சில நாட்களுக்கு முன்னர் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்த தமிழ்நாட்டு மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. தமிழர்களின் பாரம்பரிய மீன்பிடி பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகப்பட்டினம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை நடுக்கடலில் கைது செய்துள்ளது. தமிழ்நாட்டு மீனவர்களை நடுக்கடலில் தாக்கி கைது செய்யும் இலங்கை கடற்படையின் அட்டூழியம் தொடர்கிறது. ஒன்றிய அரசு உரிய தீர்வு காண தயாராக இல்லை. மற்றொருபுறம் கடந்த சில ஆண்டுகளாக மீனவர்களுக்கு மீன்பாடு இல்லை. மீன்களுக்கும் உரிய விலை கிடைப்பதில்லை. இதனால் பல மீனவர்கள் மீன்பிடி தொழிலுக்காக வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். அப்படி இரான் நாட்டிற்கு ராமநாதபுரம் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த 6 மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட இந்தியாவிலிருந்து ஒப்பந்த தொழிலாளர்களாக இரானுக்கு சென்றனர்.
மோசமான வேலை சூழல் காரணமாக உரிமையாளரின் படகை பயன்படுத்தி .இரான் நாட்டிலிருந்து தப்பி கடல் வழியாக விசைப்படகு மூலமாகவே 3,500 கிமீ தூரத்தை கடந்து 14 நாட்கள் கடலில் பயணித்து தப்பி வந்து சேர்ந்தனர். தப்பமுடியாமல் பலப் பல தொழிலாளர்கள் என்ன பாடு படுகிறார்களோ!
நான்கு தலைமுறையாக வேலை பார்த்துவந்த மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் 700 குடும்பங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் வாழ்ந்த வீடு, வேலைபார்த்த நிலம், படித்த பள்ளி, முன்னோர்களின் கல்லறைகள், சக தொழிலாளர்களுடனான உறவு என எல்லாவற்றின் மீதும் ஒரு விலக்க முடியாத திரை விழுந்து, சொந்த நாட்டில் அறிவிக்கப்படாத அகதிகளாக்கப் பட்டுள்ளனர்.
வேலை தேடி குவைத் நாட்டுக்கு சென்ற தொழிலாளர்கள் 50 பேர் தீ விபத்தில் கரிக்கட்டைகளாகி பெட்டியில் அடைத்து சடலங்களாக வந்தனர். சிவகாசியில் பட்டாசு ஆலை விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். அரசு மது பானக்கடைகளில் சமூக விரோதிகள் தாக்குதலால் உயிரிழப்புகளும், கொடும் காயங்களும் தொடர்கதையாகும். இது போன்ற எண்ணற்ற இன்னல்களுடன் தொழிலாளர்கள் வாழ்வு! கள்ளக்குறிச்சியில் 120 ரூபாய் கொடுத்து அரசு மதுபானக் கடையில் மது வாங்க முடியாத தொழிலாளர்கள் கள்ள சந்தை மதுவை பயன்படுத்தி வந்ததால் 58 பேர் உயிரழந்து அவர்கள் குடும்பம் நிர்க்கதியாக்கப்பட்டுள்ள நிலையும் தொடர்கதை! இந்தியாவில் அதிகரித்து வரும் வேலையின்மையின் காரணமாக, ஏதோ வேலைக்காக இடம்பெயர்வது அதிகரித்துள்ளது. உள்நாட்டிலும், வெளி நாட்டிலும் பாதுகாப்பற்ற வேலை, உத்தரவாதமில்லாத வாழ்க்கை என்னும் நிலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த நிலையில் தொழிற்சங்கங்களை வில்லன்களாக பார்க்க வேண்டாம் மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும் வகையில் நிதி நிலை அறிக்கை பிரதிபலிக்கட்டும் என்று ஒன்றிய நிதியமைச்சரிடம் மத்திய தொழிற்சங்கங்கள் கோரியுள்ளன. வளர்ச்சியின் நாயகர்களான தொழிலாளர்களை நட்டாற்றில் விட்டுவிட்டு ஒன்றிய, மாநில அரசுகள் யாருக்காக உழைத்துக் கொண்டிருக்கின்றன என்று இந்திய தொழிலாளி வர்க்கம் உரத்துக் கேட்கட்டும்.