அறிக்கை

Published

on

நிதி நிலை அறிக்கை-
மத்திய தொழிற்சங்கங்கள் ஒன்றிய நிதி அமைச்சருக்கு கடிதம்

மத்திய தொழிற்சங்கங்களும், துறைவாரி சம்மேளனங்களும் இணைந்து, 2024 – 2025 நிதி நிலை அறிக்கை முன்வைப்பதற்கு முன்பாக, தொழிலாளர் கோரிக்கைகளை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஒன்றிய நிதி அமைச்சருக்கு 24.6.24 அன்று எழுதியுள்ள கடிதம் :
கடந்த 10 ஆண்டுகளாக தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்தின் கீழ், உச்சபட்ச முத்தரப்பு அமைப்பான இந்திய தொழிலாளர் மாநாடு (Indian Labour Conference) கூட்டப்படவில்லை. தொழிலாளர்களின் ஆலோசனைகளும், கோரிக்கைகளும் கண்டு கொள்ளப்படுவதில்லை. தொழிலாளர்களுக்கு எதிரான கொள்கைகள் அமலாக்கப்படுகின்றன. முத்தரப்பு, இருதரப்பு குழுக்களை கலந்தோலாசிக்காமல் முடிவுகள் எட்டப்படுகின்றன. ஜனநாயக நடைமுறைகள் மீறப்படுகின்றன.
அரசின் கொள்கைகளால் வெகுசில பெரு நிறுவனங்கள் இந்தியாவின் பெருஞ்செல்வத்தை எடுத்துக் கொள்கின்றன. இதனால் வேலையின்மை, பசி, ஊட்டச்சத்து பற்றாக்குறை போன்றவை நிலவுகின்றன. எனவே, மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

