நிகழ்ச்சிகள்

Published

on

வேலையின்மையால் சட்டவிரோதமாக அமெரிக்காவிற்கு குடிபுகுபவர்களில் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது – பரகால பிரபாகர்

சிந்தனையாளர் மன்றம் சமீபத்தில் நடத்திய கருத்தரங்கில், பொருளாதார நிபுணரும், ‘புதிய இந்தியா எனும் கோணல் மரம்’ (The crooked timber of new india) என்ற நூலின் ஆசிரியருமான பரகால பிரபாகர் ‘நெருக்கடிகுள்ளாகும்  மதிப்புகள்’ (values at stake) என்ற பொருளில் பேசினார். உலகத்திலேயே பெரிய அரசியல் கட்சி என்று சொல்லிக் கொள்ளும் பாஜக, இந்தியாவில் பெரிய சிறுபான்மையினரான முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர் இல்லாமலேயே அமைச்சரவை அமைத்து உள்ளது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வேலையின்மை அதிகரித்து உள்ளது. எனவேதான், போர் நடக்கும் இஸ்ரேல், உக்ரேன் நாடுகளுக்கு  உயிரைப் பணயம் வைத்து இளைஞர்கள் செல்கின்றனர் என்றார். சட்டவிரோதமாக அமெரிக்காவிற்கு குடிபுகுபவர்களில் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது என்றார். அவர் மேலும் பேசியதாவது :
இந்து – முஸ்லிம் கலவரம், இடப்பெயர்ச்சி, அகதிகள் பிரச்சினை போன்றவை நடந்த நெருக்கடியான காலத்திலும், அரசியல் சாசனம் மதச்சார்பற்ற இந்தியாவை நமக்குக் கொடுத்தது. இந்திய – பாகிஸ்தான் பிரிவினை நடந்தபோதும் அதிகாரம் மிக்க ஒரே அரசாக (unitary state) இருக்க வேண்டும் என நமது முன்னோர்கள் நினைக்கவில்லை. கூட்டாட்சி அரசமைப்பை நமக்குத் தந்தார்கள். அகதிகள் பிரச்சினை இருந்த போதும், பன்மைத்துவம், மதச்சார்பின்மை, கூட்டாட்சி போன்ற கொள்கைகளை நமது முந்தைய தலைமுறை தந்தது.
ஆனால் சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு, அவைகளுக்கு ஆபத்து வருகிறது என்றால் அதற்கு இப்போதுள்ள அரசியல் கட்சிகள்தான் காரணம்; அரசிலமைப்பு விழுமியங்களை மக்கள் மனதில் பதிய வைக்கவில்லை என்று பொருளாகும்.
அசமத்துவமானது (inequality),கடந்த பத்து ஆண்டுகளில், அதிகரித்துள்ளது.  வெள்ளைக்காரர்கள் ஆட்சிக்காலத்தை விட அதிகரித்துள்ளது. ஒரு சத இந்தியனுக்கு 22 % தேசிய வருமானம் கிடைக்கிறது. ஒரு சத இந்தியனுக்கு 44 % சொத்துகள் உள்ளன. ஆனால் நிதிக்குழுவின் தலைவரான அரவிந்த் பனகாரியா அசமத்துவத்திற்காக தூக்கத்தை  இழக்காதீர்கள் (don’t lose sleep over inequality) என்று கட்டுரை எழுதுகிறார். உலகத் தொழிலாளர் அமைப்பு (ILO) 62% இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை என்று கூறுகிறது. ஆனால் இந்திய அரசாங்கத்தின் தலைமை பொருளாதார ஆலோசகர் ‘வேலைவாய்ப்பு இல்லாததற்கு அரசாங்கத்திற்கு பொறுப்பு இல்லை’ என்று கூறுகிறார்.
2022 ல் இரயில்வேயில் நடந்த 35,000 தொழில் நுட்பம் அல்லாத பணியிடங்களுக்கு ஒரு கோடியே 25 இலட்சம் விண்ணப்பங்கள்  வந்தன. போர் நடந்து கொண்டிருக்கும் சூழலில் இஸ்ரேல், பாலஸ்தீன தொழிலாளர்களுக்கு வேலையை பறித்துவிட்டது. அந்த வேலையைச் செய்ய உ.பி, ஹரியானா, ம.பி., ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து இஸ்ரேல் செல்கிறார்கள். வேலையில்லாமல் இங்கு சாவதைவிட, அங்கு செல்லலாம் என நினைக்கின்றனர். இதே போல உக்ரேன் போரில் இறந்த ஒருவரின் உடல் கடந்த வாரம் செகந்தரபாத்திற்கு வந்தது. ஈரான், யேமன், சிரியா போன்ற நாடுகளைவிட இந்தியாவில்  வேலைவாய்ப்பின்மை அதிகம். 