தமிழ்நாடு ஏஐடியூசி 20வது மாநில மாநாடு திருநெல்வேலியில் டிசம்பர் 1, 2, 3 தேதிகளில் நடைபெற இருக்கிறது. 1908ஆம் ஆண்டிலேயே கோரல் மில் தொழிலாளர்களை திரட்டி, வஉசி
வேலை நிறுத்தம் நடத்திய வீரம் விளைந்த மண்ணில் மாநாடு நடைபெறுகிறது- ஒருபுறம் தொழில்களை நடத்துவதற்கு முதலாளிகளுக்கு வசதி செய்து கொடுப்பது என்ற பெயரில் நூறாண்டுகளுக்கும் மேலாக இந்திய தொழிலாளி வர்க்கம் போராடி பெற்ற உரிமைகளை எல்லாம் மொத்தமாக பறித்து விட மோடி அரசாங்கம் பெரு முயற்சி எடுத்து வருகிறது. கார்ப்பரேட் நலன்களைப் பாதுகாப்பது தான் மோடி ஆட்சியின் ஒரே இலக்கு. அதோடு சேர்த்து காலம் கடந்து போன பத்தாம் பசலித்தனமான மூட நம்பிக்கைகளை இந்திய மக்களின் மூளைக்குள் பல்வேறு வகைகளில் மோடி அரசு திணித்து வருகிறது.
பகுத்தறிவுக்கு ஒவ்வாத விஷயங்களை மதம், சாதி, வேதம், புராணங்கள், ரிஷி வாக்கு என்றெல்லாம் சொல்லி அறிவியலுக்கு எதிரான விஷயங்கள் பரப்பப்படுவது தற்செயலானது அல்ல. “நீ இப்போது எவ்வாறு இருக்கிறாயோ, அது உன் தலைவிதி. அதனை உள்னால் மாற்ற முடியாது. இப்போது கஷ்டப்பட்டால், அடுத்த பிறவியில் நன்றாக இருப்பாய்” என்று கூறி, எந்தக் கேள்வியும் எழுப்ப முடியாதவனாக மனிதரை மாற்றி, அவர்களது போராட்ட உணர்வை முனை மழுங்க செய்வதுதான் இந்த பரப்புரைகளின் அடிநாதமாகும்.
ஆனால் இதே ஆட்சியில், இந்திய விவசாயிகளின் ஓராண்டு காலப் போராட்டம், காற்புள்ளி அரைப்புள்ளி கூட மாற்ற மாட்டோம் என்று இறுமாப்போடு சொல்லப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை முழுமையாகக் கிழித்து எறிந்து, மக்களின் ஆற்றலே யாரைக் காட்டிலும் பேராற்றல் மிக்கது என்பதை நிரூபித்திருக்கிறது.
வேளாண் சட்டங்களை நிறைவேற்றக்கூடாது என தமிழ்நாடு அரசு சட்டப்பேரவை தீர்மானம் நிறைவேற்றியது. ஒன்றிய அரசு கொண்டு வந்த நீட் திட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு அரசு அழுத்தமாக வழக்காடுகிறது. ஆனால் தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை தமிழ்நாடு அரசின் தொழிலாளர் துறை மிகுந்த ஆர்வத்தோடு வரவேற்று அமுலாக்க ஆயத்தமான நிலையில் இருக்கிறது.
இனிமேல் மாநகராட்சிகளில் ஊழியர்களை பணி நியமனம் செய்வதில்வை, அனைத்தையும் வெளிச்சந்தைக்கு அனுப்புவது என்று தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டிருப்பது அந்த அரசு கூறும் திராவிட மாடல் என்ற பதத்துக்கு எதிரானதாகும். ஒடுக்கப்பட்ட மக்களை ஒட்டச் சுரண்டுவதற்கு அதிகாரபூர்வமாக வழி வகுப்பது, சமூக நீதி அல்ல; அப்பட்டமான சமூக அநீதியாகும்.
பாரத தேசத்தை பாகுபடுத்த வந்துள்ள தீயசக்திகளிடமிருந்து தமிழ்நாட்டை பாதுகாப்பதற்காக இந்த அரசை ஆதரிக்க வேண்டிய கடமை தொழிலாளர் களுக்கு இருக்கிறது. அதே நேரத்தில் தொழிலாளர் நலன்களை பறிப்பதற்காள வழியில் செல்லுமானால் தடுத்து நிறுத்த வேண்டிய கட்டாயமும் தொழிலாளர் களுக்கு உண்டு. இதற்கான அழுத்தம் திருத்தமான கூட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டே ஆக வேண்டும்.
எடுத்தோம் கவிழ்த்தோம் என்றில்லாமல் ஆக்கபூர்வமாக தமிழ்நாட்டு தொழிலாளி வர்க்கத்தின் ஆற்றலை ஒன்றிய அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் உணர்த்த வேண்டிய ஆக்கபூர்வமான வழிமுறைகளை கண்டறியவும், செயல்படுத்தவும் திட்டமிடுவதற்கான மகத்தான பொறுப்பு எஐடியூசியின் மாநில மாநாட்டுக்கு இருக்கிறது.
ஏஐடியூசியின் விதிமுறைகளின் படி இணைப்புச் சங்கங்களில் இருந்து தேர்வு செய்யப்படும் பிரதிநிதிகள், ஒருவர் தவறாமல் அனைவரும் மாநாட்டுக்கு வாருங்கள். தவறாமல் கருத்துக்களை முன் வையுங்கள்.
வெளிச்சம் பரவட்டும்!