தமிழ்நாடு ஏஐடியூசி 20வது மாநில மாநாடு திருநெல்வேலியில் டிசம்பர் 1, 2, 3 தேதிகளில் நடைபெற இருக்கிறது. 1908ஆம் ஆண்டிலேயே கோரல் மில் தொழிலாளர்களை திரட்டி, வஉசி
வேலை நிறுத்தம் நடத்திய வீரம் விளைந்த மண்ணில் மாநாடு நடைபெறுகிறது- ஒருபுறம் தொழில்களை நடத்துவதற்கு முதலாளிகளுக்கு வசதி செய்து கொடுப்பது என்ற பெயரில் நூறாண்டுகளுக்கும் மேலாக இந்திய தொழிலாளி வர்க்கம் போராடி பெற்ற உரிமைகளை எல்லாம் மொத்தமாக பறித்து விட மோடி அரசாங்கம் பெரு முயற்சி எடுத்து வருகிறது. கார்ப்பரேட் நலன்களைப் பாதுகாப்பது தான் மோடி ஆட்சியின் ஒரே இலக்கு. அதோடு சேர்த்து காலம் கடந்து போன பத்தாம் பசலித்தனமான மூட நம்பிக்கைகளை இந்திய மக்களின் மூளைக்குள் பல்வேறு வகைகளில் மோடி அரசு திணித்து வருகிறது.
பகுத்தறிவுக்கு ஒவ்வாத விஷயங்களை மதம், சாதி, வேதம், புராணங்கள், ரிஷி வாக்கு என்றெல்லாம் சொல்லி அறிவியலுக்கு எதிரான விஷயங்கள் பரப்பப்படுவது தற்செயலானது அல்ல. “நீ இப்போது எவ்வாறு இருக்கிறாயோ, அது உன் தலைவிதி. அதனை உள்னால் மாற்ற முடியாது. இப்போது கஷ்டப்பட்டால், அடுத்த பிறவியில் நன்றாக இருப்பாய்” என்று கூறி, எந்தக் கேள்வியும் எழுப்ப முடியாதவனாக மனிதரை மாற்றி, அவர்களது போராட்ட உணர்வை முனை மழுங்க செய்வதுதான் இந்த பரப்புரைகளின் அடிநாதமாகும்.
ஆனால் இதே ஆட்சியில், இந்திய விவசாயிகளின் ஓராண்டு காலப் போராட்டம், காற்புள்ளி அரைப்புள்ளி கூட மாற்ற மாட்டோம் என்று இறுமாப்போடு சொல்லப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை முழுமையாகக் கிழித்து எறிந்து, மக்களின் ஆற்றலே யாரைக் காட்டிலும் பேராற்றல் மிக்கது என்பதை நிரூபித்திருக்கிறது.
வேளாண் சட்டங்களை நிறைவேற்றக்கூடாது என தமிழ்நாடு அரசு சட்டப்பேரவை தீர்மானம் நிறைவேற்றியது. ஒன்றிய அரசு கொண்டு வந்த நீட் திட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு அரசு அழுத்தமாக வழக்காடுகிறது. ஆனால் தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை தமிழ்நாடு அரசின் தொழிலாளர் துறை மிகுந்த ஆர்வத்தோடு வரவேற்று அமுலாக்க ஆயத்தமான நிலையில் இருக்கிறது.
இனிமேல் மாநகராட்சிகளில் ஊழியர்களை பணி நியமனம் செய்வதில்வை, அனைத்தையும் வெளிச்சந்தைக்கு அனுப்புவது என்று தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டிருப்பது அந்த அரசு கூறும் திராவிட மாடல் என்ற பதத்துக்கு எதிரானதாகும். ஒடுக்கப்பட்ட மக்களை ஒட்டச் சுரண்டுவதற்கு அதிகாரபூர்வமாக வழி வகுப்பது, சமூக நீதி அல்ல; அப்பட்டமான சமூக அநீதியாகும்.
