத்திலேயே பெரிய அரசியல் கட்சி என்று சொல்லிக் கொள்ளும் பாஜக, இந்தியாவில் பெரிய சிறுபான்மையினரான முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர் இல்லாமலேயே அமைச்சரவை அமைத்து உள்ளது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வேலையின்மை அதிகரித்து உள்ளது. எனவேதான், போர் நடக்கும் இஸ்ரேல், உக்ரேன் நாடுகளுக்கு  உயிரைப் பணயம் வைத்து இளைஞர்கள் செல்கின்றனர் என்றார். சட்டவிரோதமாக அமெரிக்காவிற்கு குடிபுகுபவர்களில் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது என்றார். அவர் மேலும் பேசியதாவது :
இந்து – முஸ்லிம் கலவரம், இடப்பெயர்ச்சி, அகதிகள் பிரச்சினை போன்றவை நடந்த நெருக்கடியான காலத்திலும், அரசியல் சாசனம் மதச்சார்பற்ற இந்தியாவை நமக்குக் கொடுத்தது. இந்திய – பாகிஸ்தான் பிரிவினை நடந்தபோதும் அதிகாரம் மிக்க ஒரே அரசாக (unitary state) இருக்க வேண்டும் என நமது முன்னோர்கள் நினைக்கவில்லை. கூட்டாட்சி அரசமைப்பை நமக்குத் தந்தார்கள். அகதிகள் பிரச்சினை இருந்த போதும், பன்மைத்துவம், மதச்சார்பின்மை, கூட்டாட்சி போன்ற கொள்கைகளை நமது முந்தைய தலைமுறை தந்தது.
ஆனால் சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு, அவைகளுக்கு ஆபத்து வருகிறது என்றால் அதற்கு இப்போதுள்ள அரசியல் கட்சிகள்தான் காரணம்; அரசிலமைப்பு விழுமியங்களை மக்கள் மனதில் பதிய வைக்கவில்லை என்று பொருளாகும்.
அசமத்துவமானது (inequality),கடந்த பத்து ஆண்டுகளில், அதிகரித்துள்ளது.  வெள்ளைக்காரர்கள் ஆட்சிக்காலத்தை விட அதிகரித்துள்ளது. ஒரு சத இந்தியனுக்கு 22 % தேசிய வருமானம் கிடைக்கிறது. ஒரு சத இந்தியனுக்கு 44 % சொத்துகள் உள்ளன. ஆனால் நிதிக்குழுவின் தலைவரான அரவிந்த் பனகாரியா அசமத்துவத்திற்காக தூக்கத்தை  இழக்காதீர்கள் (don’t lose sleep over inequality) என்று கட்டுரை எழுதுகிறார். உலகத் தொழிலாளர் அமைப்பு (ILO) 62% இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை என்று கூறுகிறது. ஆனால் இந்திய அரசாங்கத்தின் தலைமை பொருளாதார ஆலோசகர் ‘வேலைவாய்ப்பு இல்லாததற்கு அரசாங்கத்திற்கு பொறுப்பு இல்லை’ என்று கூறுகிறார்.
2022 ல் இரயில்வேயில் நடந்த 35,000 தொழில் நுட்பம் அல்லாத பணியிடங்களுக்கு ஒரு கோடியே 25 இலட்சம் விண்ணப்பங்கள்  வந்தன. போர் நடந்து கொண்டிருக்கும் சூழலில் இஸ்ரேல், பாலஸ்தீன தொழிலாளர்களுக்கு வேலையை பறித்துவிட்டது. அந்த வேலையைச் செய்ய உ.பி, ஹரியானா, ம.பி., ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து இஸ்ரேல் செல்கிறார்கள். வேலையில்லாமல் இங்கு சாவதைவிட, அங்கு செல்லலாம் என நினைக்கின்றனர். இதே போல உக்ரேன் போரில் இறந்த ஒருவரின் உடல் கடந்த வாரம் செகந்தரபாத்திற்கு வந்தது. ஈரான், யேமன், சிரியா போன்ற நாடுகளைவிட இந்தியாவில்  வேலைவாய்ப்பின்மை அதிகம். 24 % வேலைவாய்ப்பின்மை உள்ளது. ஜப்பானில் 6 % உள்ளது. உலகத் தொழிலாளர் அமைப்பு 60% படித்த இளைஞர்களுக்கு வேலையில்லை என்கிறது. வேலையில்லாதவர்களில் 25 வயதுக்கு கீழே உள்ளவர்கள் 40 % உள்ளனர்.  பிப்ரவரி 2024 ல் அரசாங்கம் கொடுத்த வெள்ளை அறிக்கையில் எந்த விவரங்களும் இல்லை. கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பை விட இப்போது சர்கரை, பருப்பு, இஞ்சி போன்ற உணவுப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.
கடந்த கர்நாடக தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தன்னை எதிர்கட்சிகள் 99 முறை தவறாகப் பேசிவிட்டனர் என்றார். ஆனால் இந்த அரசாங்கத்திடம் கொரோனாவில் இறந்தவர்களைப் பற்றி புள்ளிவிவரம் இல்லை. எத்தனை பேருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டது என்ற விவரம் இல்லை. எத்தனை பேர் கொரானாவினால் இடம்பெயர்ந்தனர் என்ற விவரம் இல்லை.  புள்ளிவிவரங்கள், தகவல்களை இந்த அரசாங்கம் வெளியிடுவதில்லை. பணவீக்கம் அதிகரித்துள்ளது.
குடும்பங்களின் கடன், முன்பை விட அதிக அளவில் அதாவது 40%  உள்ளது. சேமிப்பானது 5 சதமாக குறைந்துள்ளது. கடந்த நிதியாண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி ஆறு மாதத்திலேயே தீர்ந்துவிட்டது. அந்த அளவுக்கு கிராமப்புற  ஏழ்மை அதிகரித்து உள்ளது.
உள்நாட்டு முதலீடு 30 சதத்திலிருந்து 19 சதமாக  குறைந்துள்ளது. 30 சதமாக இருந்த கார்ப்பரேட் வரியை 22 சதமாக குறைத்து அவர்களுக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது. 25 இலட்சம் கோடி ரூபாய்க்கான கடனை பெருமுதலாளிகளுக்கு தள்ளுபடி செய்துள்ளனர். உற்பத்திக்கான ஊக்கத்தொகை (productivity linked incentive) தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது.
