பீடி சுற்றும் தொழிறலாளர்கள் பெரும்பாலும் இஸ்லாமியர்களாக இருப்பதால், அவர்களுக்கு ரம்ஜான் பண்டிகைக்கு போனஸ் வழங்குவது வழக்கமாகும். அதனடிப்படையில்,
2023- 2024 ஆம் ஆண்டுக்கான ரம்ஜான் பண்டிகை போனஸ் மற்றும் இதர பொதுக் கோரிக்கைகள் தொடர்பாக ஏஐடியுசி – கொங்கு மண்டல ஐக்கிய பீடித் தொழிலாளர் சங்கத்திற்கும், ஈரோடு, விபிஆர் காலேஜ் பீடி கம்பெனி நிர்வாகத்திற்கும் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில், 2023-2024 ஆம் ஆண்டுக்கான போனஸாக 1000 பீடிகளுக்கு ரூ.32/- வீதம் வழங்குவதென உடன்பாடு ஏற்பட்டது. இது கடந்த ஆண்டு வழங்கப்பட்டதை விட ரூ.2/- கூடுதலாகும். இப்போனஸ் தொகைகளை 30-3-2024 முதல் தொழிலாளர்களுக்கு வழங்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
மேலும், தகுதியான அனைத்து தொழிலாளர்களையும் PF மற்றும் ESI திட்டத்தில் உறுப்பினராக சேர்க்க வேண்டும், அனைத்து தொழிலாளர்களுக்கும் தினசரி குறைந்தபட்சம் 1000 பீடிகள் சுற்றுவதற்கு தேவையான இலை, தூள் வழங்க வேண்டும், சென்னை தொழிலாளர் துறை ஆணையர் அவர்கள் அறிவித்துள்ளபடி வரும் 1-4-2024 முதல் 1000 பீடிகளுக்கு ரூ15/- வீதம் பஞ்சப்படி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட சங்கத்தின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக நிர்வாகத் தரப்பில் ஒப்புக் கொள்ளப்பட்டது.
இப்பேச்சுவார்த்தைகளில் விபிஆர் காலேஜ் பீடி கம்பெனி உரிமையாளர்கள் விபிஆர்.தங்கமணி, ஆர்.அனந்தராமகிருஷ்ணன், ஏ.சிவராம் கிருஷ்ணன் ஆகியோரும், ஏஐடியுசி சங்கம் சார்பில் சங்கப் பொதுச்செயலாளரும், ஏஐடியுசி மாநில செயலாளருமான எஸ்.சின்னசாமி, சங்கத் துணைத் தலைவர்கள் கே.எம்.யூசுப் (கொக்கராயன் பேட்டை), மெக்ரூன்(கவுந்தப்பாடி), ஜிலானி (அந்தியூர்), சங்க செயலாளர்கள் அஸ்ரப் அலி (குந்துபாயூர்), சிக்கந்தர் (பல்லடம்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்