1. இந்திய தொழிலாளர் மாநாடு (ILC) ஒரு முத்தரப்பு அமைப்பாகும். இது கடந்த 10 ஆண்டுகளாக கூட்டப்படவில்லை. (கடைசியாக, இது 2015 ஆம் ஆண்டில் கூட்டப்பட்டது). தொழிலாளர் சட்டங்களில் செய்யப்பட்ட எல்லா மாற்றங்களும், 29 ஒன்றிய தொழிலாளர் குறியீடுகளும், இந்திய தொழிலாளர் மாநாட்டில் நிறைவேற்றப்படாமலேயே மேற்கொள்ளப்பட்டன.
சம்பள சட்டத் தொகுப்பு, 2019 ஆம் ஆண்டிலேயே எந்தவிதமான ஜனநாயக நடைமுறைகளையும் மேற்கொள்ளாமல் நிறைவேற்றப்பட்டது. மூன்று தொழிலாளர் சட்டத் தொகுப்புகளும் இந்த நாடு, கோவிட் பெருந்தொற்றால் பீடிக்கப்பட்டு, தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. இரண்டு அவைகளையும், ஒட்டுமொத்த எதிர் கட்சிகளும் புறக்கணித்திருந்த காலத்தில் பாராளுமன்றத்தில் தொழிலாளர் சட்டம் குறித்து எந்த விதமான விவாதங்களும் நடைபெறவில்லை. ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களே இந்த சட்டத்தொகுப்புகளை முன்மொழிந்து அவர்களாகவே நிறைவேற்றிக் கொண்டனர். * இந்திய தொழிலாளர் மாநாட்டை உடனடியாக கூட்ட வேண்டும். * புதிய தொழிலாளர் சட்டத்தொகுப்புகளை கைவிட வேண்டும். தொழிலாளர் சட்டத்தில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் பற்றி, இந்திய தொழிலாளர் மாநாட்டில், அனைத்து தரப்பினரும் விவாதித்து ஏற்றுக்கொள்வதை கொண்டுவர வேண்டும்.
* தொழிற்சங்கங்கள் வெகு காலமாக ஐஎல்ஓ இணக்கவிதிகள் 87, 98, 189, 199 ஏற்றுக்கொள்ள வேண்டும் என கோரிவருகின்றன.
2. பணியிட பாதுகாப்பு என்பது முக்கியமான பிரச்சனையாகும். தொழிலாளர்கள் ஒவ்வொரு நாளும் பணியிடத்தில் பாதுகாப்பு இன்மை காரணமாக இறந்து போகிறார்கள் அல்லது ஊனமடைகிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் ஒப்பந்த தொழிலாளர்களாகவும், குடும்பத்தில் அவர் மட்டுமே உழைப்பவராகவும் இருக்கிறார். அவர்களுக்கு எந்த இழப்பீடும் கிடைப்பதில்லை. எனவே அவர்களது குடும்பங்கள் வாழ்வதற்கு போராடுகின்றன. ஐஎல்ஓ இணக்க விதிகளான 155 & 187 ஐ, 2022 ஆண்டு மாநாட்டில், பணியிட உரிமைகளுக்காக (FPRW) உருவாக்கியுள்ளது.
* இந்த இணக்கவிதிகளை தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் தொடர்பான விதிகளை உருவாக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டும். * பணியிட பாதுகாப்பு, சுகாதாரம் தொடர்பான விதிகளில், இணக்க விதி 81 ன் படி ஆய்வு (inspection) செய்வது உறுதி செய்ய வேண்டும்.
