குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகைப் பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை தொடர்ந்து எதிர்க்கிறோம்
குடியுரிமை திருத்தச் சட்டம்(CAA), தேசிய மக்கள் தொகைப் பதிவேடு(NPR), தேசிய குடிமக்கள் பதிவேடு(NRC) ஆகியவற்றை அமலாக்க, பாஜக செய்யும் அனைத்து முயற்சிகளை எதிர்க்க ஏஐடியுசி உறுதி கொள்கிறது. மார்ச்சு 2024 முதல் குடியுரிமை திருத்த சட்டம் 2019 அமலுக்கு வந்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகைப் பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை இசுலாமிய சிறுபான்மையினரை மட்டும் ஒடுக்குவதற்காக கொண்டுவரப்படவில்லை. இதனால் இந்தியா முழுவதும் உள்ள இலட்சக்கணக்கான வீடற்றவர்களும் பாதிப்பு அடைவர். வீடற்ற 99 % மக்களுக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லை. இவர்கள் அமைப்புச்சாரா தொழிலாளர்கள் ஆவார்கள். வீடற்ற 30 % மக்களுக்கு எந்தவித அடையாளச் சான்றும் இல்லை என்று சொல்லப்படுகிறது. கிராமப்புற நெருக்கடியால் இடம்பெயரும் பழங்குடி, நாடோடி, புலம்பெயர்ந்த மக்களிடம் தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவைகளுக்கு தருவதற்கு தேவையான ஆவணம் ஏதும் இருப்பதில்லை.
குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு முன்னோட்டமாக செய்யப்படுவதாகும். நிரூபிக்கப்படும் வரை இந்தியாவில் வாழ்பவர்கள் அனைவரும் சட்டவிரோத குடியேறிகள் என்ற எண்ணத்தில் பாஜக இந்த நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. இது அரசியலமைப்பின் மீதும், 1955 ஆம் ஆண்டின் இந்திய குடியுரிமைச் சட்டத்தின் மீதும் தொடுக்கப்படும் தாக்குதலாகும். குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகைப் பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவைகள் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ளன; இதன் வழியாக மக்கள்தொகை விவரங்களையும், உயிரியளவியல் (Bio metric) விவரங்களையும் பாஜக சேகரித்து கண்காணிப்பிற்குள் வைத்துக்கொள்ள இருக்கிறது.
பாஜக ஆட்சியில் இருந்த போது 2003 ஆம் ஆண்டில் குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி ஒவ்வொரு குடிமகனும் தன்னை பதிவு செய்துகொள்ள வேண்டும்; தேசிய அடையாள அட்டை வழங்க வேண்டும் என்ற சட்டப்பிரிவு சேர்க்கப்பட்டது. இதனால் மக்கள் தொகை பதிவேடு உருவாக சட்டப்பூர்வமான ஏற்பாடு வந்தது; இது மக்கள் தொகை கணக்கீட்டோடும், தேசிய குடிமக்கள் பதிவேட்டோடும் இணைக்கப்பட்டது.
தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு நாடு முழுவதும் வந்த எதிர்ப்பின் காரணமாக, தேசிய மக்கள் தொகை பதிவேட்டையும், குடிமக்கள் பதிவேட்டையும் நிறுத்தி வைத்துள்ளது. குடியுரிமைத் திருத்தச் சட்டம் இசுலாமிய சிறுபான்மையினருக்கு குடியுரிமையை மறுக்கிறது; அதே சமயம் முஸ்லிம் அல்லாத சட்டவிரோத குடியேறிகளை பாதுகாக்கிறது. குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகைப் பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு காட்டுமிராண்டித்தனமானவை; அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானவையாகும்.
மதம், சாதி, இனம், வகுப்பு அடிப்படையில் மக்களை நசுக்கும் எல்லாவிதமான நடவடிக்கைகளையும் ஏஐடியுசி எதிர்க்கிறது.