தொழிலாளர் ஆணையர் அவர்கள்,
தேனாம்பேட்டை,
சென்னை 600006.
அய்யா,
பொருள்: குறைந்தபட்ச ஊதிய சட்டம் 1948 பல்வேறு தொழில்களுக்கு
01.04.2024 முதல் வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி கணக்கீடு
அட்டவணை தொடர்பாக
பார்வை: 1.தங்கள் கடிதம் செ3/ 5476/ 2024-3 நாள் 29.2.2024
2. தமிழ்நாடு நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தின் சுற்றறிக்கை
ந.க.எண்:24608/2022/ இஎ- 1, நாள் 27.10.2023
*************************
பார்வையில் கண்ட தங்களது கடிதமும் அதனுடன் இணைக்கப்பட்ட அகவிலைப்படி கணக்கீடு அட்டவணையும் கிடைக்கப் பெற்றோம்.
அதில் வரிசை எண் 41ல், உள்ளாட்சி தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி பற்றிய விவரம் உள்ளது. (2டி) எண் 36 நாள் 20.6.2023 தேதியிட்ட அரசாணையின் படி, அகவிலைப்படி கணக்கு தரப்பட்டுள்ளது.
ஆனால் இந்த அரசாணையை நிறுத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது தாங்கள் அறிந்ததே.
மேலும், உள்ளாட்சிகளின் நிர்வாக அமைப்பான நகராட்சி நிர்வாக இயக்குனரகத்தின் பார்வை இரண்டில் கண்ட சுற்றறிக்கையில் கீழ்க்கண்டவாறு கூறப்பட்டுள்ளது:
“எனவே அரசினால் குறைந்த பட்ச கூலி சட்டம் 1948ன் வெளியிடப்பட்ட எண்.62 தொழிலாளர் மற்றும் வேலைவாய்புத்துறை, நாள் 11.10.2017-ன்படி நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச கூலி மேற்படி ஒப்பந்த பணியாளர்களுக்கு பிரதி மாதம் தவறாமல் வழங்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும்.
2023-24 ஆம் ஆண்டிற்கான குறைந்தபட்ச கூலி வழங்க வேண்டி பிறப்பிக்கப்பட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அரசாணை எண்.36. நாள் 16.06.2023 தடையானை பிறப்பிக்கப்பட்டதாலும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டபடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஆணையர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.”
தங்களின் உடனடி பார்வைக்காக அந்த சுற்றறிக்கையின் நகலையும் இத்துடன் இணைத்து அனுப்பியிருக்கிறேன்.
அரசாணை எண் 36 உயர்நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டு இருக்கும்போது, அதில் கூறப்பட்டுள்ளவாறு அகவிலைப்படியை கணக்கிட்டு அனுப்புவது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும். ஒவ்வொரு உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகளும் இதனை அடிப்படையாகக் கொண்டு அகவிலைப்படியை குறைப்பதற்கு இது வழி வகுத்திருக்கிறது.
உள்ளாட்சிகளில், குறிப்பாக துப்புரவு பணிகளில் ஈடுபடுவோர் மிகவும் ஒடுக்கப்பட்ட சமூக பிரிவை சேர்ந்தவர்களாகவும், இந்த அரசாணைகளுக்குள் புகுந்து நிர்வாகத்துடன் வாதிட முடியாதவர்களாகவும் இருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும்.
இந்நிலையில் இவ்வாறு ஒரு ஆவணத்தை நிர்வாக அதிகாரிகளின் கையில் கொடுத்திருப்பது, தமிழ்நாடு அரசே இந்தத் தொகையை தான் கொடுக்க உத்தரவிட்டிருக்கிறது என்று சொல்லி தொழிலாளர்களை ஏமாற்றுவதற்கு இது பெரும் வாய்ப்பு அளித்திருக்கிறது.
சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தும், அதை மீறி அரசாணையை அமலாக்க முயல்வதும், தடை விதிக்கப்பட்டுள்ள ஆணையின்படி அகவிலைப்படி கணக்கிட்டு சொல்வதும் நீதிமன்ற உத்தரவை அவமதிப்பது ஆகும்.
ஆகவே தாங்கள் தயவு செய்து தாங்கள் வெளியிட்டுள்ள பட்டியலுக்கு தக்க திருத்தம் செய்து மறு வெளியீடு செய்யுமாறு வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி
தங்கள் உண்மையுள்ள
(ம.இராதாகிருஷ்ணன்)
பொதுச் செயலாளர்