  1. வளங்களை திரட்டுதல் :
    பெருநிறுவனவரி (Corporate tax) , செல்வவரி (Wealth tax) போன்றவைகளை உயர்த்த வேண்டும். செல்வந்தர்களிடம் பரம்பரை வரியை (Inheritance tax) கொண்டுவர வேண்டும். உணவுப் பொருட்களுக்கும், மருந்துகளுக்கும் விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியைக் குறைக்க வேண்டும். கடந்த பல ஆண்டுகளாக கார்ப்பரேட் வரியானது நியாயமற்ற வகையில் வெகுவாக குறைக்கப்பட்ட வேளையில், சாதாரண மக்களை வதைக்கும் மறைமுக வரி உயர்த்தப்பட்டுள்ளது. இது பிற்போக்குத்தனமான வரிக் கொள்கையாகும். மிகப்பெரும் செல்வந்தர்களிடம் குறைந்தபட்சம் ஒரு சதவீதம் பரம்பரை வரி விதித்தாலே மிகப் பெருஞ்செல்வம் இந்த நாட்டிற்கு கிடைக்கும். இதனால் கல்வி, சுகாதாரம், சமூக நலத்திட்டங்களுக்கு நிதி வழங்க முடியும்.
  2. சம்பளம் வாங்குவோருக்கு வருமான வரி தள்ளுபடி செய்திட வேண்டும்.
  3. சமூக பாதுகாப்பு நிதி :
    அனைத்து அமைப்புச்சாரா தொழிலாளர்களும், விவசாய தொழிலாளர்களும் பலன் அடையும் வகையில் ஒன்றிய சமூக பாதுகாப்பு நிதியை உருவாக்க வேண்டும். மாதம் ரூபாய் ஒன்பதாயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
    குப்பையை மறுசுழற்சி செய்வோர், உப்பளத் தொழிலாளர்கள், கண்ணாடி வளையல் போன்ற ஆபத்தான தொழில்களில் ஈடுபட்டுள்ளோரின் பாதுகாப்பிற்கு உரிய நடவடிக்கைகளுக்கு சிறப்புத் திட்டம் வேண்டும். இயற்கை இடர்பாடுகள், பெருவெள்ளம், புயல் போன்ற காலங்களில் ஏற்படும் சம்பள இழப்பை ஈடுசெய்ய உரிய நிதி உருவாக்க வேண்டும்.
    அமைப்புச் சாரா தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ வசதி, கல்வி உதவி, திருமண உதவி போன்ற நல உதவிகள் அதிகரிக்கப்பட வேண்டும். அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களையும் இ- ஷ்ரம் தளத்தில் சேர்த்து அவர்களுக்கு நல உதவிகளை நீடிக்க வேண்டும். பீடி நலநிதி சட்டம் நீக்கப்பட்டதனால் ஏற்பட்ட இழப்பீட்டை, ஏற்கனவே உறுதி அளித்தபடி ஜிஎஸ்டி அமலாக்கும் போது ஈடுகட்ட வேண்டும். அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இஎஸ்ஐ திட்டத்தை விரிவு படுத்த வேண்டும்.
    சிறு விவசாயிகள் மற்றும் விவசாயத்தொழிலாளர்களை கிசான் சன்மான் திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும்.
    மாநிலங்களுக்கு இடையிலான நிர்வாக நடைமுறைகளுக்கு ஒத்திசைவு உருவாகும் வகையில் தொழில்நுட்ப உதவிக்கு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதனால் ரேஷன் கார்டு, அடையாள அட்டை போன்றவை பெறுவது எளிதாக இருக்கும். சமூக பாதுகாப்பு நல உதவிகளை புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த இடங்களிலும் செல்கின்ற இடங்களிலும் பெற ஏதுவாக இருக்கும் வழிவகைகளைச் செய்ய வேண்டும்.
  4. வேலை வாய்ப்பு உருவாக்கம்:
    அரசுத் துறைகளில் உள்ள காலி இடங்களை நிரப்ப வேண்டும். வெளிச்சந்தை முறை, ஒப்பந்த முறை போன்றவைகளை நீக்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் உறுதி செய்ய வேண்டும். அக்னிவீர் போன்ற குறித்த கால வேலை முறைகள் நிறுத்தப்பட வேண்டும். அரசு நிதியோடு, தனியார் பலன்பெறும் வகையில் உள்ள திறன் இந்தியா திட்டத்தின் கீழ் பயிற்சியாளர்கள் அமர்த்தப்படும் முறை நீக்கப்பட்டு, தனியார் நிறுவனங்கள் போதுமான அளவில் பயிற்சித் தொழிலாளர்களை பணியமர்த்துவதை உறுதி செய்ய வேண்டும்; அவர்களை குறித்த காலத்தில் நிரந்தர வேலைக்கு ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டும்; வேலை நாட்களின் எண்ணிக்கை 200 நாட்களாக உயர்த்தப்பட வேண்டும்; இது நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும். தெருவோர வியாபாரிகள் சர்வே நடத்தி அவர்களுக்கு உரிய உரிமத்தை வழங்க வேண்டும்; அவர்கள் சுமுகமாக பணிபுரியும் சூழலை உருவாக்க வேண்டும்.
  5. பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும்.
  6. எட்டாவது ஊதிய குழு உடனடியாக அமைக்கப்பட வேண்டும்
  7. நான்கு புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை திரும்பப்பெற வேண்டும். உலகத் தொழிலாளர் அமைப்பின் (ஐஎல்ஓ) இணக்க விதி 144 இன் படி உடனடியாக இந்திய தொழிலாளர் மாநாடு கூட்டப்பட வேண்டும்.
  8. பொது துறைகளை தனியார்மயமாக்குவது நிறுத்தப்பட வேண்டும்.
  9. வங்கி கடன்களை தள்ளுபடி செய்து பொதுத்துறை வங்கிகளை கொள்ளையடிப்பது நிறுத்தப்பட வேண்டும். நொடித்துப்போனவர் சட்டத்தின் கீழ் கடன் தள்ளுபடி, உற்பத்தியோடு இணைந்த ஊக்கத்தொகை, மூலதன முதலீட்டு ஊக்கத்தொகை (capital investment incentive) போன்றவை மூலமாக வழங்கப்படும் சலுகைகள் நிறுத்தப்பட வேண்டும். இதனால் முறையான வேலைவாய்ப்பு உருவாவதில்லை.
  10. ஆயுள் காப்பீடு (எல்ஐசி) பொதுக்காப்பீடு ( ஜிஐசி) நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவது நிறுத்தப்பட வேண்டும். எல்ஐசி – இந்திய வம்சாவளியினர் திட்டம் (PIO) மூலம் தனியார்மயப்படுத்துவது நிறுத்த வேண்டும்.
  11. சமூக நலத்துறை:
    சமூக நலத் துறையையும், சேவை துறையையும் தனியார் மயமாக்க கூடாது. சுகாதாரம், கல்வி போன்றவைகளுக்கு நிதி உதவிகளை அதிகரிக்க வேண்டும். குடிதண்ணீர், வீட்டு வசதி போன்றவைகளுக்கு போதிய ஒதுக்கீடு தர வேண்டும். பட்டியலின மக்களுக்கு, வரவு செலவுத் திட்டத்தில் உப திட்டம் (sub plan) வழியாக பலன் கிடைக்க வேண்டும். பாலின சமத்துவ வரவு செலவு அறிக்கை (gender budgeting) அதிகரிக்க வேண்டும். மூத்த குடிமக்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் வழங்கப்பட்டு வந்த சலுகைகளை மீண்டும் கொண்டு வரவேண்டும்.
  12. விலைவாசி உயர்வு:
    பெட்ரோலிய பொருட்களின் விலையை கட்டுக்குள் வைக்க வேண்டும். அனைவருக்கும் பொது விநியோகத் முறையை விரிவுபடுத்த வேண்டும். உணவு பொருள் தட்டுப்பாட்டிற்கு காரணமான யூக பேரமுறையை தடுக்க வேண்டும். அங்கன்வாடி, மதியஉணவு, ஆஷா, ஆசிரியர்கள் போன்ற திட்டப் பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். அவர்களுக்கு சட்டபூர்வ குறைந்தபட்ச சம்பளத்தை மற்ற வசதிகளோடு தர வேண்டும். ICDS, MDMS, NHM போன்ற ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு ஒதுக்கீடு அதிகரிக்க வேண்டும். குழந்தைகள் நலன் சேவைகளை உறுதி செய்ய வேண்டும்.
  13. EPF: அனைவருக்கும் குறைந்தது 9000 ஓய்வூதியம் தருவதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும் வருங்கால வைப்புத் நிதித்திட்டம் விரிவு செய்யப்பட வேண்டும்.
  14. ESI திட்டத்தை வலிமை படுத்த வேண்டும். உச்சவரம்பை அதிகரிக்க வேண்டும்
  15. குறைந்தபட்ச ஆதார விலை (MSP) :
    அனைத்து விவசாய பொருள்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்ய வேண்டும். விளை பொருட்களை கொள்முதல் செய்வதை உறுதி செய்ய வேண்டும்.
    ஐஎன்டியுசி ஏஐடியுசி எச்எம்எஸ் சிஐடியு ஏஐயுடியுசி டியுசிசி
    சேவா ஏஐசிசிடியு தொமுச யுடியுசி & துறைவாரி சம்மேளனங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version