3.பொதுத்துறை நிறுவனங்களும், அரசு சார்ந்த நிறுவனங்களும் சுரங்கம், இயற்கை வாயு, உற்பத்தி, சேவைத்துறைகளில் நமது நாட்டு முன்னேற்றத்திற்கு முக்கிய பங்காற்றி வருகின்றன. நமது நாட்டில் உள்ள அரசுத்துறை, பொதுத் துறை நிறுவனங்களும் சாதாரண மக்கள் பலன் பெறும் வகையில் செயல்பட்டு வருகின்றன. தனியார்மயம், பங்குகளை விற்றல் போன்றவைகள் முன்னெடுக்கப்படுவதால் பொது சேவைகள் பாதிக்கப்படுகின்றன. இது நமது நாட்டின் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு ஊறு விளைவிக்கிறது. தேசிய பணமயமாக்கல் திட்டம் மூலம் இந்த நாட்டின் சொத்துக்கள் பொருக்கி எடுத்த, பெரு நிறுவனங்களுக்கு விற்கப்படுகின்றன. * ரயில், சாலை போக்குவரத்து, நிலக்கரி சுரங்கங்கள், நிலக்கரி அல்லாத சுரங்கங்கள், துறைமுகம், பாதுகாப்பு, மின்சாரம், தபால் தொலைபேசி,வங்கி, காப்பீடுத்துறை ஆகியவைகளை தனியார்மயமாக்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும். * தேசிய பணமயமாக்கல் திட்டம் (NMP) உடனடியாக நீக்கப்பட வேண்டும்.
4. நமது நாட்டின் 41 பாதுகாப்பு தளவாட தொழிற்சாலைகள், தொழிலாளர்கள் எதிர்ப்பு, வேலை நிறுத்தத்தையும் மீறி ஏழு நிறுவனங்களாக மாற்றப்பட்டுள்ளன. இந்த ஏழு நிறுவனங்களையும் மூன்றாக குறைக்க அரசு முயன்று வருகிறது. இதனால் தனியார் துறையினரே பலனடைவார்கள். இந்த ஆலைகள் பாதுகாப்புத்துறையிலேயே இருப்பது தேசப்பாதுகாப்பிற்கு அவசியமாகும். எனவே இவைகள் அரசின் வசமே இருக்க வேண்டும். * ராணுவ தளவாட தொழிற்சாலைகளை நிறுவனமாக்கியதை திரும்ப பெற வேண்டும்.
5. குறைந்தபட்ச ஊதியம் குறைவாக உள்ளது. அரசமைப்பு சட்டம் கூறியுள்ள வாழ்வூதியத்தை தர வேண்டும் என்று கோரி வருகிறோம். ஆனால் 15 வது இந்திய தொழிலாளர் மாநாட்டுப் பரிந்துரைபடியும், ரப்டகாஸ் வழக்கின் உச்சநீதிமன்ற தீர்ப்புபடியும் கூட குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்படுவதில்லை. * குறைந்தது 26,000 ரூபாயாக குறைந்தபட்ச ஊதியம் இருக்க வேண்டும். * ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை அவை விலைவாசிப் புள்ளிக்கேற்றபடி அவை மாற்றியமைக்க வேண்டும். * எட்டாவது ஊதியக்குழு விரைவில் அமைக்கப்பட வேண்டும்.
6. வேலையிழப்பும், காலி இடங்கள் நிரப்பப்படாததும் கடுமையான வேலையில்லா திண்டாட்டத்தை உருவாக்கியுள்ளன. வெளிச்சந்தை முறை, ஒப்பந்த முறை, தினக்கூலி முறை போன்றவைகளால் தொழிலாளர்கள் கடும் சுரண்டலுக்கு ஆளாகிறார்கள். குறித்தகால வேலையானது, தொழிலாளர்களின் வாழ்க்கையை நிச்சயமற்ற முறையில் வைத்துள்ளது. * குறித்த கால வேலை முறை திரும்ப பெற வேண்டும். * உடனடியாக அரசாங்கம் காலியாக உள்ள இடங்களில் பணி நியமனம் செய்ய வேண்டும். காலாவதியான பணியிடங்களை மீண்டும் உருவாக்க வேண்டும். * முன்னெப்போதும் இல்லாத வகையில் வேலையின்மை உருவாகியுள்ள நிலையில், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முன்னுரிமை தர வேண்டும். * ராணுவத்தில் அக்னிபாத் திட்டம் கைவிடப்பட்டு, முறையான ஆளெடுப்புக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். * எட்டு மணிநேர வேலை உரிமை தொழிற்சங்கங்களால் கடுமையாக போராடி பெற்றதாகும். இதனை மீறுவது, உலக தொழிலாளர் அமைப்பின் இணக்கவிதி எண் ஒன்றை மீறுவதாகும். இதனை மீறுவது நிறுத்தப்பட வேண்டும். * சம வேலைக்கு சம ஊதியம் அமலாக்கப்பட வேண்டும்.
