2024 பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து ஏஐடியுசி அறிக்கை
மக்களை பிளவுபடுத்தும் வெறுப்பு அரசியலை நிராகரித்து , அரசியல் அமைப்புச் சட்டத்தை பாதுகாக்க உறுதியான நிலையெடுத்த மக்களை ஏஐடியுசி பாராட்டுகிறது.
இந்திய ஜனநாயகத்தின் மீது விழுந்த கருமேகங்களை சாதாரண உழைக்கும் மக்கள் அகற்றி உள்ளனர்.
உலகெங்கும் இருந்து கலாச்சாரத்தையும், பாரம்பரியங்களையும் உள்வாங்கிய, நமது பழைய சிந்து சமவெளி நாகரிகத்திற்கு ஏற்பட இருந்த பேரழிவில் இருந்து நாடு காப்பற்றப்பட்டுள்ளது. சர்வாதிகாரத்தின் ஆபத்தில் இருந்தும் வெறுப்புக் கலாசாரத்தில் இருந்தும், பிளவுபடுத்தும் சதிச்செயல்களில் இருந்தும் தமது தாய்நாட்டை மக்கள் காப்பாற்றி உள்ளனர்.
அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படையான விழுமியங்களான மதச்சார்பற்ற ஜனநாயகம், எதிர்க்கருத்திற்கான உரிமை, பேச்சுரிமை, அனைத்து மதங்களையும், மொழிகளையும், கலாச்சாரத்தையும் காப்பாற்ற வாக்களித்து உள்ளனர். சர்வாதிகாரிகளை எதிர்க்கவும், வீழ்த்தவும் முடியும் என்கிற மக்களின் நம்பிக்கை அதிகரித்து உள்ளது.
தொழிலாளர்கள் – விவசாயிகளின் பிரச்சினைகள், இளைஞர்களுக்கு வேலையின்மை, கல்வி பெறும் உரிமை, எளிய மக்களின் அடிப்படை உரிமைகளான குடியிருப்பு, குடிநீர், சுகாதார வசதி, பெண்களுக்கான நீதி -கண்ணியம் போன்ற முக்கியமான பிரச்சினைகளை தவிர்க்க மோடி அரசு மேற்கொண்ட எல்லா முயற்சிகளும் தோற்கடிக்கப்பட்டுள்ளன. பிளவுபடுத்தும் பேச்சுக்கள், பொய்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
அரசு இயந்திரங்களை தவறாகப் பயன்படுத்தியும், அடியாள் பலம் , பண பலம் மூலமாகவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை கவிழ்த்து, தங்களுக்கு இசைவான அரசுகளை நிறுவும் மோடி அரசின் தந்திரங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி பொதுத்துறைகளையும் அரசுத்துறைகளையும் பாதுகாப்பது, தொழிலாளர் விவசாயிகளுக்கு இடையில் ஒற்றுமையை பலப்படுத்துவது, முறைசாரா தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவது, வேலை வாய்ப்பை உருவாக்குவது, காலிப் பணியிடங்களை நிரப்புவது, பழைய ஓய்வூதியம் போன்ற கோரிக்கைகளுக்கான போராட்டங்களை தீவிரமாக நடத்தி, உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என ஏஐடியுசி தொழிலாளர் வர்க்கத்தைக் கேட்டுக் கொளகிறது. அதாவது ஆகஸ்டு 2022 ல் நடைபெற்ற விவசாயிகள்- தொழிலாளர் மாநாட்டுத் தீர்மானங்களுக்காக தொடர்ந்து வெற்றி பெறும் வரை போராட வேண்டும்.
ஒன்றுபட்ட தொழிற்சங்க இயக்கம் இதில் தீர்மானமான பங்காற்றியுள்ளது. நாட்டின் நலன், மக்கள் நலன் மேம்பட ஒன்று பட்ட தொழிலாளர், விவசாயிகள் இயக்கம் மேலும் வலுப்பெற வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.