ரிசர்வ் வங்கியில் உள்ள நிதியை அரசு பெற்றுள்ளது. பொதுத்துறை நிறுவனங்களையும், அரசு சொத்துகளையும் விற்று அரசு நிதி பெற்றுள்ளது. ஆனாலும் 2023 ல் 1.60 இலட்சம் கோடி ரூபாய் கடனில் இந்தியா உள்ளது.
தேர்தல் பத்திரம் மூலம் நிதி கொடுத்து, அரவிந்த பார்மா என்ற மருந்துக் கம்பெனி அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 1000 கோடி ரூபாய்க்கு உற்பத்திக்கான ஊக்கத்தொகையை சலுகையாகப் பெற்றுள்ளது.
2014 ல் இந்தியக் குடியுரிமை வேண்டாம் என 1.29 இலட்சம்பேர் தங்கள் கடவுச்சீட்டுகளை கொடுத்துள்ளனர். இப்போது அது 2.25 இலட்சம் பேர் அவ்வாறு தங்கள் குடிரிமைகளைத் துறந்துள்ளனர். 96,000 இந்தியர்கள் சட்டவிரோதமாக அமெரிக்கா தனது செல்ல முயன்றதாக பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. துடிப்பான குஜராத் என அழைக்கப்படும் மாநிலத்தில் இருந்து மட்டும் 26,000 பேர் அமெரிக்கா செல்ல சட்டவிரோதமாக முயன்றனர். ஏற்கனவே இலத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்துதான் இவ்வாறு செல்வர். இப்போது இந்தியாவும் அந்தப்  பட்டியலில் சேர்ந்து கொண்டது.
ஐந்து நிமிடம் மட்டுமே விவாதம் நடத்தி ,மூன்று வேளாண் சட்டங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. இதனை எதிர்த்து விவசாயிகள் போராடினர்.ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை வாக்களிப்பது மட்டுமே ஜனநாயகம் இல்லை. விவாதிப்பது, முரண்படுவது, பேசுவது, எதிர்க் கருத்து சொல்வது, அதைப் பரிசீலீப்பது  போன்றவைகளும் ஜனநாயகத்தின் ஒரு பகுதிதான். ஆனால் அவர்களை ஆண்டி இந்தியன், அர்பன் நக்சல், காலிஸ்தானி, அந்தோலன் ஜீவி என விதவிதமாக அவர்களைப் பாஜக திட்டியது. மாநில தேர்தல்களுக்கு முன்பாக  விவாதமே இல்லாமல் அந்த மூன்று விவசாயச் சட்டங்களை திரும்பப் பெற்றுக் கொண்டது. இதற்கும் விவாதம் இல்லை.
உலகிலேயே பெரிய அரசியல் கட்சி என்று பாஜக சொல்கிறது. கடந்த அமைச்சரவையில், இந்தியாவின் சிறுபான்மையினரில் பெரும்பான்மையாக இருக்கும் இசுலாமியர் ஒருவர் கூட இல்லை. இந்தியாவை இந்தியாவின் பெரிய மாநிலமான உபியில் முஸ்லிம்கள் அதிக அளவில் உள்ளனர். ஆனால் ஒரு முஸ்லிம் கூட அங்கு  பாஜகவின் சட்ட மன்ற உறுப்பினராக இல்லை. இந்த நிலைதான் குஜராத், கர்நாடக மாநிலத்திலும் உள்ளது.
ஜி.20 மாநாடு நடக்கும் போது ‘வாசுதேவய்யா குடும்பம்’ என சமஸ்கிருதத்தில் பெயர் சூட்டினர். சமக்கிருதம் என்பதாலேயே அது பழங்காலத்தில் எழுதப்பட்டது என்று இல்லை. இப்போது கூட சமஸ்கிருதத்தில் எழுதலாம். அதற்கு ‘உலகமே என் குடும்பம்’ என்பது பொருள் என்று சொல்கிறார்கள். அப்படிச் சொல்லும் மோடிதான் மணிப்பூரில் கடந்த ஓராண்டாக கலவரம் நடந்து கொண்டிருக்கிறது. அங்கு பிரதமரான அவர் செல்லவில்லை. வடகிழக்கு மாநிலங்கள் பற்றி நாம் கண்டு கொள்வதில்லை; ஊடகம் பேசுவதில்லை; அரசியல் கட்சிகள் பேசுவதில்லை.
இந்தியாவின் தலைநகரான தில்லியில் ‘கும்பல் கொலை’ பற்றி பேசுகிறார்கள் என்றால் நிலமை நம் கண்முன்னே மாறிவிட்டது என்று தெரிந்துகொள்ளுங்கள்.
தேர்தலுக்கு பிறகு ‘பிரதமர் கேர் நிதி’ ஒரு பேசு பொருளாக மாறும். ஏனெனில் அதில் நடந்துள்ள செலவு பற்றி நமக்குத் தெரியாது. தீர்ப்புகள் எத்தகையதாக இருந்தாலும் ‘நாங்கள் நீதிமன்றத்தை மதிக்கிறோம்’ என்று சொல்லிதான் அரசியல் கட்சிகள் தீர்ப்பு பற்றி பேசுவார்கள். ஆனால் மோடி   தேர்தல் பத்திர தீர்ப்பு பற்றி ‘பின்னர் வருந்துவார்கள்’ என்று கூறுகிறார். அப்படியானால் இவர் யாரை மிரட்டுகிறார். உச்சநீதிமன்ற நீதிபதிகளை மிரட்டுகிறார் என்றே நான் கருதுகிறேன்.
அடுத்த ஆண்டு 2025 ஆர்எஸ்எஸ் உருவான நூற்றாண்டு. இந்துத்துவ கொள்கை என்பது அவர்களுடைய நீண்ட கால திட்டம். அவ்வளவு எளிதாக அவர்கள் ஓய மாட்டார்கள். இசுலாமிய வெறுப்பு, கூட்டாட்சி மீது ஒவ்வாமை போன்றவை அவர்கள் இரத்தத்தில் ஊறி இருக்கிறது. நெடிய போராட்டத்திற்குப் பிறகு உருவான இந்தியாவை காப்பாற்றுவது நமது கடமை. வாராணாசியில் நடந்த தேர்தலில் விவிபாட் ஒப்புகைச் சீட்டுகளை விட, பதிவான வாக்குகள் அதிகம் என்றனர். எனவே விழிப்போடு இருக்க வேண்டும் என்றார். பார்வையாளர்கள் நிறைந்த அவையில், உயிர்ப்போடும், மெல்லிய நகைச்சுவையோடும்  பரக்கால பிரபாகர் ஜனநாயகத்தை, பன்மைத்துவத்தை, கூட்டாட்சியை காக்க வேண்டிய அவசியத்தை எளிய மொழியில் பேசினார். இவர் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