7. கல்வி, சுகாதாரத்திற்கான நிதி ஒதுக்கீடு வரவுசெலவு அறிக்கையில் குறைந்துள்ளது; பணவீக்கம் உண்மையான மதிப்பை மேலும் குறைத்துள்ளது. புதிய கல்விக் கொள்கையானது கல்வியை வணிகமயமாக்கும், நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் ஏழை மாணவர்கள் கல்வி பெறுவது பாதிக்கப்படும். நடுத்தர மக்களும் இதனால் பாதிக்கப்படுபவர்கள். தொழிலாளர்களின், முக்கியமாக அமைப்புசாரா தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி எட்டாமல் போய்விடும். எனவே, புதிய கல்விக் கொள்கை திரும்பப் பெற வேண்டும்.
8. அடிப்படையான குடிமைச் சேவைகள் மோசமாகி வருகின்றன. தொழிற்கூடங்கள் மோசமாக பாதிப்படைவதால், தொழிலாளர்கள் உடல்நலம் பாதிப்படைகின்றனர்; இதனால் வேலைநாட்கள் குறைகின்றன. * தொழிலாளர்களின் சுகாதாரவசதிகள் விரிவாக்கப்பட வேண்டும் * மக்களின் அடிப்படையான வாழ்க்கைக்கு தேவையானதை உறுதி செய்ய சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும். * இத்தகைய சேவைகளில் ஒப்பந்த முறை முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்.
9. மூத்த குடிமக்கள் கண்ணியமான வாழ்க்கை வாழ, அனைவருக்கும் ஓய்வூதியப் பலன்கள் விரிவாக்கம் செய்ய வேண்டும். ஓய்வூதியம் என்பது ஓர் உரிமையாக இருக்க வேண்டும். * பங்களிப்பு இல்லாத பழைய ஓய்வூதிய திட்டத்தை திரும்பக் கொண்டு வர வேண்டும். * தொழிலாளர் ஓய்வூதியதிட்டம் 95 ( EPS) இருப்பவர்களுக்கு குறைந்தது ஒன்பதாயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும். * எந்த திட்டத்திலும் வராதவர்களுக்கு, மத்திய- மாநில அரசுகளின் வரவு செலவு திட்டத்தில், சிறப்பு நிதியை உருவாக்கி அதன் மூலமாக மாதம் ரூபாய் 6 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
10. பீடி, புகையிலை தொழிலாளர் சட்டம் 1966 – இல் 75 இலட்சம் பீடி தொழிலாளர்களுக்கு சமூகப்பாதுகாப்பு கிடைத்து வந்தது. ஜிஎஸ்டி கொண்டுவரப்பட்டவுடன், இந்தச் சட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டது. இந்தச் சட்டத்தின் கீழ் இருந்த தொழிலாளர்கள் நீதிக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். * அவர்கள், தொழிலாளர் அரசு ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் (ESI) இணைக்கப்பட வேண்டும்.
11. 71 மில்லியன் கட்டட தொழிலாளர்களுக்கு சமூகப்பாதுகாப்பை தரும் வகையில், அவர்களை தொழிலாளர் அரசு ஈட்டுறுதி திட்டத்தில் இணைக்க வேண்டும். அவர்களுடைய பங்களிப்புத் தொகையை, கட்டிட தொழிலாளர் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட வாரிய நிதி மூலம் தர வேண்டும். தொழிலாளர் துறை 2020 ஆம் ஆண்டில் கூறியபடி, கிட்டத்தட்ட 38,000 கோடி ரூபாய் கட்டட தொழிலாளர் நல வாரியங்களில் பயன்படுத்தப்படாமல் இருக்கின்றது. ( தற்போது 80 ஆயிரம் கோடிக்கும் மேலாக உள்ளது)
* வாரியத்தில் இணைந்தால்தான் சமூக பாதுகாப்பும் மற்ற நல உதவிகளும் கிடைக்கும். எனவே தொழிலாளர்கள் வாரியத்தில் பதிவு செய்வதை எளிதாக்க வேண்டும்.