24 % வேலைவாய்ப்பின்மை உள்ளது. ஜப்பானில் 6 % உள்ளது. உலகத் தொழிலாளர் அமைப்பு 60% படித்த இளைஞர்களுக்கு வேலையில்லை என்கிறது. வேலையில்லாதவர்களில் 25 வயதுக்கு கீழே உள்ளவர்கள் 40 % உள்ளனர்.  பிப்ரவரி 2024 ல் அரசாங்கம் கொடுத்த வெள்ளை அறிக்கையில் எந்த விவரங்களும் இல்லை. கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பை விட இப்போது சர்கரை, பருப்பு, இஞ்சி போன்ற உணவுப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.
கடந்த கர்நாடக தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தன்னை எதிர்கட்சிகள் 99 முறை தவறாகப் பேசிவிட்டனர் என்றார். ஆனால் இந்த அரசாங்கத்திடம் கொரோனாவில் இறந்தவர்களைப் பற்றி புள்ளிவிவரம் இல்லை. எத்தனை பேருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டது என்ற விவரம் இல்லை. எத்தனை பேர் கொரானாவினால் இடம்பெயர்ந்தனர் என்ற விவரம் இல்லை.  புள்ளிவிவரங்கள், தகவல்களை இந்த அரசாங்கம் வெளியிடுவதில்லை. பணவீக்கம் அதிகரித்துள்ளது.
குடும்பங்களின் கடன், முன்பை விட அதிக அளவில் அதாவது 40%  உள்ளது. சேமிப்பானது 5 சதமாக குறைந்துள்ளது. கடந்த நிதியாண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி ஆறு மாதத்திலேயே தீர்ந்துவிட்டது. அந்த அளவுக்கு கிராமப்புற  ஏழ்மை அதிகரித்து உள்ளது.
உள்நாட்டு முதலீடு 30 சதத்திலிருந்து 19 சதமாக  குறைந்துள்ளது. 30 சதமாக இருந்த கார்ப்பரேட் வரியை 22 சதமாக குறைத்து அவர்களுக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது. 25 இலட்சம் கோடி ரூபாய்க்கான கடனை பெருமுதலாளிகளுக்கு தள்ளுபடி செய்துள்ளனர். உற்பத்திக்கான ஊக்கத்தொகை (productivity linked incentive) தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது.
ரிசர்வ் வங்கியில் உள்ள நிதியை அரசு பெற்றுள்ளது. பொதுத்துறை நிறுவனங்களையும், அரசு சொத்துகளையும் விற்று அரசு நிதி பெற்றுள்ளது. ஆனாலும் 2023 ல் 1.60 இலட்சம் கோடி ரூபாய் கடனில் இந்தியா உள்ளது.
தேர்தல் பத்திரம் மூலம் நிதி கொடுத்து, அரவிந்த பார்மா என்ற மருந்துக் கம்பெனி அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 1000 கோடி ரூபாய்க்கு உற்பத்திக்கான ஊக்கத்தொகையை சலுகையாகப் பெற்றுள்ளது.
2014 ல் இந்தியக் குடியுரிமை வேண்டாம் என 1.29 இலட்சம்பேர் தங்கள் கடவுச்சீட்டுகளை கொடுத்துள்ளனர். இப்போது அது 2.25 இலட்சம் பேர் அவ்வாறு தங்கள் குடிரிமைகளைத் துறந்துள்ளனர். 96,000 இந்தியர்கள் சட்டவிரோதமாக அமெரிக்கா தனது செல்ல முயன்றதாக பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. துடிப்பான குஜராத் என அழைக்கப்படும் மாநிலத்தில் இருந்து மட்டும் 26,000 பேர் அமெரிக்கா செல்ல சட்டவிரோதமாக முயன்றனர். ஏற்கனவே இலத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்துதான் இவ்வாறு செல்வர். இப்போது இந்தியாவும் அந்தப்  பட்டியலில் சேர்ந்து கொண்டது.
