வீட்டு நுகர்வு செலவு கணக்கெடுப்பு ஆய்வு குறித்து முடிவுகளை ஒன்றிய அரசு அண்மையில் வெளியிட்டுள்ளது.
2017-18 இல் தேசிய புள்ளியல் அலுவலகம் நுகர்வோர் செலவின கணக்கீட்டை ஒன்றிய அரசுக்கு தந்தது.
1970களில் இருந்து 2017-18ல் முதல் முறையாக தனிநபர் நுகர்வு செலவு குறைந்துள்ளது என்று கணக்கெடுப்பு காட்டியது. அதனைப் பொறுக்காத மோடி அரசு, அதை “தரவுத்தரமற்றது” என்று குற்றம் சாட்டியது. அந்த முடிவுகளை வெளியிட வேண்டாம் என்று 2019 நவம்பரில் முடிவு செய்தது.
தரவுத் தரத்தில் அனைத்து “செம்மைப்படுத்தல்களையும்’ இணைத்து, 2020-’21 மற்றும் 2021-’22 ஆம் ஆண்டுகளில் அடுத்த நுகர்வோர் செலவினக் கணக்கெடுப்பை நடத்தப் போவதாக அறிவித்தது.
தனது ஆட்சிக்கு சிரமம் ஏற்படுத்தாத வகையில் திருத்தங்களை எல்லாம் செய்து “செம்மைப்படுத்தி” இப்போது முடிவுகள் வெளியிடப்பட்டு விட்டன.
உணவை விட மற்ற வகைகளுக்கு இந்தியர்கள் அதிக செலவு செய்வதாகவும், இது வளர்ச்சியை கட்டுவதாகவும் பல ஊடகங்கள் மோடி அரசுக்கு ஜால்ரா போட்டு வருகின்றன.
உண்மை நிலவரம் எளிதாக வெளியில் தெரிந்து விடாமல் மறைக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையிலும் கூட, பெரும்பான்மையான இந்திய மக்கள் தங்களது உணவுக்கு கூட போதிய செலவு செய்ய முடியாத நிலையில் வாழ்கிறார்கள் என்ற உண்மை வெளிப்பட்டு உள்ளது.
வீட்டில் சமைக்காமல் வெளியில் இருந்து தருவிக்கப்படும் உணவுக்கான செலவு கூடுதலாகி இருக்கிறதாம். இது வளர்ச்சியா? குடும்பங்கள் சிதைந்து, உதவிக்கு ஆளின்றி, ஆணும் பெண்ணும் வேலை செய்தால் தான் குடும்பச் செலவை சமாளிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்ட பின்பு, சமைப்பதற்குரிய நேரம் வீட்டில் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மையாகும்.
நகரப் பகுதிகளில் வாடகை பன்மடங்கு உயர்ந்திருக்கிறது. பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக போக்குவரத்துக்கு இந்தியர்கள் முன்பை விட அதிகம் செலவழிக்கிறார்கள் என்பதை கணக்கீடு காட்டுகிறது
மொபைல் போன்கள், ஃப்ரிட்ஜ், தொலைக்காட்சி பெட்டிகள், இருசக்கர வாகனங்கள், இன்டர்நெட்டுக்கான செலவு ஆகியவை தவிர்க்க முடியாத செலவுகள் ஆகிவிட்டன. முன்பை விட இந்தச் செலவுகள் அதிகமானது உண்மை.
எதை வேண்டுமானாலும் ஒரு ரூபாய் கொடுத்து தவணையில் எடுத்துச் சொல்லுங்கள் என்று கார்ப்பரேட்டுகள் நடத்திய வர்த்தக சூதாட்ட, கண் கவரும் விளம்பர
வலையில் இந்தியர்கள் சிக்கிக் கொண்டார்கள் என்பதும் மெய்தான்.
அதிக வேலை, போதிய ஓய்வின்மை, தூக்கக் குறைபாடு இவை எல்லாம் இந்தியர்களை மருத்துவமனையை நோக்கி தள்ளுகின்றன. அரசின் கையில் இருந்த பொது மருத்துவம், தனியாரிடம் தள்ளப்பட்டு வணிகமயமாகிவிட்டதால், உள்நோயாளியாகவும் வெளி நோயாளியாகவும் இந்தியர்கள் செய்யும் செலவு அதிகரித்திருப்பதை இந்த கணக்கீடு வெளிப்படுத்துகிறது. அதேபோல கல்விக்கான செலவும் உயர்ந்திருக்கிறது.
செலவுகள் அதிகமாகும் போது, வரவு அதிகரிக்கவில்லை என்பதை பல ஆய்வுகள், அறிவியல் பூர்வமாக தெளிவாக நிரூபித்துள்ளன.
எனவே இந்திய மக்களால் குறைக்க முடிந்த ஒரே செலவு அவர்களது உணவாகத்தான் இருக்கிறது. பட்டினி அல்லது அரைகுறை பட்டினி என்ற நிலை வந்துவிட்டது. ஊட்டச்சத்து குறைந்ததாகவும் உணவு மாறிவிட்டது. உலகத்தில் மிகக் கடும் பட்டினியில் உள்ள 15 நாடுகளில் ஒன்று இந்தியா என்பதை ஏற்கனவே ஆய்வுகள் வெளிப்படுத்தி உள்ளன. இந்தக் கணக்கீடும் அதற்கு இசைவானதாகவே இருக்கிறது.
உடைகள், செருப்புகள், துணி வகைகள் ஆகியவற்றை வாங்குவதற்காக இந்தியர்கள் செலவிட்ட தொகையும் குறைத்து விட்டது.
இந்தியர்களில் அடி நிலையில் உள்ள மக்கள் ஒரு தனி நபருக்கு ஒரு மாதத்திற்கு அதிகபட்சமாக 1500 ரூபாய்க்கும் குறைவாகத்தான் செலவு செய்ய முடிகிறது. அதே நேரத்தில் மேல் தட்டு மக்கள் தனி நபருக்கு 10,591 செலவு செய்கிறார்கள் என்று ஆய்வு கூறுகிறது.
உயர் நிலையில் உள்ள மக்களின் வாழ்க்கைச் செலவுகளை அவர்கள் பணிபுரியும் நிறுவனங்கள் பார்த்துக் கொள்கின்றன. ஆனால் ஏழைகளுக்கு அனைத்து செலவுகளும் அவர்கள் தலையின் மீதுதான்.
நகரப் பகுதிகளில் இந்தியாவின் சராசரி தனிநபர் நுகர்வுச் செலவு 6459 ஆக இருக்கும் போது, தமிழ்நாடு அதைவிட 1171 புள்ளிகள் அதிகமாகி 7630 என்ற நிலையில் உள்ளது. அதிக நகரமயமான மாநிலங்களில் தமிழ்நாடு முதல் வரிசையில் இருக்கிறது. எனவே இங்கு ஏழைகளும் அதிக செலவு செய்தாக வேண்டும்.
அமெரிக்க அதிபர் வருகையின் போது குஜராத்தில் துணி கட்டி மறைத்தது போல, உண்மை நிலை வெளியில் தெரிந்து விடாமல் கணக்கீட்டு ஆய்வில் மாய்மாலங்களை புள்ளியியல் துறை அமைச்சகம் செய்த போதிலும், உண்மையில் மோடி ஆட்சியில் இந்தியர்கள் துன்புறுகிறார்கள் என்பதை பட்டவர்த்தனமாக இந்த அறிக்கை வெளிக்காட்டி இருக்கிறது.