இந்தியா முழுவதும் 25 கோடி சீர்மிகு மீட்டர் (smart meter) நிறுவும் கொள்கை அமலாக்கப்பட்டு வருகிறது. இதற்கு ஒன்றிய அரசு 60 சத நிதியையும், மாநில அரசுகள் மீதித்தொகையையும், மின்சாரத்தை விநியோகிக்கும் நிறுவனங்களுக்கு (Discoms) தர வேண்டும். பெருநிறுவனங்களின் கோரிக்கைப்படி சீர்மிகு மீட்டர்கள் பொறுத்தும் திட்டம் அமலாக்கப்படுகிறது. இதனால் மின்சாரத்துறையில், இலாபம் வரும் பகுதியை தனியாருக்கு அளிக்க உள்ளனர்.
தனியார் பெருநிறுவனங்கள் மின் உற்பத்தி, பகிர்மானம், விநியோகம் என அனைத்தையும் தம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர விரும்புகின்றனர். மின்சாரத்திற்கு தரப்படும் எல்லாவித மானியத்தையும் நிறுத்த விரும்புகின்றனர். சீர்மிகு மீட்டர் அமலானால், முன்னதாகவே பணத்தை கட்டினால்தான் மின்சாரம் கடைக்கும். நுகர்வோர், அரசாங்கத்தின் பணத்தைக்கொண்டு, தங்கள் இலாபத்தை அதிகரித்துக் கொள்வதே முதலாளிகளின் நோக்கமாகும். மின் கட்டணம் வருடம்தோறும் நிர்ணயிக்கப்படும். இதனால் மின்சாரம் அடிப்படை தேவை என்ற நிலையில் இருந்து மாறி, இலாப நோக்கிலேயே செயல்படும். தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்படும். தமிழ்நாட்டில் 20,000 தொழிலாளர்களும், மகாராஷ்டிரா வில் 30,000 தொழிலாளர்களும் வேலை இழப்பர். சீர்மிகு மீட்டர் திட்டத்தை, மின்சார தொழிலாளர்கள், நுகர்வோர், பொதுமக்களோடு இணைந்து எதிர்த்து வருகிறார்கள்.
மக்கள் விரோத, மாநில அரசுகளுக்கு விரோதமான, பெரு நிறுவனங்கள் பலன் அடையும் வகையில் 2022 ல் மின் திருத்த மசோதா கொண்டு வரப்பட்டது. மின் விநியோகத்தில் பல வகைகளில் தனியாருக்கு உரிமம் வழங்குவதற்கு இது வழிவகை செய்தது. இதனால் மின்சாரம் தனியார்மயமாகும். தொழிலாளர்களின் ஒன்றுபட்ட எதிர்ப்பு காரணமாக அது சட்டமாகவில்லை. இதிலுள்ள பிரிவுகள் மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கும் வகையில் உள்ளன. மின்சாரம் விநியோகம் செய்பவர்கள் இதில் முதலீடு ஏதும் செய்யப்போவதில்லை.
நுகர்வோருக்கு விரோதமான, தேச விரோதமான, மாநில உரிமைகளைப் பறிக்கும் காட்டுமிராண்டி மின்சார திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும். தனியார்மயத்தை எதிர்த்து போராடும் 15 இலடசம் மின் தொழிலாளர்களுக்கு ஏஐடியுசி தனது ஆதரவை நல்குகிறது.