மரபுகளையும், பழக்கங்களையும் அறிவியல் வளர்ச்சி உடைத்து நொறுக்கி, முன் சென்று கொண்டே இருக்கிறது. பழைய உற்பத்தி முறைகளும், உற்பத்திக் கருவிகளும் தேடினாலும் கிடைக்காமல் காணாது ஒழிந்துவிட்டன. பிறப்பினால் சாதி, சாதிக்கு ஒரு தொழில் என்பதெல்லாம் நடைமுறையில் இல்லை.
மனித அறிவு வளர்ச்சி, கல்வியோடு தொடர்புடையது. அறிவியல் வளர்ச்சிக்கேற்ப சமூகம் வளர வேண்டுமெனில், கல்வி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும். “கல்வி கற்பதற்கே உரிமை இல்லாதவர்கள், கல்வி கற்பது தண்டனைக்குரிய குற்றம்’ என மனு சாஸ்திரம் ‘சூத்திரர்கள்’, ‘பஞ்சமர்’ எனப் பெயரிட்டு பெரும்பான்மை மக்களை ஒதுக்கி வைத்தது. தலைமுறைகளாக ஒடுக்கப்பட்டிருந்தவர்களை, அடிமைத் தளையில் இருந்து விடுவிக்க கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது.
இந்துக்களுக்கு தரப்பட்ட இட ஒதுக்கீட்டை, அன்றும், இன்றும் மநுவாதிகள் எதிர்க்கின்றனர். இந்திய அரசியலமைப்புச் சட்டமே ஐரோப்பாவை பார்த்து நகலெடுத்தது, இந்தியாவுக்கான அரசியல் சட்டமாக மனு சாஸ்திரம் தான் இருக்க வேண்டும் என்று, ஆர்எஸ்எஸ் அன்றே கண்டன குரல் எழுப்பியது.
இந்து என்ற சொல்லையே கருவியாக கொண்டு, அதிகாரத்தை
கைப்பற்றிய பின்னர், அரசியலமைப்புச் சட்டத்துக்கு பதிலாக மனு சாஸ்திரத்தை
கொண்டு வருவோம் என்று பகிரங்கமாகவே பேசுகிறார்கள். ‘உழைப்பு என்பது இழிந்தது; உழைப்பவர்கள் இழிவானவர்கள்; அடிமைகளாய் உழல்வதற்காகவே பிறந்தவர்கள்’ என்பதில் மனு சாஸ்திரமும் கார்ப்பரேட்டு நலன்களைக் காக்கும் தாராளமயக் கொள்கையும் பிசிறு இல்லாமல் ஒத்துப்போகின்றன.
இந்தப் புதிய சூழலில், தம்மை அடிமைப்படுத்துபவர்கள் யார் என்பதை உழைக்கும் மக்கள் புரிந்து கொள்ள, மனு சாஸ்திரம் என்ன சொல்கிறது என்பதற்கான உரையாடல் அவசியமாகிறது. திராவிட முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா அவர்கள் ‘சூத்திரன் என்றாலே விபச்சாரி மகன்’ என மனு சாஸ்திரம் சொல்வதை எடுத்து சொல்லியிருக்கிறார்.
அவர் சொல்வது உண்மை இல்லை என்றால், மனுசாஸ்திரம் அப்படிக்
கூறவே இல்லை என்று மறுக்க வேண்டியது தானே! எவ்வளவு வசை மொழிகள்,
மிரட்டல்கள். இந்துக்களைக் கேவலப் படுத்துகிறார் என வெறியாட்டம்.
மனு சாஸ்திரத்திற்கு 40, 50 வகையான விளக்கங்கள் உண்டாம்! 20,000 புத்தகங்கள் படித்த(1) பிஜேபி அண்ணாமலை சொன்னார்! உண்மையான விளக்கம் என்ன என்று இதுவரை பேசவில்லை.
மதச்சார்பின்மை, சோசலிசம் ஆகிய சொற்களை அரசியலமைப்புச் சட்டத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று சுப்பிரமணியசாமி நீதிமன்றம் போயிருக்கிறார். சமமின்மையை மட்டுமே விரும்புபவர்களுக்கு, சமத்துவம் கசக்கத்தானே செய்யும்.
கடவுளைப் பேச, அதன் பெயரால் கலவரமூட்ட இவர்களுக்கு உரிமை உண்டாம். ‘கடவுள் இல்லை’ என்று சொல்லக்கூடாதாம். பெரியார் சிலை பீடங்களிலிருந்து நீக்க வேண்டும் என்றும் வழக்கு!
“அடங்கிக் கிட என்று நான் எவ்வளவு உரத்த குரலில் வேண்டுமானாலும் பேசுவேன். அதற்கு எனக்கு முழு உரிமை இருக்கிறது. ஆனால் ஏன் என்று எதிர் கேள்வி கேட்க உனக்கு உரிமை கிடையாது” என்று பேசுகிற ஆணவம் எங்கிருந்து வருகிறது? எதிர்த்து பேசினால் நாக்கை வெட்டுவோம் என்ற சென்ற தலைமுறைகளின் உயர்சாதி ஆணவம் அல்லவா அது!
தமிழ்நாட்டு மக்கள் ஆதரிக்கவில்லை என்றாலும், ஆ.ராசா பேச்சை எதிர்த்து கடையடைப்புக்கு அழைப்பு விடுக்குமளவுக்கு அவர்களுக்கு தைரியம் வந்துள்ளதை மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் கவனத்தில் கொள்ள வேண்டும். உரிய வகையில் எதிர்வினையாற்ற வேண்டும்.