அரசியல்

Published

on

மூன்று புதிய குற்றவியல் சட்டங்களையும் திரும்பப்பெறுக – தொழிற்சங்கங்களின் கூட்டறிக்கை

ஜூலை ஒன்றாம் நாள் முதல் அமலாக்கப்பட்டுள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு இல்லாமல் இருக்க வாய்ப்புள்ளது.

இந்தச் சட்டங்கள் முறையான விவாதங்கள் இல்லாமல், பாராளுமன்ற குழு கொடுத்துள்ள பரிந்துரைகளைக் கூட கண்டுகொள்ளாமல், நகல் கொள்கையை பொதுவெளியில் வைக்காமல் மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது.

வெள்ளையர் கால சட்டங்களுக்குப் பதிலாக இந்தச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என்று சொல்லப்படுவது தவறாகும். ஏனெனில் பழைய சட்டங்களின் அனைத்துப் பிரிவுகளும் புதிய சட்டங்களில் உள்ளன; இன்னும் சொல்லப்போனானால் சில பிரிவுகள் கடுமையாகவும் உள்ளன.
உதாரணமாக இந்திய தண்டனைச் சட்டத்தின் 124 பிரிவு புதிய சட்டத்திலும் உள்ளது. அதற்கு மூன்று வருட சிறைத்தண்டனை என்பது ஏழு ஆண்டாக உயர்த்தப்பட்டுள்ளது.

மக்கள் எப்படி ஒன்றுகூடினாலும், தலைவர்கள் ஒன்றுகூடினாலும் அவர்களை தீவிரவாதிகள் என்று சொல்ல முடியும். அனைத்து தொழிற்சங்க நடவடிக்கைகளையும் இந்தப் பிரிவின்கீழ் கொண்டுவர முடியும்.

இவற்றின் பல பிரிவுகளின் எண்கள் மாற்றப்பட்டுள்ளன. இது குழப்பத்தை உருவாக்குவதோடு, வழக்குகள் தேங்குவதை பெருமளவில் வருங்காலங்களில் அதிகரிக்கும். தற்போது கீழ்மட்ட நீதிமன்றங்களில் 6.4 கோடி வழக்குகள் சமாளிக்க முடியாத அளவுக்கு தேங்கியுள்ளன.

நூறு ஆண்டுகளுக்கும் மேலாக உருவான தீர்ப்பு வழிச்சட்டங்கள் (case law) புதிய குற்றவியல் சட்டங்களின் அமலாக்கத்தினால், இனி பயனற்றுப் போகும். இதனால் வழக்காடிகள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள் என அனைவரும் அரசியலமைப்பு முடிவுகளுக்கு வர போராட வேண்டி இருக்கும்.

காவல் ஆய்வாளர்களுக்கு முதல் தகவல் அறிக்கையை பதிவுசெய்ய முழு அதிகாரமும்- அதாவது பதிவு செய்யலாமா என்ற விருப்பமும் – கொடுக்கப்பட்டுள்ளது. பழைய சட்டத்தில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்வது ஒவ்வொரு குடிமகனின் உரிமையாகும்.

போலிஸ் காவலில் இருக்கும் காலமானது 15நாட்களில் இருந்து 60 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
தங்களது நியாயமான கோரிக்கைகளுக்காக அமைதியான வழியில் போராடுபவர்கள் மீதும், முற்றுகையிடும் (gherao) தொழிலாளர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்ய காவல்துறைக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

இது ஆட்சிசெய்பவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, அடக்குமுறையை கையாள விரும்பும் காவல் அரசிற்கு (police raj) கட்டியம் சொல்வது போல உள்ளது.

தற்போது நடைமுறையில், நீதி வழங்குவதைக் குறிக்கும் சொல்லான “நீதி வழங்கும் நீதிமன்றம்” (Court of Justice) என்ற வரையறையானது “நீதிமன்றம்”(court) என்று மாற்றப்பட்டுள்ளது.

ஏற்கனவே வாகன ஓட்டிகள் ‘மோதிவிட்டு ஓடிவிடும்’ (hit and run) வழக்குகளை எதிர்த்து போராடியதால் பின்னடைவு ஏற்பட்டது. அரசாங்கம் அந்தப் பிரிவுகளை அமலாக்கமாட்டோம் என கூறியது; ஆனால் அந்தப் பிரிவுகளை அவர்கள் நீக்கவில்லை.

இந்தி பேசாத மக்கள் இந்தியை திணிப்பதை எதிர்த்துள்ளனர். அரசியல் அமைப்புச் சட்டத்தின் உறுப்பு 348 – ம், அரசு மொழிச் சட்டமும் பாராளுமன்றம், சட்டமன்றம் இயற்றுபவை அனைத்தும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்று கூறுகிறது.

சுருக்கமாகச் சொன்னால், 2016 ல் கொண்டுவரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையைப் போன்றதொரு முட்டாள்தனமான, அதைவிட அபாயகரமான நடவடிக்கையாகும். நவ தாராளவாத கொள்கைகளுக்கு இசைவான, மக்களின் உரிமைகள் மீது தாக்குதலைத் தொடுப்பதாகும்.

மத்திய தொழிற்சங்கங்கள், சுயேச்சையான சமரமேளனங்கள், சங்கங்களின் பொது மேடையானது, புதிய குற்றவியல் சட்டங்களை நீக்கிவிட்டு பழைய சட்டங்களே தொடர வேண்டும் என கேட்டுக் கொள்கிறது. புதிய மாற்றங்கள் ஏதும் செய்ய வேண்டி இருப்பின் அதனை ஏற்றுக் கொண்டு அமலாக்குவதற்கு முன்பு பொதுவெளியில் விவாதிக்க வேண்டும்.

INTUC AITUC HMS CITU AIUTUC TUCC SEWA AICCTU LPF UTUC

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version