பாரத தேசத்தை பாகுபடுத்த வந்துள்ள தீயசக்திகளிடமிருந்து தமிழ்நாட்டை பாதுகாப்பதற்காக இந்த அரசை ஆதரிக்க வேண்டிய கடமை தொழிலாளர் களுக்கு இருக்கிறது. அதே நேரத்தில் தொழிலாளர் நலன்களை பறிப்பதற்காள வழியில் செல்லுமானால் தடுத்து நிறுத்த வேண்டிய கட்டாயமும் தொழிலாளர் களுக்கு உண்டு. இதற்கான அழுத்தம் திருத்தமான கூட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டே ஆக வேண்டும்.
எடுத்தோம் கவிழ்த்தோம் என்றில்லாமல் ஆக்கபூர்வமாக தமிழ்நாட்டு தொழிலாளி வர்க்கத்தின் ஆற்றலை ஒன்றிய அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் உணர்த்த வேண்டிய ஆக்கபூர்வமான வழிமுறைகளை கண்டறியவும், செயல்படுத்தவும் திட்டமிடுவதற்கான மகத்தான பொறுப்பு எஐடியூசியின் மாநில மாநாட்டுக்கு இருக்கிறது.
ஏஐடியூசியின் விதிமுறைகளின் படி இணைப்புச் சங்கங்களில் இருந்து தேர்வு செய்யப்படும் பிரதிநிதிகள், ஒருவர் தவறாமல் அனைவரும் மாநாட்டுக்கு வாருங்கள். தவறாமல் கருத்துக்களை முன் வையுங்கள்.
ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை குறைந்தபட்ச ஊதிய சட்டப்படி குறைந்தபட்ச ஊதியமானது திருத்தம் செய்யப்பட வேண்டும். இதனால் தோட்டம், சுரங்கம், கட்டுமானம், விவசாயம், கைத்தொழில், வீட்டு வேலை போன்ற தொழில்களில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள் பலன் பெறுவார்கள். இந்த ஊதியம் குறித்து கெடுவாய்ப்பாக விவாதங்கள் நடைபெறுவதில்லை. 15-வது இந்திய தொழிலாளர் மாநாட்டு முடிவின்படி அறிவியல் பூர்வமான வகையில் குறைந்தபட்சம் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்யவேண்டும். இதனை உச்ச நீதிமன்றமும் ரெப்டகாஸ் பிரெட் வழக்கிலும் (1992) , உனிச்சோயி & மற்றவர்கள் எதிர் கேரள அரசு வழக்கிலும் ( Unichoyi & others vs The state of Kerala) (1962) உறுதிப்படுத்தியுள்ளது. குறைந்தபட்ச ஊதியம் தேவையின் அடிப்படையில் ஆனதாகும். உணவு, உடை, இருப்பிடம், போக்குவரத்து, மருத்துவம், கல்வி போன்ற செலவினங்களோடு, திருமணம், திருவிழாக்கள் உள்ளிட்ட சமூக கலாச்சார நிகழ்வுகளுக்காகும் செலவுகளையும் சேர்த்து ஊதியமானது கணக்கிடப்பட வேண்டும். கீழ்கண்ட காரணிகளின் அடிப்படையில் குறைந்தபட்ச ஊதியம் கணக்கிடப்பட வேண்டும் ரெப்டகாஸ் வழக்கின் அடிப்படையில் வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டுள்ளன:
மூன்று நுகர்வோரின் செலவுகள் ஒரு சம்பளதாரருக்கு கணக்கிடப்பட வேண்டும்
ஒரு சராசரி மனிதனுக்கு நாளொன்றுக்கு 2700 கேலரி சத்து தேவைப்படும் உணவு தேவை என டாக்டர். அக்ராய்டு பரிந்துரைத்துள்ளார்.
ஒரு ஆண்டுக்கு 72 கஜம் துணி
அரசாங்க தொழில் பகுதியில் உள்ள வீட்டு வசதிப்படி வாடகை
ஒட்டுமொத்த சம்பளத்தில் 20% எரிபொருள், விளக்கு உள்ளிட்ட இதர செலவின வகைகளுக்கு
குழந்தைகள் கல்வி, மருத்துவம், குறைந்த பட்ச பொழுபோக்கு, முதுமைக்கால பாதுகாப்பு, திருமணம் போன்றவைகள் குறைந்த பட்ச ஊதியத்தில் 25 % ஆக கணக்கிடப்படும்.