12. கடைசியாக வந்த தகவல் படி, 27.88 ( இ ஷ்ரம் போர்ட்டல் தகவல் 30.74 கோடி) கோடிக்கும் மேல் இ- ஷ்ரம் இணையத்தில் பதிவு செய்துள்ளனர். இ- ஷ்ரம் தளத்தில் பதிவு செய்தவர்களுக்கு சமூக பாதுகாப்பை விரிவுபடுத்த வேண்டும். இ- ஷரம் தரவுகளைப் பயன்படுத்தி, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பயன்தரும் கொள்கைகளை உருவாக்க வேண்டும். அவர்களுக்கு அடிப்படையான சுகாதார வசதி, மகப்பேறு உதவி, குழந்தைகளுக்கு கல்வி, காப்பீடு போன்றவைகளை அளிக்க வேண்டும்.
மத்திய மாநில அரசுகள் இதற்கென நிதியை சமூக பாதுகாப்பு திட்டங்களுக்காக ஒதுக்கி, பயன்படுத்த வேண்டும்.
அரசின் பல்வேறு நலத்திட்டங்களில் ஒரு கோடிக்கும் அதிகமானோர், பல்வேறு துறைகளில் தன்னார்வலர்கள் என்ற பெயரில் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு மதிப்பூதியமே ( Honorarium) வழங்கப்படுகிறது.
இந்திய தொழிலாளர் மாநாட்டு பரிந்துரைப்படி, அவர்களுக்கு தொழிலாளர் அந்தஸ்து வழங்க வேண்டும். அங்கன்வாடி, ஆஷா, மதிய உணவு, ஆஷா கிரன் போன்றவைகளில் வேலை செய்பவர்களுக்கு இஎஸ்ஐ வழங்க வேண்டும்.
பருவநிலை மாற்ற நிதியை அமைக்க வேண்டிய அவசியத்தேவை எழுந்துள்ளது. இதன் மூலம் வெப்பக்காற்று, வெள்ளம், சூறாவளி, பருவம் தப்பி பெய்யும் மழை போன்றவைகளால் ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்கு நிவாரணம் தர முடியும். இதன் மூலம், பாதிக்கப்படும் குடும்பங்களின் அடிப்படையான தேவைகளைப் பூர்த்தி செய்யவும், வருமான இழப்பு ஏற்படும் போது அதனை ஈடுகட்டவும் அந்த தொகை பயன்படும். பருவ நிலை மாற்ற நிதி ஒதுக்கீடு செய்து வழங்க வேண்டும்.
புலம்பெயர் தொழிலாளர்களுக்கான தேசிய கொள்கை அவசியமான ஒன்றாகும். மாநிலங்களுக்கிடையான புலம்பெயர் தொழிலாளர் சட்டம் 1979 ஐ மறு ஆய்வு செய்து, அதனை வலிமைப்படுத்தி, அமல்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். சர்வதேசப் புலம்பெயர் தொழிலாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப, புலம்பெயர் கொள்கைகளில் மாற்றங்களைச் செய்ய வேண்டும்.
நகர்ப்புறங்களில் அதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டம் உள்ளது. எனவே அவர்களுக்கு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை போல நகர்புறத்தில் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும், 43வது இந்திய தொழிலாளர் மாநாட்டின் ஒருமனதான பரிந்துரையின்படி வேலைவாய்ப்புத் திட்டம் உருவாக்க வேண்டும்.
அரசாங்கமானது, உலக தொழிலாளர் அமைப்பின் இணக்க விதிக்கு ஒப்ப, சட்டங்களை உருவாக்கி, வீடு சார்ந்து வேலை செய்யும் தொழிலாளர்களுக்கும் 5 கோடி தொழிலாளர்கள் உருப்படிக்கான கூலி அடிப்படையில் (piece rate) பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கும் ஊதியம், சமூகப்பாதுகாப்பு, சுகாதார வசதி போன்றவைகளை உறுதி செய்ய வேண்டும்.