####

Continue Reading

நிகழ்ச்சிகள்

Published

on

2024 மே தினச் சூளுரை
ஏஐடியுசி – சிஐடியு கூட்டறிக்கை

உழைக்கும் மக்கள் உரிமைப் போரில் பங்கேற்ற அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள்.
உலகில் வறுமை, சுரண்டல், சமூக அநீதி போன்றவை பாட்டாளி வர்க்கத்தை சூழ்ந்துள்ளது; தீவிர தேசியவாதம், பண்பாட்டுப் பிரிவினைவாதம், ஆகியவற்றோடு பாசிசம் கை கோர்த்துள்ளது. அப்பாவிகளான பாலஸ்தீன மக்களின் மேல் இஸ்ரேல் மிருகத்தனமான இனப்படுகொலை தாக்குதலைத் தொடுத்துள்ளது. ஜனநாயகம் மற்றும் தொழிற்சங்க உரிமைகள் மீதான கடுமையான புதிய, புதிய தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. அதிக வாழ்க்கைச் செலவு மற்றும் பணவீக்கம் தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களின் வாழ்க்கைத் தரத்தை கொடூரமாக பாதித்துள்ளது. தனியார்மயமாக்கல், ஒப்பந்தம், அவுட்சோர்சிங், டெலிவொர்க்கிங் மற்றும் “சேவை குத்தகை” போன்றவை இந்த கடுமையான நவதாராளவாத தாக்குதலின் வடிவங்கள் ஆகியுள்ளன. இவற்றுக்கு எதிராக உலகின் பல நாடுகளில் தொழிலாளர்கள், விவசாயிகள், மக்கள் போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன.
பாலஸ்தீனத்தின் மீதான உடனடியான போர்நிறுத்தத்தை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் பிற மக்கள் அமைப்புகளூடன் சேர்ந்து அமெரிக்காவில் பிரம்மாண்டமான கூட்டணி உருவெடுத்துள்ளது.
உலகின் பல சிறந்த சமூக நலத் திட்டங்களுக்கு நன்கு அறியப்பட்டது பின்லாந்து. ஆனால் தற்போதைய அமெரிக்க ஆதரவு, நேட்டோ-சார்பு பின்லாந்தின் வலதுசாரி பிரதமர் பெட்டேரி ஓர்போ, தொழிலாளர் உரிமைகள் மீதான தடைகள் மூலம் தொழிற்சங்கங்களை உடைக்க முயற்சிக்கிறார். ஃபின்னிஷ் தொழிற்சங்கங்களின் மத்திய அமைப்பு (SAK) அரசியல் பொது வேலைநிறுத்தங்கள் மூலம் பதிலளித்துள்ளன.
இலங்கையில் வேலை நேரத்தை அதிகரித்தல், நியாயமற்ற பணிநீக்கம், தொழிற்சங்கத்தின் கூட்டு பேர உரிமைகளை அகற்றுதல் போன்ற வகையில் 13 தொழிலாளர் நலச் சட்டங்களை மாற்றி புதிய வேலைவாய்ப்புச் சட்டத்தை அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. இதனை எதிர்த்த தொழிற்சங்கங்களின் போராட்டம் வீச்சுடன் நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் இரயில்வேயில் ஒட்டுமொத்தமாக தனியார்மயம் நடந்து கொண்டிருக்கிறது. அரசிடம் இருந்த படைக்கலன் ஆலைகள் நிறுமனமயமாக்கப் பட்டுள்ளன. ஆயுதங்களும், வெடிமருந்துகளும் உற்பத்தி செய்யும் உரிமம் பன்னாட்டு கம்பெனிகளுக்கு தரப்படுகின்றன. நிலக்கரி, பாதுகாப்பு, தொலைபேசி, விமான நிலையம், பொதுக் காப்பீடு, ஆயுள் காப்பீடு, சுரங்கம், மருந்து, துறைமுகம், சாலைப் போக்குவரத்து, மின்சாரம், இரும்பு, எண்ணெய், கனரக இயந்திரங்கள் போன்றவைகள் தனியார் மயமாக்கம் நடைபெறுகின்றன.
வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் (NDA-1) பொதுத்துறை பங்குகளை தனியாருக்கு விற்பதற்கென தனியாக ஒரு அமைச்சகத்தையே வைத்திருந்தார். இப்போது அந்தப் படுபாதகச் செயல் பெரிய அளவில் விரிவு படுத்தப்பட்டுள்ளது. பொதுத் துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்கும் விகிதம் உலகிலேயே மிகவும் குறைவாக உள்ள நாடு இந்தியா எனும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது சுயச்சார்பின்மைக்கும், வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும், சமூகநீதிக்கும் எதிரானது.
இந்திய தொழிலாளர்கள் 150 ஆண்டு காலம் போராடிப் பெற்ற ஊதியப் பாதுகாப்பு, வேலை பாதுகாப்பு, சமூக பாதுகாப்புகளை உள்ளடக்கிய 44 சட்டங்களை மோடி அரசு மாற்றியது. அதற்கு பதிலாக சத்தற்ற சக்கையாக, நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை கொண்டு வந்தது.