இதுதான் குறைந்த பட்ச ஊதியத்தை நிர்ணயிக்க ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையாகும். ஆனால் மத்திய, மாநில அரசாங்கங்கள் தன்னிச்சையாக ஊதியத்தை திருத்துகின்றன. மத்திய மாநில அரசுகள் அதனுடைய நான்காம் பிரிவு ஊழியர்களுக்கு ரெப்டகாஸ் வழக்கு அடிப்படையில் நியாயமாக ஊதியத்தை நிர்ணயம் செய்கின்றன. ஆனால் இத்தகைய நடைமுறையை தனியார் துறை தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் நிர்ணயிக்கும்போது கடைபிடிப்பதில்லை. இதனால் அரசாங்கம் பெருநிறுவனங்களின் நலனைப் பாதுகாக்க எடுக்கும் பாசங்குத்தனமான நடவடிக்கை அம்பலமாகிறது.
குறைந்த பட்ச ஊதியம் என்பது போராட்டங்களின்போது பேசப்படும் முழக்கம் அல்ல என்று ஏஐடியுசி கருதுகிறது. அறிவியல்பூர்வமாக குறைந்தபடச ஊதியத்தை நிர்ணயம் செய்யும் வகையில் நமது பரப்புரைகளை மேற்கொள்ள வேண்டும். ஆலோசனைக் குழுக்களில் அதற்குரிய வாதுரைகளைச் செய்ய வேண்டும். சட்டப் போராட்டங்களை நடத்த வேண்டும். கர்நாடக மாநில ஏஐடியுசி, இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டு, அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி குறைந்த பட்ச ஊதியமானது ரூ.31,556 என்ற முடிவுக்கு வந்துள்ளது. இதற்காக மாநில, மாவட்ட அளவில் போராட்டங்களை நடத்தியும். அதனைத் தொடர்ந்து சட்டப்போராட்டத்தையும் நடத்துகிறது.
மக்களுடைய வாங்கும்சக்தி தொடர்ந்து குறைந்து வருகிறது. குறைந்த பட்ச ஊதியத்தை சரியாக திருத்துவதன் மூலம் தனியார் நுகர்வு அதிகரிக்கும்; அது பொருளாதாரத்திலும் பிரதிபலிக்கும். தனியார் நுகர்வு என்பது மொத்த ஜிடிபியில் 60 % ஆகும். கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு மக்கள் செலவு செய்வது குறைந்துள்ளது. பணவீக்கம் அதிகரித்துள்ளது. அவர்களின் கடன் அதிகரித்துள்ளது.
மக்களின் வாங்கும் சக்தி குறைந்துள்ளதால் சந்தையில் பொருட்களின் தேவை குறைந்துள்ளது. இதனால் உற்பத்தி மேலும் குறைந்து, வேலைவாய்ப்பு பாதிக்கிறது. எனவே மக்களின் உண்மையான ஊதியம் பாதுகாக்கப்படுவது மட்டுமின்றி, திருத்தப்பட வேண்டும்.தற்போதைய கால மாற்றத்திற்கொப்ப இணைய வசதியும் குறைந்தபட்ச ஊதியத்தில் இடம்பெற வேண்டும். பெற்றோர்களை பாதுகாக்க வேண்டிய சட்டபூர்வ நிலையும் வந்துள்ளதால் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது. எனவே பெற்றோர்களுக்கான செலவையும் சேர்த்து, சம்பளம் வாங்கும் ஒருவருக்கு ஐந்து அலகுகள் வீதம் குறைந்த பட்ச ஊதியம் கணக்கிட வேண்டும்.
எனவே விசாகப்பட்டினத்தில் செப்டம்பர் 1முதல் 3 வரை கூடியுள்ள ஏஐடியுசி பொதுக்குழுவானது, அரசுக்கும் பெருநிறுவன நலன்களுக்கும் இடையில் உள்ள உறவுக்கு எதிராக அறிவியல்பூர்வமான வகையில் குறைந்தபட்ச ஊதியத்தை திருத்துவற்கான பரப்புரையில் தீவிரமாக ஈடுபட வேண்டுமென தீர்மானிக்கிறது.
