கடிதங்கள்

தொழிலாளர், விவசாயிகள், மக்கள் விரோத, மோடி அரசை வீழ்த்த!தமிழ்நாட்டின் அனைத்து தொழிற்சங்கங்கள்திமுக தலைமையிலான ‘இந்தியா’கூட்டணிக்கு ஆதரவு!

Published

on

“தொழிலாளர் படை வளர்ச்சியின் தூண் என்கிறது பாஜகவின் 2014 தேர்தல் அறிக்கை. ஆனால் மோடி அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட்டுகள் தான் நாட்டின் வளர்ச்சிக்கு காரணம் என்றார் மோடி. தொழிலாளர்கள் 150 ஆண்டு காலமாக போராடிப் பெற்ற சட்டங்கள் 44 ஐ சில நொடிகளில் தூக்கி எறிந்து விட்டு, அவற்றில் ஏற்கனவே இருந்த நல்லவைகள் அனைத்தையும் அகற்றி நான்கு சட்டத் தொகுப்புகளாக நிறைவேற்றப்பட்டது. தொழிற்சங்கங்கள் ஒன்றுபட்டு போராடியதால் இந்த நான்கு சட்டத் தொகுப்புகள் அமுலுக்கு கொண்டு வர முடியவில்லை. தொழிலாளர்களின் குறைந்த பட்ச ஊதியம், ஓய்வூதியம், பணிப்பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு, பணியிடப் பாதுகாப்பு அனைத்தும் கேள்விக்குறியாகி உள்ளன.
நான்கு சட்டத் தொகுப்புகள் செயலுக்கு வரும் முன்பே ஆஷா, அங்கன்வாடி போன்ற தொழிலாளர்கள் திட்ட தொழிலாளர்களும், இணைய வழி வியாபாரத்தில் உணவுப் பொருள் உள்ளிட்டவற்றை வீட்டில் வந்து கொடுக்கும் கிக் தொழிலாளர்களும் உள்ளிட்ட 30 கோடி தொழிலாளர்கள் தொழிலாளர் என்ற வரையறையில் இருந்தே விரட்டி அடிக்கப்பட்டு விட்டனர்.
கட்டிட தொழிலாளர் சட்டத்தை செயலிழக்கச் செய்து, அதில் உள்ள ஒரு லட்சம் கோடி ரூபாய் தொழிலாளர் பணத்தை ஏப்பம் விட திட்டம் தீட்டப்பட்டுள்ளது. ‘இ’ ஷ்ரம் எனும் பெயரில் 30 கோடி தொழிலாளர்களை பதிவு செய்து; அவர்கள் நலனுக்காக இது வரை ஒரு பைசா கூட ஒதுக்கவில்லை. வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் ஏழைகளின் எண்ணிக்கை 25% த்தை தாண்டி இருக்கிறது. விவசாயிகள் 700 க்கும் அதிகமானோர் போராட்டகளத்தில் உயிரை பலி கொடுத்த பின்பும், விவசாயிகளிடம் கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.
தேசிய சொத்துக்கள் மற்றும் நிதிகளை ஒரு சில தனியார் கார்ப்பரேட்டுகளுக்கு வெட்கமின்றி தாரை வார்க்கின்றனர். பாராளுமன்றம், நீதித்துறை, தேர்தல் ஆணையம் போன்ற இந்திய ஜனநாயகத்தின் அனைத்து அமைப்புகளையும் ஊடுருவி, கைப்பற்றுகின்றனர். ஒட்டுமொத்த உழைக்கும் மக்களின் வாழ்வு மற்றும் வாழ்வாதாரத்தின் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை மோடி அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. பல்வேறு சட்டங்கள், நிர்வாக ஆணைகள் மற்றும் கொள்கைகள் மூலம் தொழிலாளர், விவசாயிகள் மற்றும் மக்கள் விரோத நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் உரிமைகளை அரசியல் சட்டத்திற்கு விரோதமாக மறுக்கிறது. பல்வேறு பிரிவு மக்களின் அனைத்து ஜனநாயக உரிமைகளையும், அவர்களின் அனைத்து எதிர்ப்புக் குரல்களையும் நசுக்குகிறது. அரசியலமைப்பு நிறுவனங்களை வகுப்புவாத மயமாக்குவது, நிர்வாக அதிகாரிகள் மற்றும் அமைப்புகளை முற்றிலும் தவறாகப் பயன்படுத்துவது, துஷ்பிரயோகம் செய்வது போன்ற ஆபத்தான விளையாட்டுக்களை திட்டமிட்டு நடத்துகிறது. ஊடக சுதந்திரத்தின் மீது தாக்குதல் நடத்துகிறது. பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிரான குற்றவாளிகளை வெட்கமின்றி பாதுகாக்கிறது.
தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி பெறும் சட்டம் மூலம் கார்ப்பரேட்டுகள் மற்றும் பாஜகவின் கள்ளக்கூட்டை சட்டபூர்வமாக்கி, மக்களுக்கு பதில் சொல்ல முடியாது என்ற பாஜகவின் ஆணவம் உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் தகர்த்தெறியப் பட்டுள்ளது. பொருளாதாரத்தில் பாஜக ஆட்சி கடைபிடித்த கொள்கையின் விளைவாக நாட்டிற்கு நீண்ட கால ஆபத்தை எதிர் கொள்ளூம் அபாயம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
ஒன்றிய பாஜக மோடி அரசின் பேரழிவுக் கொள்கைகளுக்கு எதிராக தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் மக்களின் பல்வேறு பிரிவுகள் ஏற்கனவே பல முனைகளில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணி, பாசிச வகுப்புவாத கார்ப்பரேட் கூட்டணியை எதிர்த்து, தோற்கடிப்பதற்கான ஒன்றுபட்ட போராட்டங்களை நடத்தி வந்துள்ளன. இந்தியா கூட்டணி கட்சிகளும், மக்கள் அமைப்புகளும் போராட்டத்தில் ஆதரவளித்து பங்கேற்றன.
விவசாயிகளை பாதிக்கும் 3 வேளாண் சட்டங்கள், பொதுமக்களை பாதிக்கும் மோட்டார் வாகன சட்டத் திருத்தம், மின்சார திருத்தச் சட்டம் போன்றவைகளை திரும்பப் பெறவும் தொழிலாளர்கள், விவசாயிகள் கோரிக்கைகளை நிறைவேற்றவும் இந்தியா கூட்டணி கட்சிகள் வாக்குறுதி அளித்துள்ளன.
ஆகவே, மாணவர்களை, இளைஞர்களை, பெண்களை, விவசாயிகளை, தொழிலாளர்களை, பொதுமக்களை என அனைத்து தரப்பினரையும் வஞ்சிக்கும் மோடி அரசையும், விவசாயிகள் தொழிலாளர் விரோத சட்டங்களை நிறைவேற்றுவதில் பாஜக அரசுக்கு உடந்தையாக இருந்த அதிமுக கூட்டணியையும் வீழ்த்தி நாட்டைப் பாதுகாக்கவும், தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்திட வேண்டுகிறோம்.

மு.சண்முகம்,எம்.பி. க.அ.ராஜாஸ்ரீதர் ம.இராதாகிருஷ்ணன் ஜி.சுகுமாறன் டி.வி. சேவியர்
LPF HMS AITUC CITU INTUC

எம்.திருநாவுக்கரசு எஸ்.மாயாண்டி இரா.அந்திரிதாஸ் ஏ.எஸ்.குமார் க.பேரறிவாளன்
AICCTU TUCC MLF LTUC LLF

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version