அந்தச் சட்டங்களை கடந்த நான்கு ஆண்டுகளாக செயலுக்கு கொண்டு வர முடியாமல் இந்திய தொழிலாளி வர்க்கம் ஒன்றுபட்ட போராட்டங்களால் தடுத்திருக்கிறது. இவ்வாறு விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை 700 உயிர்களைப் பலி கொடுத்து விவசாயிகள் கிழித்தெறிந்திருக்கிறார்கள். சர்வ வல்லமை பெற்றவர் என்று பாஜகவினரால் போற்றப்படும் மோடியே நினைத்தாலும், அதை விவசாயிகளும் தொழிலாளர்களும் ஒன்றுபட்டு போராடி முறியடிக்க முடியும் என்பதை அனுபவம் நிரூபிக்கிறது.
அந்தச் சட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை என்றாலும் கூட, ஏற்கனவே இருக்கும் சட்டங்களை செயல்படுத்துவதை அரசு கைவிட்டு விட்டது.‌ தொழிலாளர்களின் உண்மை ஊதியம் மேன்மேலும் குறைந்து கொண்டிருக்கிறது. வேலை செய்பவர்களில் 90% க்கும் அதிகமானவர்கள் எந்த சட்டப் பாதுகாப்புமற்ற அமைப்புசாரா தொழிலாளர்களாக இருக்கிறார்கள். நிரந்தர தொழிலாளர்களின் எண்ணிக்கை வெகுவேகமாக குறைந்து கொண்டிருக்கிறது. கல்வி, வேலைவாய்ப்பு, பயிற்சி ஆகியவற்றைப் பெறுவதில், ஆண்களை விட பெண்கள் ஐந்து மடங்கு பின்தங்கி இருக்கிறார்கள் என்று ஐஎல்ஓ அறிக்கை தெரிவிக்கிறது.
ஒப்பந்தத் தொழிலாளர் (ஒழுங்கு படுத்துதல் மற்றும் அகற்றுதல்) சட்டம்,1970 ன்படி இருந்த குறைந்தபட்ச சட்டப்பாதுகாப்பையும் முற்றாக போக்கும் வகையில் அவுட்சோர்ஸ் முறை அறிமுகப்படுத்தப்பட்டு பரவலாகி வருகிறது. இதனால் செல்வத்தை உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள் சுரண்டலுக்கு ஆளாகி வருகின்றனர். அவர்கள் கூலி அடிமைகளாக நடத்தப்படுகிறார்கள். 30 கோடி தொழிலாளர்கள், கிக், பிக்ஸட் டேம், நீம் மற்றும் திட்ட ஊழியர்கள் எனும் பெயர்களில் தொழிலாளர் என்ற வரையறையில் இருந்தே விரட்டியடிக்கப்பட்டு உள்ளனர்.
27 கோடியே 73 லட்சம் தொழிலாளர்களின் எதிர்காலத்திற்கான சேமிப்புகளைப் பராமரித்துவரும் தொழிலாளர் பிராவிடண்ட் ஃபண்ட் சேமிப்புப் பணம், கார்ப்பரேட்டுகள் நலனுக்காக, பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யப்படுவது, தொழிலாளர்களின் எதிர்காலத்திற்கு கேள்விக் குறியாகி உள்ளது.
‘இ’ ஷ்ரம் எனும் பெயரில் 30 கோடி தொழிலாளர்களை வெற்று விளம்பரத்திற்காக பதிவு செய்தனர். அவர்கள் நலனுக்காக இது வரை ஒரு பைசா கூட ஒதுக்கவில்லை.
மாநில அரசுகளால் நடத்தப்படும் ‌கட்டிட தொழிலாளர் நல வாரியங்களை செயலிழக்கச் செய்து, அதில் உள்ள ரூபாய் ஒரு லட்சம் கோடி தொழிலாளர் பணத்தை ஏப்பம் விட ஒன்றிய அரசு முயல்கிறது.
ஆண்டுக்கு 25 நாள் கூட வேலையளிக்க முடியாத அளவுக்கு கிராமப்புற 100 நாள் வேலை உறுதி திட்ட நிதி வெட்டிக் குறைக்கப்பட்டுள்ளது. சுமார் 6 கோடி தொழிலாளர்கள் வேலை அட்டை பெற்றிருந்தும் வெவ்வேறு காரணங்களை சொல்லி அவர்களுக்கு வேலை மறுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் 70 முதல் 80 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு தேடி வருகிறார்கள். ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் வேலையின்மை விகிதம் 5.7%ல் இருந்து 17.5%ஆக அதிகரித்துள்ளது. அதிலும் கடந்த இரண்டு ஆண்டுகளில், வேலை கிடைக்காத இளைஞர்களின் எண்ணிக்கை இரு மடங்காகி இருக்கிறது. வேலை கிடைக்காத மக்கள் தொகையில் 83% பேர் 34 வயதுக்கு கீழுள்ள இளைஞர்கள் என்று ஐஎல்ஓ தெரிவிக்கிறது.
கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து வரும் சிறு, குறு,நடுத்தர தொழில்கள் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. பெருந்தொற்று, பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, மூலப்பொருள் விலையேற்றம், உற்பத்திப் பொருள் இறக்குமதி போன்ற காரணங்களால் 2 கோடிக்கும் அதிகமான சிறு குறு நடுத்தர தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. வேலை செய்து பொருள் ஈட்டுவதாக சொல்லப்படுவர்களின் எண்ணிக்கையில் 58% -அதாவது ஒன்பதரை கோடிப் பேர்- சுயதொழில் புரிபவர்களாவர். இவர்களில் பெரும்பாலோர் ஈட்டுவது அற்பத் தொகைகளே ஆகும்.
விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு, தவிர்க்க முடியாத செலவினங்கள் அதிகரிப்பதால் உலகத்தில் மிகக் கடும் பட்டினியில் உள்ள 16 நாடுகளில் ஒன்று இந்தியா என்னும் நிலை ஏற்பட்டுள்ளது. புரதச் சத்து குறைபாட்டால் 36 விழுக்காடு குழந்தைகள் எடை குறைவாகப் பிறக்கிறார்கள், 38 விழுக்காடு குழந்தைகள் வளர்ச்சி குறைபாட்டுடன் உள்ளனர்.
ஜிஎஸ்டி வரி மூலம் வசூலிக்கப்படும் தொகை ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து கொண்டே போகிறது. சாமானிய மக்களிடமிருந்து 67% வசூலிக்கப்படுகிறது. ஆனால் பெரும் பணக்காரர்களான 10% பேர் வெறும் 3 சதம்தான் வரியாகச் செலுத்துகிறார்கள். கார்ப்பரேட் வரி 32% வரை இருந்தது. இப்போது அது 22 சதமாக குறைக்கப்பட்டு விட்டது. 1% என்பது 50 ஆயிரம் கோடியை விட அதிகம்.
2014 ஆம் ஆண்டில் மாத வருவாய் நகரங்களில் ரூ 1407 என்று வறுமைக்கோடு வரையறுக்கப்பட்டு இருந்தது. அரசாங்கத்தின் புள்ளிவிவரப்படி, 10 ஆண்டுகளில் வறுமை கோட்டு வருவாய் ரூ.2279 என்று உயர்ந்திருக்க வேண்டும். ஆனால் 2023ல் நகர்ப்புற வறுமைக்கோட்டு வருவாய் ரூ.1286 என்று, 2014ல் இருந்ததை விட குறைவாக வரையறுத்தது. 2014ம் ஆண்டை விட குறைவான வருவாயை நிர்ணயித்து விட்டு, 25 கோடி பேரை வறுமை கோட்டிலிருந்து மீட்டுள்ளதாக பாஜக அரசு பொய்யாக தம்பட்டம் அடிக்கிறது.
இந்தியாவின் பொதுக் கடன் உள்நாட்டு உற்பத்தியை விட (GDP) 82.3% ஆக அதிகரித்துள்ளது. கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்திய குடும்பங்களின் கடன் அதிகரித்து சேமிப்பு வீழ்ந்துள்ளது, நாட்டின் பொருளாதாரம் ஆபத்தில் உள்ளது. மக்கள் வறுமையிலும், கடன் வலையிலும் சிக்கித் தவிக்கின்றனர். நாட்டின் செல்வம் குறிப்பிட்ட சில கார்ப்பரேட் நிறுவனங்களின் கைகளில் குவிந்துள்ளது.
குறைந்தபட்ச ஆதார விலை உறுதி செய்வது உள்பட போராடிய விவசாயிகளுக்கு தந்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. தொழிலாளர்கள், விவசாயிகள், மக்கள் போராட்டங்களின் போது எதிரி நாட்டு ராணுவத்தை எதிர் கொள்வது போன்ற மூர்க்கத்தனத்துடன் பாஜக அரசு கடுமையான தாக்குதல்களை தொடுத்தது.
ராமர் கோவில் திறப்பு விழா கைகொடுக்கும் என்று பாஜக அரசு நம்பியது. சட்ட பூர்வமான தேர்தல் பத்திர மோசடியை உச்ச நீதிமன்றம் தடை செய்த நிலையில் சிஏஏ சட்டத்திற்கு விதிகள் உருவாக்கியது. பொய், மோசடி,ஊழல், ஊதாரித்தனம், ஆணவம், சர்வாதிகாரம், மக்களை பிளவு படுத்தும் வெறுப்பு அரசியல் இவற்றின் மொத்த உருவமான மோடி ஆட்சியை வீழ்த்தி நாட்டை காப்போம் எனும் முழக்கத்துடன் மத்திய தொழிற்சங்கங்களும், ஐக்கிய விவசாயிகள் முன்னணியும் இணைந்து போராடி வருகிறோம்.
இந்த நிலையில் 18 ஆவது மக்களவை தேர்தல் நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி பாஜக மோடி ஆட்சி அகற்றப்பட்டது என்ற மகிழ்ச்சியான செய்தி வெளிவரும் நிலை உருவாகியுள்ளது.
இந்தியா கூட்டணி கட்சிகள் தொழிலாளர், விவசாயிகள் போராட்டங்களில் ஆதரவளித்தன; ஜனவரி 30, ஆகஸ்ட் 24 தேதிகளில் டெல்லி மாநாட்டு பிரகடனங்களை மத்திய தொழிற்சங்கங்களும், ஐக்கிய விவசாய முன்னணியும் இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு தந்துள்ளன. கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக இந்தியா கூட்டணி கட்சிகளும் உறுதி அளித்துள்ளன. ஆட்சி மாற்றத்தின் விளைவாகவும், தொழிலாளர் வர்க்க பிரதிநிதிகள் எண்ணிக்கை அதிகரிப்பாலும் இழந்த உரிமைகளை மீட்பதற்கு வழி பிறக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. உரிமை மீட்பு போராட்டங்களை வெற்றியை நோக்கி தொடர்வோம்.
தோழர் சிங்காரவேலர் இந்தியாவில் முதல் மே தினம் கொண்டாடிய நூற்றாண்டை கொண்டாட கடந்த ஆண்டு தயாரான போது, தமிழ்நாட்டில் தொழிலாளர்களின் வேலைநேரத்தை அதிகரிக்கும் தொழிற்சாலை சட்டத்திருத்தத்தை முதலாளிகளுக்கு ஆதரவாக தமிழ்நாடு அரசு கொண்டுவந்தது. தமிழ்நாட்டின் தொழிலாளி வர்க்கத்துடன் மக்களும் இணந்து போராடினர். சட்டத்திருத்தம் திரும்ப பெறப்பட்டது.