மூன்று புதிய குற்றவியல் சட்டங்களையும் திரும்பப்பெறுக – தொழிற்சங்கங்களின் கூட்டறிக்கை
ஜூலை ஒன்றாம் நாள் முதல் அமலாக்கப்பட்டுள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு இல்லாமல் இருக்க வாய்ப்புள்ளது.
இந்தச் சட்டங்கள் முறையான விவாதங்கள் இல்லாமல், பாராளுமன்ற குழு கொடுத்துள்ள பரிந்துரைகளைக் கூட கண்டுகொள்ளாமல், நகல் கொள்கையை பொதுவெளியில் வைக்காமல் மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது.
வெள்ளையர் கால சட்டங்களுக்குப் பதிலாக இந்தச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என்று சொல்லப்படுவது தவறாகும். ஏனெனில் பழைய சட்டங்களின் அனைத்துப் பிரிவுகளும் புதிய சட்டங்களில் உள்ளன; இன்னும் சொல்லப்போனானால் சில பிரிவுகள் கடுமையாகவும் உள்ளன. உதாரணமாக இந்திய தண்டனைச் சட்டத்தின் 124 பிரிவு புதிய சட்டத்திலும் உள்ளது. அதற்கு மூன்று வருட சிறைத்தண்டனை என்பது ஏழு ஆண்டாக உயர்த்தப்பட்டுள்ளது.
மக்கள் எப்படி ஒன்றுகூடினாலும், தலைவர்கள் ஒன்றுகூடினாலும் அவர்களை தீவிரவாதிகள் என்று சொல்ல முடியும். அனைத்து தொழிற்சங்க நடவடிக்கைகளையும் இந்தப் பிரிவின்கீழ் கொண்டுவர முடியும்.
இவற்றின் பல பிரிவுகளின் எண்கள் மாற்றப்பட்டுள்ளன. இது குழப்பத்தை உருவாக்குவதோடு, வழக்குகள் தேங்குவதை பெருமளவில் வருங்காலங்களில் அதிகரிக்கும். தற்போது கீழ்மட்ட நீதிமன்றங்களில் 6.4 கோடி வழக்குகள் சமாளிக்க முடியாத அளவுக்கு தேங்கியுள்ளன.
நூறு ஆண்டுகளுக்கும் மேலாக உருவான தீர்ப்பு வழிச்சட்டங்கள் (case law) புதிய குற்றவியல் சட்டங்களின் அமலாக்கத்தினால், இனி பயனற்றுப் போகும். இதனால் வழக்காடிகள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள் என அனைவரும் அரசியலமைப்பு முடிவுகளுக்கு வர போராட வேண்டி இருக்கும்.
காவல் ஆய்வாளர்களுக்கு முதல் தகவல் அறிக்கையை பதிவுசெய்ய முழு அதிகாரமும்- அதாவது பதிவு செய்யலாமா என்ற விருப்பமும் – கொடுக்கப்பட்டுள்ளது. பழைய சட்டத்தில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்வது ஒவ்வொரு குடிமகனின் உரிமையாகும்.
போலிஸ் காவலில் இருக்கும் காலமானது 15நாட்களில் இருந்து 60 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. தங்களது நியாயமான கோரிக்கைகளுக்காக அமைதியான வழியில் போராடுபவர்கள் மீதும், முற்றுகையிடும் (gherao) தொழிலாளர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்ய காவல்துறைக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
இது ஆட்சிசெய்பவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, அடக்குமுறையை கையாள விரும்பும் காவல் அரசிற்கு (police raj) கட்டியம் சொல்வது போல உள்ளது.
தற்போது நடைமுறையில், நீதி வழங்குவதைக் குறிக்கும் சொல்லான “நீதி வழங்கும் நீதிமன்றம்” (Court of Justice) என்ற வரையறையானது “நீதிமன்றம்”(court) என்று மாற்றப்பட்டுள்ளது.
ஏற்கனவே வாகன ஓட்டிகள் ‘மோதிவிட்டு ஓடிவிடும்’ (hit and run) வழக்குகளை எதிர்த்து போராடியதால் பின்னடைவு ஏற்பட்டது. அரசாங்கம் அந்தப் பிரிவுகளை அமலாக்கமாட்டோம் என கூறியது; ஆனால் அந்தப் பிரிவுகளை அவர்கள் நீக்கவில்லை.
