1945, மே 9 ம் நாளில்தான், ஹிட்லரின் ஜெர்மனியானது, நிபந்தனையின்றி சோவியத் ஒன்றியத்தின் செம்படையிடமும், நேச நாடுகளிடமும் சரணடைந்தது. இதனால் இரண்டாவது உலகப் போர் முடிவுக்கு வந்தது. பெருமளவிலான உயிரிழப்பிற்குப் பிறகு பாசிசம் தோற்கடிக்கப்பட்டது. அதுமுதலாக, உலகம் முழுவதும் பாசிசத்திற்கு எதிரானவர்கள் மே 9 ம் நாளை பாசிசத்திற்கு எதிரான நாளாக கடைபிடித்து வருகிறார்கள்.
பாசிசம் என்றால் என்ன ? நாம் எங்கேயோ தேட வேண்டியதில்லை. இந்தியாவில், நம்மைச் சுற்றியே அதற்கான வேர்கள் உள்ளன. பாசிசம் என்பது கருத்துச் சொல்லும் உரிமையையும், நம்பிக்கையும், எண்ணத்தையும் ஏற்றுக் கொள்ளாதது ஆகும். இது மேலாதிக்க கருத்தியலில் வளர்கிறது. இது சாதாரண மக்களை அடிமை மனோபாவத்தை ஏற்றுக்கொள்ள வைக்கிறது. சர்வாதிகாரியை பின்பற்றுவதை பெருமைகொள்ள வைக்கிறது. ‘மற்றவர்களால்’ ஆபத்து வருகிறது என எளிய மக்களை நம்ப வைப்பதன் மூலம் பாசிசம் வளர்கிறது. எளிய மக்கள் தங்கள் சுதந்திரத்தை நாட்டிற்காகவும், தந்தையர் நாட்டிற்காகவும், தாய்நாட்டிற்காகவும், தேசத்திற்காகவும் (Rashtra) பலிகொடுப்பதை பெருமை என நம்பி ஏற்றுக்கொள்ள வைக்கிறது.
எனவே, மே 9 ம் நாளானது, பாசிசத்திற்கு எதிரான நடவடிக்கைகளை நினைவூட்ட வேண்டிய நாளாகும். அது ஒரு முறை தோற்கடிக்கப்பட்டு விட்டது. ஆனால் அது நம்மை மீண்டும் பீடிக்காமல் இருக்க நாம் விழிப்பாக இருக்க வேண்டும்.
ஆர்எஸ்எஸூம் அதனுடைய எண்ணற்ற கிளைகளும் இந்தியாவில் பாசிசத்தை முன்னெடுப்பவர்கள் ஆவார்கள். அதனுடைய அமைப்பாளர்கள், இத்தாலி நாட்டின் முசோலினி, ஜெர்மனி நாட்டின் ஹிட்லர் ஆகியோருடன் தொடர்பில் இருந்தார்கள். அவர்களின் ‘ஒழுக்கமான’ வழித்தோன்றல்களை கண்டு ஈர்க்கப்பட்டார்கள். டாக்டர். மூஞ்சே, ஹெட்டேவர், கோல்வாக்கர், சவர்க்கர் ஆகியோர் இந்துத்துவாவையும், இந்து ராஷ்டிராவையும் இங்கு பரப்பினர்.
மற்ற மத நம்பிக்கை கொண்ட முக்கியமாக இஸ்லாம் ஆட்சியாளர்களால் இந்துக்கள் நசுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டனர் என்று சொல்லி வரலாற்றை திரித்தனர். ( இந்தியாவிற்கு வந்த முகலாயர்கள் மதத்தை பரப்ப வரவில்லை. இங்குள்ள பண்பாட்டோடு இசுலாமியர்கள் கலந்துபோனார்கள் என்ற உண்மையை அவர்கள் ஒப்புக்கொள்வதில்லை) மனுஸ்மிருதி பெண்களுக்கு எதிராக வெளிப்படையாக பேசுகிறது. தாழ்ந்த சாதியினர் என்று சொல்லப்படுபவர்களுக்கு எதிராக உள்ளது. பார்ப்பனர்களை உயர்ந்த சாதியினராக சித்தரிக்கிறது. இந்த மனுஸ்மிருதியைத்தான் அவர்கள் வழிநடத்தும் சட்டமாக கருதுகிறார்கள். இன்று அவர்கள் கல்வி, குடிமைப்பணி, நீதித்துறை, காவல், இராணுவம் என எல்லா துறைகளிலும் நிதி மூலதனத்தின் மௌனமான ஆதரவோடு வேரூன்றி உள்ளனர்.
இப்போஏது, நமது முன்னோர்கள் வகுத்துத் தந்த அரசமைப்பின்படி பாராளுமன்ற தேர்தல்களை நடத்திக் கொண்டு இருக்கிறோம். ஆர்எஸ்எஸின் அரசியல் பிரிவான பாஜக தேர்தலில் பங்குபெற்றுள்ளது. ஆரம்பத்தில் அவர்கள் அரசியல் அமைப்பு உரிமையை “வெளிநாட்டு சிந்தனை” என ஆரம்பத்தில் எதிர்த்தவர்கள்தான். அவர்கள் மனுஸ்மிருதியை நமது அரசில் சட்டமாக வேண்டும் என பேசியவர்கள். பாராளுமன்ற தேர்தலில் சாம, பேத, தான, தண்ட முறைகள் மூலமாக தேர்தல் முடிவுகளை மாற்ற நினைக்கிறார்கள். இந்த யுத்தியின் மூலமாகவே அரசியல் கட்சிகளை உடைத்து அதிகாரத்தை கைப்பற்றினர்கள். அவர்கள்தான் இந்தியாவில் பாசிசத்திற்கான விதைகள் ஆவார்கள்.
தேர்தல் முடிவுகள் வெளிவர உள்ளன. பாசிச எதிர்ப்பு சக்திகள், பாஜக- ஆர்எஸ்எஸை தோற்கடிக்க வேண்டும் என பரவலாக மக்களிடம் வேண்டுகோள் வைத்துள்ளன.
தேர்தல் முடிவுகளை யாராலும் கணிக்க முடியாது. முடிவு எப்படி இருந்தாலும், மே 9 ம் நாளானது பாசிசத்திற்கு எதிரான நாள் என்பதை நாம் நினைவில் கொள்ளுவோம். பாசிசத்திற்கு எதிரான போராட்டம் எப்போதும் முடியாது. எல்லா நேரங்களிலும் நாம் விழிப்பாக இருக்க வேண்டும்.
– ஏஐடியுசி செயற்குழு. 9.5.2024