போக்குவரத்து, மின்சாரம், டாஸ்மாக், டிஎன்சிஎஸ்சி, ஆவின், மருத்துவம், உள்ளாட்சி உள்ளிட்ட தொழிலாளர்களின் நியாயமான, நீண்ட நாள் கோரிக்கைகள் தீர்வு காணப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன. பழைய ஓய்வூதியத் திட்ட அமலாக்கம் கானல் நீராக உள்ளது.
போக்குவரத்து, மின்சாரம், சிவில் சப்ளை போன்ற கேந்திரமான நிறுவனங்களில் ஒப்பந்த முறை மற்றும் அவுட்சோர்சிங் போன்ற பெயர்களில் நிரந்தரமற்ற, சட்டப் பாதுகாப்பு ஏதுமற்ற தொழிலாளர்கள் நுழைக்கப்படுகிறார்கள்.
ஐசிடிஎஸ்,ஆஷா,மக்களைத் தேடி மருத்துவம், டெங்கு கொசு ஒழிப்பு, அமரர் ஊர்தி,108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர் போன்ற திட்ட ஊழியர்களை தொழிலாளி என்ற வரையறைக்குள் கொண்டு வராமல் கடுமையான உழைப்புச் சுரண்டல் நடைபெறுகிறது.
நிரந்தரத்தன்மை வாய்ந்த பணிகளுக்கு வேட்டு வைக்கப்படுகிறது. உள்ளாட்சி துறையில் கீழ் நிலையில் பணி அனைத்தும் அவுட்சோர்சிங் செய்யப்படுகிறது. சமூகத்தின் அடித்தட்டில் உழல்கிற ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை பறித்து, முந்தைய நிலையை விட மோசமாக ஊதியத்தை குறைத்து, வேலைப்பளுவை அதிகரித்து, ஆட்குறைப்பை திணிக்கிறது. நிரந்தரத் தொழிலாளர் என்ற நிலையே இனி இல்லை எனும் நிலை உருவாக்கப் படுகின்றது. இது தமிழ்நாடு அரசின் சமூக நீதிக் கோட்பாடுகளுக்கு விரோதமானதாகும்.
சங்கம் அமைக்கும் உரிமை, கூட்டு பேர உரிமை மறுக்கப்படுகிறது. தலையிட வேண்டிய தொழிலாளர் துறை, மாநில அரசின் கொள்கைகளுக்கு விரோதமாக, ஒன்றிய அரசின் சட்டத் தொகுப்புகளை வரவேற்று அமலாக்க ஆயத்தமாக உள்ளது.
செயலி மூலமாக, உணவு உள்ளிட்ட பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு கொண்டு சேர்க்கும் ‘கிக்’ ஊழியர்கள் பணி பாதுகாப்பற்ற சூழலில் குறைந்த வருவாயில் பணியாற்றுகிறார்கள். இவர்களை தொழிலாளர் சட்டத்திற்குள் கொண்டு வர வேண்டிய நிலையில், அமைப்புசாரா தொழிலாளர் வாரியத்தில் சேர்க்க மட்டுமே தமிழ்நாடு அரசு முன்வந்துள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட குறைந்த பட்ச ஊதியத்தை கறாராக செயல்படுத்த வேண்டிய கடமையைக் கொண்ட மாநில அரசாங்கமே, அதைவிடவும் ஆகக் குறைந்த ஊதியத்தை வழங்கலாம் என்று துறைவாரியான அரசாணைகள் வெளியிடுகிறது.
நிரந்தரமற்ற தொழிலாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த கலைஞர் அவர்கள் ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையாணைகள் சட்டத் திருத்தம் பல ஆண்டுகளுக்கு பின்னர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றது. அதற்கு விதிகள் உருவாக்கி அமுல்படுத்துவதற்கு மாறாக அந்த சட்டத் திருத்தத்தையே நீர்த்துப் போகச் செய்யும் வகையில் பெரும் காலதாமதம் ஏற்படுத்தப்படுகிறது.
கட்டிடம் மற்றும் இதர உடல் உழைப்பு தொழிலாளர் வாரியங்களில் பதிவு செய்வதும். நிதிப் பயன்கள் பெறுவதும் பெரும் கஷ்டமாக உள்ளது. இதுவரை ஆன்லைன் முறை வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்லப்பட்டு வந்தது. ஆனால் ஆன்லைன் முறை ஏராளமான குளறுபடிகளைக் கொண்டதாக இருக்கிறது. வருடக் கணக்கில் அதை சரி செய்யாமலேயே, தொழிலாளர்களை அலைக்கழிக்கும் முறை நல்லதல்ல. நிதிப் பலன்களும் பாரபட்சமாக வழங்கப் படுகின்றது. நல வாரியங்கள் எந்த அதிகாரமும் இன்றி பெயரளவுக்கு செயல்படுத்தப்படுகின்றன. அரசு எடுக்கும் முடிவுகளை பின்னேற்பு செய்வதற்காக ஒரு வாரியம் அவசியமே இல்லை.
சட்ட மன்றத்தின் நிதி நிலை அறிக்கை கூட தொழிலாளர் நலன் என்பதை விட்டுவிட்டு விவாதிக்கும் அளவிற்கு சுருங்கிப் போனது.
தொழிலாளி வர்க்கத்தின் ஆயுதம் ஒற்றுமையும், போராட்டமும், சர்வதேசியமும் ஆகும். அந்த ஆயுதம் கொண்டு தொழிலாளர், விவசாயிகள், மக்கள் உரிமைகளை மீட்கும் போராட்டங்களைத் தொடர்வோம் என்று இந்த மே நாளில் சபதமேற்போம்.
தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக! தொழிற்சங்க ஒற்றுமை ஓங்குக!
மே தினம் நீடூழி வாழ்க! புரட்சி ஓங்குக!