ஐந்து நிமிடம் மட்டுமே விவாதம் நடத்தி ,மூன்று வேளாண் சட்டங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. இதனை எதிர்த்து விவசாயிகள் போராடினர்.ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை வாக்களிப்பது மட்டுமே ஜனநாயகம் இல்லை. விவாதிப்பது, முரண்படுவது, பேசுவது, எதிர்க் கருத்து சொல்வது, அதைப் பரிசீலீப்பது  போன்றவைகளும் ஜனநாயகத்தின் ஒரு பகுதிதான். ஆனால் அவர்களை ஆண்டி இந்தியன், அர்பன் நக்சல், காலிஸ்தானி, அந்தோலன் ஜீவி என விதவிதமாக அவர்களைப் பாஜக திட்டியது. மாநில தேர்தல்களுக்கு முன்பாக  விவாதமே இல்லாமல் அந்த மூன்று விவசாயச் சட்டங்களை திரும்பப் பெற்றுக் கொண்டது. இதற்கும் விவாதம் இல்லை.
உலகிலேயே பெரிய அரசியல் கட்சி என்று பாஜக சொல்கிறது. கடந்த அமைச்சரவையில், இந்தியாவின் சிறுபான்மையினரில் பெரும்பான்மையாக இருக்கும் இசுலாமியர் ஒருவர் கூட இல்லை. இந்தியாவை இந்தியாவின் பெரிய மாநிலமான உபியில் முஸ்லிம்கள் அதிக அளவில் உள்ளனர். ஆனால் ஒரு முஸ்லிம் கூட அங்கு  பாஜகவின் சட்ட மன்ற உறுப்பினராக இல்லை. இந்த நிலைதான் குஜராத், கர்நாடக மாநிலத்திலும் உள்ளது.
ஜி.20 மாநாடு நடக்கும் போது ‘வாசுதேவய்யா குடும்பம்’ என சமஸ்கிருதத்தில் பெயர் சூட்டினர். சமக்கிருதம் என்பதாலேயே அது பழங்காலத்தில் எழுதப்பட்டது என்று இல்லை. இப்போது கூட சமஸ்கிருதத்தில் எழுதலாம். அதற்கு ‘உலகமே என் குடும்பம்’ என்பது பொருள் என்று சொல்கிறார்கள். அப்படிச் சொல்லும் மோடிதான் மணிப்பூரில் கடந்த ஓராண்டாக கலவரம் நடந்து கொண்டிருக்கிறது. அங்கு பிரதமரான அவர் செல்லவில்லை. வடகிழக்கு மாநிலங்கள் பற்றி நாம் கண்டு கொள்வதில்லை; ஊடகம் பேசுவதில்லை; அரசியல் கட்சிகள் பேசுவதில்லை.
இந்தியாவின் தலைநகரான தில்லியில் ‘கும்பல் கொலை’ பற்றி பேசுகிறார்கள் என்றால் நிலமை நம் கண்முன்னே மாறிவிட்டது என்று தெரிந்துகொள்ளுங்கள்.
தேர்தலுக்கு பிறகு ‘பிரதமர் கேர் நிதி’ ஒரு பேசு பொருளாக மாறும். ஏனெனில் அதில் நடந்துள்ள செலவு பற்றி நமக்குத் தெரியாது. தீர்ப்புகள் எத்தகையதாக இருந்தாலும் ‘நாங்கள் நீதிமன்றத்தை மதிக்கிறோம்’ என்று சொல்லிதான் அரசியல் கட்சிகள் தீர்ப்பு பற்றி பேசுவார்கள். ஆனால் மோடி   தேர்தல் பத்திர தீர்ப்பு பற்றி ‘பின்னர் வருந்துவார்கள்’ என்று கூறுகிறார். அப்படியானால் இவர் யாரை மிரட்டுகிறார். உச்சநீதிமன்ற நீதிபதிகளை மிரட்டுகிறார் என்றே நான் கருதுகிறேன்.
அடுத்த ஆண்டு 2025 ஆர்எஸ்எஸ் உருவான நூற்றாண்டு. இந்துத்துவ கொள்கை என்பது அவர்களுடைய நீண்ட கால திட்டம். அவ்வளவு எளிதாக அவர்கள் ஓய மாட்டார்கள். இசுலாமிய வெறுப்பு, கூட்டாட்சி மீது ஒவ்வாமை போன்றவை அவர்கள் இரத்தத்தில் ஊறி இருக்கிறது. நெடிய போராட்டத்திற்குப் பிறகு உருவான இந்தியாவை காப்பாற்றுவது நமது கடமை. வாராணாசியில் நடந்த தேர்தலில் விவிபாட் ஒப்புகைச் சீட்டுகளை விட, பதிவான வாக்குகள் அதிகம் என்றனர். எனவே விழிப்போடு இருக்க வேண்டும் என்றார். பார்வையாளர்கள் நிறைந்த அவையில், உயிர்ப்போடும், மெல்லிய நகைச்சுவையோடும்  பரக்கால பிரபாகர் ஜனநாயகத்தை, பன்மைத்துவத்தை, கூட்டாட்சியை காக்க வேண்டிய அவசியத்தை எளிய மொழியில் பேசினார். இவர் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

####

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version