இந்தி பேசாத மக்கள் இந்தியை திணிப்பதை எதிர்த்துள்ளனர். அரசியல் அமைப்புச் சட்டத்தின் உறுப்பு 348 – ம், அரசு மொழிச் சட்டமும் பாராளுமன்றம், சட்டமன்றம் இயற்றுபவை அனைத்தும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்று கூறுகிறது.
சுருக்கமாகச் சொன்னால், 2016 ல் கொண்டுவரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையைப் போன்றதொரு முட்டாள்தனமான, அதைவிட அபாயகரமான நடவடிக்கையாகும். நவ தாராளவாத கொள்கைகளுக்கு இசைவான, மக்களின் உரிமைகள் மீது தாக்குதலைத் தொடுப்பதாகும்.
மத்திய தொழிற்சங்கங்கள், சுயேச்சையான சமரமேளனங்கள், சங்கங்களின் பொது மேடையானது, புதிய குற்றவியல் சட்டங்களை நீக்கிவிட்டு பழைய சட்டங்களே தொடர வேண்டும் என கேட்டுக் கொள்கிறது. புதிய மாற்றங்கள் ஏதும் செய்ய வேண்டி இருப்பின் அதனை ஏற்றுக் கொண்டு அமலாக்குவதற்கு முன்பு பொதுவெளியில் விவாதிக்க வேண்டும்.
INTUC AITUC HMS CITU AIUTUC TUCC SEWA AICCTU LPF UTUC
குவைத் நாட்டில், தொழிலாளர் முகாமில் நடந்த தீ விபத்தில் இறந்துபோனவர்களுக்காக ஏஐடியுசியின் செயற்குழு தனது அனுதாபங்களையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.
இந்திய அரசாங்கத்தின் வெளியுறவுத்துறையும், குவைத் நாட்டின் தூதரகமும் தேவைப்படும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. வெளிநாடாக இருந்தாலும், இந்தியாவாக இருந்தாலும் புலம்பெயர் தொழிலாளர்களின் நிலமை குறித்து கவனம் கொள்வது அவசியமானதாகும். தில்லியிலும் மற்ற இடங்களிலும் ஏற்பட்ட இத்தகைய தீ விபத்துகள், தொழிலாளர்கள் பாதுகாப்பற்ற பணிச்சூழலில் இருப்பதை கவலைகொள்ள வைக்கின்றன.
“எளிதாக தொழில் செய்வதற்காக” தற்போதைய அரசாங்கம் தொழிலாளர் துறை ஆய்வுகளை நீக்குவதைப் பற்றி ஏஐடியுசி தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்துள்ளது.
இந்தியாவில் அதிகரித்து வரும் வேலையின்மையின் காரணமாக, ஏதோ வேலைக்காக இடம்பெயர்வது அதிகரித்துள்ளது. இந்த நிலையில், பணியிடங்களில் அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் முனைப்பான நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும்; அவர்களை நிலையான வெளிநாட்டு செலாவணி தரும் வாய்ப்பாக பார்க்கக் கூடாது.
2021 க்கும் 2023 க்குமான காலத்தில் 16000 புகார்கள் கிடைக்கப்பெற்றதாக, கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில் பாராளுமன்றம் தெரிவித்துள்ளது. தாமதமாக வழங்கப்படும் சம்பளம், தங்கும் இடங்களில் இடர்பாடுகள், வேலை அளிப்பவரால் இடர்பாடுகள் போன்ற புகார்கள் வந்துள்ளன. இதே போல 2022 & 2023 ஆண்டுகளில் 1400 தொழிலாளர்கள் குவைத் நாட்டில் இறந்துபோனதாக பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறந்து போனவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாயும், கடுமையாக ஊனமுற்றவர்களுக்கு ஐம்பது இலட்ச ரூபாயும் இழப்பீடாக தர வேண்டுமென ஏஐடியுசி கோருகிறது. புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான கொள்கை வேண்டும் எனவும், புலம்பெயர்ந்த தொழிலாளர் சட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் எனவும் ஏஐடியுசி கோருகிறது.