    ஜி.சுகுமாரன்                         ம.இராதாகிருஷ்ணன்
மாநில பொதுச்செயலாளர்,               பொதுச்செயலாளர்,
             சிஐடியு                            தமிழ்நாடு ஏஐடியுசி

Continue Reading

நிகழ்ச்சிகள்

AITUC வழக்கு வெற்றி!

Published

on

AITUC Case

AITUC சங்கத்தின் வழக்கு வெற்றி!

ஸ்ரீ கார்த்திக் பேப்பர் மில்ஸ்-தொழிலாளர்கள் வழக்கு வெற்றி!

கோவை தொழிலாளர் நீதிமன்றம் தீர்ப்பு!

விபரம் வருமாறு:ஆழியாறு அருகே புளியங்கண்டியில்”ஸ்ரீ கார்த்திக் பேப்பர் மில்ஸ்” இயங்கிவருகிறது.கடந்த 2020-ம் ஆண்டு, கொரோனா பெருந்தொற்று உச்சத்தில் இருந்த காலத்தில் மேற்குறித்த ஆலையில் பணிபுரிந்து வந்தசுமார் ஐம்பத்தி ஐந்து தொழிலாளர்கள் கோவை மாவட்ட பொறியியல் பொது தொழிலாளர் சங்கத்தில்(ஏஐடியுசி) சேர்ந்தனர்.சங்கத்தில் சேர்ந்த ஒரே காரணத்திற்காக, நிர்வாகம் அனைத்து தொழிலாளர்களுக்கும் அவர்களைப் பழிவாங்க் கூடிய முறையில் பணி மறுப்பு செய்தது.கிளைச்சங்க நிர்வாகிகளின் மீது பகுதி நேரக் கதவடைப்பு எனும் நடவடிக்கையை மேற்கொண்டது.பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கு சங்கம் எடுத்த முயற்சிகளுக்கு நிர்வாகம் ஒத்துழைக்கவில்லை.தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தினோம்.மாவட்ட ஆட்சித்தலைவர்,காவல்துறை அதிகாரிகள் எனப் பலரிடமும் முறையீடுகள் செய்தோம்.இடையில்,வேலையின்மையினால்ஏற்பட்ட வருமான இழப்பின் காரணமாக,அதைத் தாங்க இயலாமல் பல தொழிலாளர் சங்கத்திலிருந்து விலகிக் கொண்டனர்.ஆனால் அவர்களில் யாரும் மற்றவர்களுக்குத் தீங்கிழைக்கும் காரியம் எதையும் செய்யவில்லை.

இறுதியில் பின்வரும் பதினெட்டுத் தொழிலாளர்கள் நெருக்கடிகளைத் தாங்கி சங்கத்துடன் உறுதியாக நின்றனர்.

