ஜனநாயகத்தில் குடிமக்கள் தங்கள் விரும்புகின்ற ஓர் அரசை தேர்ந்தெடுக்க உரிமை உள்ளது. அப்படி தேர்ந்தெடுக்கப்படும் அரசானது, அரசியலமைப்பின் அடிப்படை நெறிகளான சுதந்திரம், சகோதரத்துவம்,நீதி போன்றவைகளை உயர்த்திப்பிடிக்க வேண்டும். பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கிறது என்பதற்காக ஆளுகின்ற கட்சி, இத்தைய நெறிமுறைகளுக்கு விரோதமாக சட்டம் இயற்ற முடியாது. இதற்கு சமீபத்திய உதாரணம் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலாக்கப்படும் என்ற அறிவிப்பாகும். பாகுபாடான இந்த சட்டத்தை எதிர்த்து 2021 ஆண்டு முழுமையும், இந்தியாவெங்கும் போராட்டம் நடந்தது.
தற்போதைய பாஜக அரசானது இரண்டு முறை அதிகாரத்திற்கு தேந்தெடுக்கப்பட்டாலும், அரசியல் அமைப்பு நெறிமுறைகளை கடைபிடிப்பதில்லை. கடந்த பத்து ஆண்டுகளாக அதன் நடவடிக்கைகள் அதை தெரிவிக்கின்றன.
அவர்கள் நடவடிக்கைகள், எல்லாவிதமான மாற்றுக்குரலையும் அமைதியாக்கி விட்டன. ஊடகங்களை ஒட்டுமொத்தமாக தனக்கானதாக்கி விட்டனர். எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை வெளியேற்றுகின்றனர். அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத் துறை போன்ற அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை மிரட்டியோ, ஆசைகாட்டியோ, பெருந்தொகை கொடுத்தோ பாஜக தனது கட்சிக்கு இழுத்து, அதன் மூலமாக எதிர்கட்சிகள் ஆட்சி செய்யும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை மாற்றுகின்றனர். பாஜகவிற்கு எதிரான இத்தகைய குற்றச்சாட்டுகளை அமலாக்கத்துறையோ, மத்திய புலனாய்வுத் துறையோ விசாரிப்பதில்லை.
நீதிமன்றங்கள், தேர்தல் ஆணையம், தலைமை கணக்குத் தணிக்கையாளர் போன்ற சுயேச்சையான அரசமைப்பு நிறுவனங்கள் மீது தாக்கம் செலுத்தி, அவர்கள் செய்யும் தவறுகள் வெளியே வராமல் பார்த்துக்கொள்கிறார்கள். பாஜக அரசாங்கம் கொண்டு வந்த சட்டங்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்குகள் காலவரையறையின்றி கிடப்பில் இருக்கின்றன. தேர்தல் பத்திர வழக்கில் சமீபத்தில் உச்சநீதிமன்றம் பாஜகவிற்கு எதிராக வழங்கியுள்ள தீர்ப்பு பாராட்டப்படுகிறது. பல வழக்குகளில் இதற்கு மட்டும்தான் தீர்ப்பு வந்துள்ளது. பலவிதமான பொருளாதார நடவடிக்கைகள், கேள்வி ஏதுமின்றி மறைக்கப்படுகின்றன. ராம ஜென்ம பூமி வழக்கு, குஜராத் படுகொலை தொடர்பான வழக்குகள், அரசியல் சாசன 370 பிரிவு வழக்கு, நீதிபதி லோயா மரணம், ரபேல் விமான ஊழல் வழக்கு போன்றவைகளில் அரசாங்கத்தின் நிலைபாடுகளை உச்சநீதிமன்றம் அப்படியே ஏற்றுக்கொண்டுள்ளது.
உச்சநீதிமன்றம் கொடுத்துள்ள தீர்ப்புகளுக்கு மாறாக, அவர்களுக்கு ஏற்றபடி சட்டங்களை போட்டுவருகின்றனர். அவர்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ளாத அலுவலர்களை வெளியேற்றுகிறார்கள்; வேட்டையாடுகிறார்கள்.
அரசாங்க புள்ளிவிபரங்கள் வெளிவராதால், அவர்களின் மிகையான பரப்புரைகளை எதிர்கொள்ள முடிவதில்லை. நிதி ஆயோகின் தலைவர் எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல்இன்றியும், “இந்தியாவில் வறுமை 5 % குறைந்துள்ளது” என்கிறார். இத்தகைய காரணங்களால் பாஜகாவால் ஆளப்படும் ஒன்றிய அரசினாலும், பாஜக, ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களாலும் இந்தியாவில் ஜனநாயகம் வீழ்ச்சி அடைந்துள்ளது.
புது தில்லியில், மார்ச்சு 16,17 தேதிகளில் நடைபெறும் ஏஐடியுசியின் நிர்வாகக்குழுவானது, இந்தியாவில் ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டுமானால், வரவிருக்கிற தேர்தலில் பாஜக தோற்கடிக்கப்பட வேண்டும் என்கிறது.