தொழிலாளர்கள்விபரம்:

1)என்.தங்கவேல்2)

டி.தேவேந்திரன்

3)எஸ்.பார்த்திபன்

4)ஆர்.சக்திவேல்

5)பி.பட்டீஸ்வரன்

6)பி.கோபால்

7)எஸ்.மணிகண்டன்

8)கே.குட்டிமுத்து

9)எம்.துரைசாமி

10)எம்.செல்வராஜ்

11)கே.தண்டபாணி

12)டி.நடராஜ்

13)என்.மனோகரன்

14)எம்.செந்தில்குமார்

15)ஏ.ஜோதீஸ்வரன்

16)கே.கார்தாதிகேயன்

17)டி.கருப்புசாமி

18)எம்.பாலசுப்பிரமணியம்

தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படவேண்டும் என்பது தொடர்பான வழக்கு கோவை தொழிலாளர் நீதிமன்றத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்தது.நேற்றைய தினம்(12.3.2024) கோவை தொழிலாளர் நீதிமன்றம், தாவாவில் சம்பந்தப்பட்டுள்ள பதினெட்டு தொழிலாளர்களுக்கும் பணித் தொடர்ச்சியுடன் வேலையும்,அவர்களுக்கு வேலை மறுக்கப்பட்ட காலத்திற்கு 25% சம்பளம் மற்றும் அது தொடர்பான இதர சலுகைகளும் நிர்வாகம் வழங்க வேண்டும் எனத் தீர்ப்பு வழங்கியுள்ளது.இது ஒரு முக்கியமானதும், நம்பிக்கையளிக்கக் கூடியதுமான தீர்ப்பாகும்.இதன் மீது நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுப்பார்கள் என்பது தெரியாது.ஒரு வேளை அவர்கள் இதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்கின்ற பட்சத்தில், தொழிலாளர்களுக்கு நீதிமன்றம் வழங்கி உள்ள தீர்ப்பின்படி அவர்களுக்கான பின்பாக்கி ஊதியத்தையும் மேலும் வழக்கு நடக்கும் காலத்தில் மாதா மாதம் தொழிலாளர்கள் ஏற்கனவே பெற்றுக் கொண்டிருந்த ஊதியத்தையும் நிர்வாகம் வழங்க வேண்டிய நிலை ஏற்படும்.

1)முதலாவதாக இந்த வழக்கு வெற்றி பெற்றிருப்பதில் சங்கத்தின் கெளரவ தலைவர் வழக்கறிஞர் தோழர் கே.சுப்பிரமணியன், தலைவர் வழக்கறிஞர் தோழர் எஸ்.ராதாகிருஷ்ணன்,வழக்கறிஞர் தோழர் சதீஷ்சங்கர் ஆகியோரின் பங்களிப்பு முக்கியமானது.குறிப்பாக,நீதிமன்ற நடவடிக்கைகளில் நேரடியாகப் பங்கேற்று அவ்வப்போது தலையீடுகள் செய்தும்,திறம்பட வாதிட்டும் இதில் தோழர் சதீஷ்சங்கர், வழக்கறிஞர் திரு.ஜெகநாதன் மற்றும் வழக்கறிஞர் அலுவலகப் பணியாளர் திரு.சின்னராஜ் குறிப்பிடத்தக்க பங்குப்பணி ஆற்றியுள்ளார்.

2) நீதிமன்ற நடவடிக்கைகளோடு, தொழிற்சங்க ரீதியில் நேரடியான பலகட்டப் போராட்டங்களையும் நாம் நடத்தி இருக்கின்றோம். அத்தகைய போராட்டங்களில் ஆனைமலை ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினுடைய தோழர்கள் குறிப்பாக, கட்சியின் மூத்த தலைவர் தோழர் பி.கண்ணப்பன் அன்றைய செயலாளர் தோழர் காளீஸ்வரன்,இப்போதைய செயலாளர் தோழர் ஆறுமுகம் உள்ளிட்ட தோழர்கள் நமது போராட்டங்களில் நேரடியாக பங்கேற்றும், உறுதுணையாக இருந்தும் செயலாற்றி இருக்கிறார்கள்.

3)அதேபோல் தமிழ் நாடு ஏஐடியுசி -யின் செயலாளர்,மேனாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர்எம்.ஆறுமுகம் போராட்டங்களில் பங்கேற்று பலவிதங்களிலும் உதவி புரிந்துள்ளார்.

4)இந்த வழக்கின் வெற்றிக்கு ஒரு வகையில் தங்களுடைய பங்களிப்பினைச் செய்துள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்தோழர் இரா.முத்தரசன், ஏஐடியுசி -யின் அகில இந்திய செயலாளர்களில் ஒருவரான தோழர் டி.எம்.மூர்த்தி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் தோழர் பால்பாண்டியன் மற்றும் முகம் காட்ட விரும்பாத ஓய்வு பெற்ற தொழிலாளர் துறை அலுவலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆகியோருக்கும் நன்றியை உரித்தாக்குகிறோம்.

5) சங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து உறுதியாக இதுவரையிலும் போராடியுள்ள கார்த்திக் பேப்பர்ஸ் தொழிலாளர்களுக்கும்,அவர்தம் குடும்பத்தார் அனைவருக்கும் சங்கத் தலைமையின் சார்பில் வாழ்த்துகளை உரித்தாக்குகிறோம்.

வழக்கிற்கான தயாரிப்பு நடவடிக்கைகளில் தோழர்கள் குட்டி முத்து(குமார்), தேவேந்திரன் உள்ளிட்ட தோழர்கள் சிரமம் பாராது தொடர்ந்து பங்களிப்புச் செய்து வந்துள்ளனர்.அவர்களுக்கு நமது தனிச் சிறப்பான வாழ்த்துகள்.

தொடர்ந்து போராடுவோம்!முன்னேறுவோம்!நல்வாழ்த்துகளுடன்,

நிராவாகிகள் மற்றும் நிர்வாகிகக்குழு உறுப்பினர்கள்,KMPPTS-AITUC.

Continue Reading

Trending

Copyright © 2022 Tamilnadu AITUC. Developed by : Marxist Info Systems, Coimbatore.